Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அரசாங்கத்தின் அவசர அழைப்பொன்றுக்கிணங்கவே மஹிந்த அங்கு பயணமாகியுள்ளதாக தற்போது வெளிவரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

அது தொடர்பாக தமிழ்வின் மேற்கொண்ட சுயாதீன செய்தித் தேடல்களின் போது வெளிப்படுத்தப்படாத உத்தியோகப்பற்றற்ற பயணமொன்றையே மஹிந்த மேற்கொண்டுள்ளார் என்பதற்குப் போதுமான தகவல்களைத் திரட்ட முடிந்துள்ளது.

ஜனாதிபதியின் பயணம் தனிப்பட்டதாக இருப்பின் அவரது செயலாளர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் அவருடன் செல்வதற்கான தேவையேதுமில்லை. ஆனால் ஜனாதிபதி அவர்கள் இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

அதற்கடுத்ததாக ஜனாதிபதியின் பாரியார் கூட ஆரம்பத்தில் இதுபற்றி அறிந்திருக்காத நிலையில் வெளிநாட்டில் இருந்துள்ளார். ஜனாதிபதியின் பயணம் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டதன் காரணமாக அவர் துபாயில் வைத்தே ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டுள்ளார். நாமலும் அங்கு வைத்தே ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்துள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் ஹுஸ்டன் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அவர்களை வரவேற்கவென ஜனாதிபதியின் எந்தவொரு உறவினர், நண்பர்களும் வரவில்லை. தனிப்பட்ட பயணமாயின் அவர்கள் வரவேற்க வருகை தந்திருப்பர். அதற்கு மேலதிகமாக அமெரிக்காவில் தூதராக இருக்கும் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான ஜாலிய விக்கிரமசூரிய கூட தற்போது மெக்சிக்கோவில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதே நேரம் ஜனாதிபதி ஹுஸ்டனில் தரையிறங்கிய பின்னர், அங்கிருக்கும் பல்கலைக்கழகமொன்றில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் திடீரென வருகை தந்துள்ளார்.

அதன் மூலம் ரொபர்ட் பிளேக் மற்றும் ஜனாதிபதி இடையில் வெளிப்படுத்தப்படாத நேரடிச் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் இடம்பெறுவதற்கான வாய்ப்பு தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ரொபர்ட் முன்பு இலங்கையில் அமெரிக்கத் தூதராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அது மாத்திரமன்றி டெக்ஸாஸின் ஹுஸ்டன் நகர பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ரொபர்ட் பிளேக், இலங்கை அரசாங்கம் பற்றிப் புகழ்ந்துரைத்துள்ளதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னோர் அம்சமாகும்.

இலங்கையின் பொருளாதார வேகம் பாராட்டத்தக்க அளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்குச் சமாந்தரமாக புனருத்தாரண வேலைகளையும் துரிதமாக முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிடையே நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள ராஜாங்க செயலாளர் பிலிப் ஜே. குரொவ்லி இவ்விடயம் தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நழுவிச் செல்லும் போக்கில் பதிலளித்திருந்தார்.

ரொபர்ட் பிளேக் பல்கலைக்கழகமொன்றில் உரையாற்றுவதற்கே டெக்ஸாஸ் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அங்கு வைத்து ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் உத்தியோகபூர்வமான சந்திப்பு ஏதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வதற்கான வாய்ப்பை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார். அது மாத்திரமன்றி இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான விடயங்களை வைத்துப் பார்க்கும் போது ஜனாதிபதி அவசர அழைப்பொன்றின் பிரகாரமே அமெரிக்கா சென்றுள்ளது உறுதிப்படுத்தப்படுகின்றது.

அதற்கான அழைப்பு முன்னை நாள் ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆமிடேஜ் மூலமாகவே விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அமெரிக்க செல்ல மூன்று நாட்களுக்கு முன்னதாக அவர் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியிருந்தார்.

ஆயினும் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் வரை அச்சந்திப்பு இரகசியமானதாக வைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அரசாங்கம் எதையோ மறைக்க முயன்றுள்ளது தெளிவாகப் புலனாகின்றது. அத்துடன் தற்போது பதவியில் இல்லாத அவரது இலங்கை விஜயம், அவருக்கு முக்கியமளித்து ஜனாதிபதி சந்தித்தமை ஆகியன வழக்கத்துக்கு மாறான அதேநேரம் சந்தேகத்துக்குரிய விடயங்களாக இருக்கின்றது.

அதற்கு மேலாக ரிச்சர்ட் ஆமிடேஜ் என்பது அமெரிக்க உளவுச் சேவையான சி... வின் ஒரு முக்கிய புள்ளி என்பது ஒன்றே இந்த விடயத்தில் ஏதோ மறைமுக நிகழ்ச்சி நிரல் இருப்பதைப் புலப்படுத்தப் போதுமானது.

ஆகவே ஏதோ ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளமை எமது செய்தித் தேடலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்பதையும் நாம் விரைவில் வெளிக் கொண்டு வருவோம்.

0 Responses to அமெரிக்காவின் அவசர அழைப்பிற்கிணங்கவே மஹிந்த பயணம்: வெளிவரும் இரகசியங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com