Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் மன்மோகன் சிங்கை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஈழப் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பிரமதருடன், சூடான விவாதத்தில் ஈடுபட்டார் வைகோ. வைகோவின் கொள்கைப் பிடிப்பை இந்த சந்திப்பின்போது பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இது தொடர்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வை கோபாலசாமி, டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நேற்று இலங்கையில் கைதானதாக கூறப்பட்ட தமிழக சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணி பத்திரமாக தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விட்டதாக பிரதமர், வைகோவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட வைகோ இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யவேண்டாம் என்று தாம் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்படுத்தாமல் இந்தியா ஆயுத உதவிகளை செய்ததாக குற்றம் சுமத்தினார்.

இதன் காரணமாக இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்று குவித்து விட்டது. இப்போது, செஞ்சீனம் அங்கே வலுவாகக் கால் பதித்து விட்டது என்று வைகோ குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யவுள்ளன. இதன்போது இந்த சிங்கள அரசாங்கமும், இந்தியாவுக்கு எதிராகவே செயற்படப்போகிறது. அப்போதுதான் இந்திய அரசு இதை உணரும் என வைகோ சுட்டிக்காட்டினார்

ஈழத்தமிழர்கள் இலங்கையில் வலுவாக இருந்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் இரத்த பந்த உறவு உள்ளதால், இந்தியாவுக்குத்தான் பக்கபலமாக இருப்பார்கள்.

இப்போது, தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை வந்து சுடுவதும், கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டதுஎன வைகோ பிரதமரிடம் கூறியுள்ளார்.

இதன் போது தமிழக மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்களே?’ என பிரதமர் கூற அதற்கு பதிலளித்த வைகோ, குஜராத்தி மீனவர்களும் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே சென்று விடுகிறார்கள் என வைகோ குறிப்பிட்டார். ஆனால், ஒருமுறையாவது குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை தாக்கியோ அல்லது துப்பாக்கிச்சூட்டையோ நடத்தவில்லை என வைகோ சுட்டிக்காட்டினார்.

1980 ஆம் ஆண்டு முதல், இதுவரை ஆயிரம் தடவைகளுக்கும் மேல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி இருக்கிறது. 500 இந்திய மீனவர்கள் வரையிலும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

97 ஆம் ஆண்டு, ஆறுகாட்டுத்துறை என்ற இடத்தில், இந்திய கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையின் உலங்கு ஊர்தி ஒன்று தாழப் பறந்து வந்து குண்டு வீசியதில் ஆறு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இது தொடர்பான முறைப்பாட்டை கூட பெற்றுக்கொள்ளவில்லை என்று வைகோ குறிப்பிட்டார்.

இந்தியக் கடற்படையோ, கடலோரக் காவல்படையோ, இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுக்கவோ, தமிழக மீனவர்களைக் காக்கவோ, ஒருதடவையாவது முயற்சிக்கவில்லை என்றும் வைகோ குற்றம் சுமத்தினார்.

இலங்கை மறுப்பதாக கூறிய மேனன்!

அப்போது அங்கே இருந்த சிவசங்கர மேனன், ‘இப்போது கடைசியாக நடந்த துப்பாக்கிச் சூட்டை, நாங்கள் நடத்தவில்லை என்று இலங்கை அரசு மறுக்கிறதே?’ என்றார்.

என்றைக்குத்தான் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்? எப்போதுமே அவர்கள் பழியை வேறு யார் மீதாவதுதான் போடுகிறார்கள். சுடுவது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்திய அரசு அதைக் கண்டிப்பதே இல்லை. அதனால்தான், அவர்கள் இப்படித் திமிரோடு பொய் சொல்லுகிறார்கள்என்றார் வைகோ.

மேலும், பிரதமர் அவர்களே, ‘நீங்கள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இனி, தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்என்றார்.

இந்தநிலையில் இலங்கை அரசுக்கு இது விடயத்தில் எச்சரிக்கை செய்ய வேண்டும். இனி, தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்என வைகோ கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட பிரதம மந்திரி மன்மோகன் சிங், இதை ஒரு கடுமையான பிரச்சினையாகக் கருதி, தாம் இலங்கை அரசோடு பேச்சு நடத்தவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழக மீனவர்கள் மீது எதிர்வரும் காலங்களில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாது என்று கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி. சர்மா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் எஸ்.பி. சர்மா, அளித்த செவ்வியில், இனிமேல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தாது என குறிப்பிட்டுள்ளார். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வைகோ - மன்மோகன் சந்திப்பு! மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சூடான விவாதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com