Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தவைப் பயமுறுத்தும் மின்சாரக்கதிரை

பதிந்தவர்: ஈழப்பிரியா 17 January 2011

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நெருக்கடிகளை சந்திக்கும் போதெல்லாம் ஊடகங்களின் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவது வழக்கம்.

ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டு பத்து வாரங்கள் கழித்து- கடந்தவாரம் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களைத் தனியாகவும், வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகளைத் தனியாகவும் அழைத்துக் கலந்துரையாடியுள்ளார் அவர்.

பால்சோறு, அப்பம், இடியப்பம் போன்ற காலை உணவுடன் ஆரம்பித்த அவரது சந்திப்பு மிகவும் கடுமையானதொன்றாகவே இருந்துள்ளது.

தமிழ் ஊடகங்கள் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் இந்தச் சந்திப்பில் புரிந்து கொள்ள முடிந்ததாக அதில் கலந்து கொண்டவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

- தமிழ் ஊடகங்கள் இனவாதத்தைத் துண்டுகின்றன.

- அரசியல் நலனுக்காக மக்களின் ஒற்றுமையைக் குலைக்கின்றன.

- சர்வதேச அளவில் சிறிலங்காவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முனைகின்றன.

- புலிகளின் கைப்பொம்மைகளாக இருக்கின்றன.

- வெளிநாட்டு சக்திகளை ஆதரிக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன.

- யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரிப்பதாகவும் அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் பிரசாரம் செய்கின்றன.

இப்படி ஏராளமாக குற்றச்சாட்டுகளைத் தமிழ் ஊடகங்கள் மீது சுமத்தியிருந்தார் மகிந்த ராஜபக்ஸ.

இந்தச் சந்திப்பின் போது தமிழ் ஊடகங்கள் மீது மகிந்த ராஜபக்ஸ வெறுப்போடு கொட்டிய வார்த்தைகளை ஆங்கில ஊடகங்கள் ஏதும் வெளிச்சம் போட்டுக் காட்டவேயில்லை.

தேசியகீதம் விவகாரம், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகள், சிங்களக் குடியேற்றங்கள் என்பன போன்ற தமிழருக்கு எதிரான போக்குகள் குறித்து தமிழ் ஊடகங்கள் எடுத்துக் கொண்ட கரிசனையும், காட்டமான விமர்சனங்களும் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு எத்தகைய நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் ஊடகங்களில் வருகின்ற கருத்துகளை அவர் உன்னிப்பாக அவதானித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்.

மொழிபெயர்த்து அறிந்து கொள்வதில் சில தவறுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை மொழி பெயர்த்து அறிவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது தமிழ் ஊடகங்களின் மீது மகிந்த ராஜபக்ஸ கொண்டுள்ள பயத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு பக்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரத் தொனியில் கூறியுள்ள மகிந்த ராஜபக்ஸ, கடைசியில் தமிழ் ஊடகங்களின் கையில் தான் எல்லாம் இருக்கிறது என்று சரணாகதியும் அடைந்துள்ளார்.

மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை குணப்படுத்த தமிழ் ஊடகங்கள் முன்வராது போனால், பொறுப்புடன் நடந்து கொள்ளாது போனால்- நாட்டில் பகைமை உணர்வை நீக்க முடியாது என்றளவுக்கு அவர் இறங்கிப் போனார்.

தமிழ் ஊடகங்களின் பலம் என்ன என்பது இப்போது தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது.

மகிந்த ராஜபக்ஸ தமிழ் ஊடகங்களின் பலத்தைக் கண்டு மிரள்கிறார் என்றால் அது மிகப் பெரியதொரு பலம் என்றே கருத வேண்டும்.

அதேவேளை தமிழ் ஊடகங்களை அவர் இந்தச் சந்திப்பில் மறைமுகமாக மிரட்டியுள்ளார் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் இனவாதத்தைக் கிளப்புவதாக அவர் கூறியுள்ள குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானதொன்று.

இனவாதம் எங்கிருந்து எப்படி வந்தது என்பதை தெரியாமல் அவர் பேசுகிறார்.

எப்போதும் தன் முதுகு தனக்குத் தெரிவதில்லை.

அது மகிந்தவுக்கும் சரி தமிழ் ஊடகங்களுக்கும் சரி பொருத்தமே.

தமிழ் ஊடகங்கள் இனவாதத்தைக் கையில் எடுக்கவில்லை என்று யாரேனும் கூறினால் அது தவறு.

அவர்கள் அதைக் கையில் எடுக்க வைத்தது யார்?

சிங்களப் பேரினவாதம் காலம்காலமாக தமிழர்களை விழுங்கியதன் விளைவே இது.

தமிழ் மக்கள் இப்போது எதையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலையை உருவாக்கியது அவர்கள் தான்.

தமிழ்மக்களின் காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக ஊடகங்கள் இனவாதத்தைக் கிளறுவதாகக் கூறும் மகிந்த ராஜபக்ஸ- சிங்களப் பேரினவாதத்தினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு தனது பக்கத்தில் எதையுமே செய்யவில்லை.

சிங்களப் பேரினவாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட அச்சங்களில் இருந்து அவர்களை விடுவிக்கவில்லை.

நிலங்களை விழுங்கும், குடியேற்றங்களை நிறுவும், மொழியை அழிக்கும், இனஅழிப்பை நிகழ்த்தும் பயங்கரங்களை சிங்களப் பேரினவாதம் கைவிட்டு விட்டது என்று அவர்களால் நம்ப வைக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட அச்சங்கள் நீடிக்கும் நிலையில் அரசின் எந்தவொரு நகர்வையும் தமிழர்கள் முன்னெச்சரிக்கையுடன் பார்ப்பது தான் அவர்களுக்கு இனவாதமாகத் தெரிகிறது.

காலம்காலமாக தமிழர்களுக்கு கிடைத்த பாடங்களின் விளைவாகத் தோன்றும் முன்னெச்சரிக்கை உணர்வே அது.

இதற்கு இனவாத முத்திரை குத்திக் கொள்கிறது மகிந்தவின் அரசு.

இப்போதும் கூட வடக்கு,கிழக்கு தமிழரின் தாயகம் இல்லை என்றும் அவர்கள் வந்தேறு குடிகள் என்றும் சிங்களப் பேரினவாதிகள் கொடுக்கின்ற பேட்டிகளும் சாட்சியங்களும் மகிந்தவின் கண்களுக்குத் தெரியவில்லை.

அவர்களை அடக்கத் திராணியற்ற மகிந்த ராஜபக்ஸ தமிழ் ஊடகங்கள் தான் இனவாதத்தைக் கிளப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழரின் இனவாதம் என்பது இப்போது இருக்கின்ற மிச்சத்தையும் பறிகொடுத்து விடக் கூடாதென்ற எண்ணத்தில் வந்ததே தவிர வேறொன்றுமில்லை.

அதேவேளை தமிழ் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைக்கவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தனக்கு வலு இருப்பதையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை.

ஆனால் அவர் சர்வதேச அழுத்தங்களைக் கண்டு அச்சம் கொண்டுள்ளார்.

தமிழ் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்- சிறிலங்கா அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அழித்து விட்டது, போர்க்குற்றங்களைச் மேற்கொள்கிறது என்றெல்லாம் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் சர்வதேச ஊடகங்களும் அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்புமாம்.

தங்களை மின்சாரக் கதிரையில் அமர்த்தி தண்டிக்கும் முயற்சிகளில் அவை இறங்கி விடும் என்று மகிந்த அச்சம் வெளியிட்டுள்ளார்.

இங்கே ஒரு விடயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு இப்போது அடிக்கடி மின்சாரக் கதிரை தான் கனவில் வருகிறது போலும்.

ஜனாதிபதி ஆட்சிக் கதிரை பற்றியே இதுவரை சதா கனவு கண்ட அவருக்கு இப்போது மின்சாரக் கதிரை கனவில் வரத் தொடங்கிருப்பது துர்க்குறியே.

அண்மையில் தென்னிலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலும் அவர் மின்சாரக்கதிரையில் தன்னை ஏற்ற பலரும் முயற்சிப்பதாக கூறியிருந்தார்.

ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில் மீண்டும் அதைக் கூறியுள்ளார்.

இதிலிருந்து மகிந்தவுக்கு மின்சாரக் கதிரை பற்றிய அச்சம் தொற்றிக் கொண்டு விட்டது என்பது உறுதியாகியுள்ளது.

மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்.

மகிந்தவின் மடியில் பாவங்களின் சுமை அதிகமாக இருப்பதால் தான் அவருக்கு இந்தப் பயம் வந்திருக்கிறது.

ஊடகங்களின் பலத்தை அவர் இப்போது புரிந்து கொண்டுள்ளார்.

ஊடகங்களின் வாய்களைக் கிளறி- அவற்றுடன் பகைமையை வளர்த்துக் கொள்வது தனக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று நடுங்கத் தொடங்கியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ இரண்டாவது பதவிக்காலத்தை சுலபமாக கருதியிருந்தார்.

ஆனால் அதுவே அவருக்கு முள்படுக்கை போல அமைந்து விட்டது.

இந்தப் பத்து வாரங்களிலேயே அவர் இந்தளவுக்கு நொந்து போயிருக்கிறார் என்றால் இன்றும் எத்தனை வாரங்களை - மாதங்களை - வருடங்களையெல்லாம் அவர் எப்படித் தான் கழிக்கப் போகிறாரோ தெரியவில்லை.

முகிலன்
ஈழநேசன்

2 Responses to மகிந்தவைப் பயமுறுத்தும் மின்சாரக்கதிரை

  1. இனவாதத்தை வளர்த்ததில் சிங்கள ஊடகங்களின் பங்களிப்புக்களை மறந்து பேசுகிறார் திருவாளர் கொலவெறியன். தமிழருக்கு ஏற்படும் துன்ப துயரங்களை எடுத்துரைத்தால் அது இனவாதமாகத் தெரிகின்றது ஐயாவுக்கு. எது எப்படியோ மின்சாரக் கனவை நனவாக்குவது ஒட்டு மொத்த தமிழரின் கையிலே உள்ளது. யாழ்ப்பாணம் சென்று ஒரு சில ஒட்டுண்ணித் தமிழருடன் கொண்டாட்டங்களை நடத்திவிட்டு உலகிற்கு தனது கொலைச் செயல்களை மறைப்பதற்கு முயற்சிகளை முனைப்புடன் செயல் படுத்துகிறார் பக்க்ஷே. அங்கே கிழக்கில் வெள்ளத்தில மிதக்கும் மக்களை சென்று பார்த்து அவர்களின் தேவைகளை அறியமுயலாது யாழ் வந்ததன் நோக்கம் என்ன? யாரை ஏமாற்ற.

     
  2. nee seiradha dhane solragada loosu payale

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com