Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை சர்வதேசம் நிராகரித்தால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை சர்வதேச விசாரணைக்கு நிச்சயம் முகங்கொடுக்க வேண்டிவரும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை உடனடியாக வழங்குவதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளிலும் இருந்து இலங்கை அரசால் தப்பிக்கொள்ள முடியும் என்று அக்கட்சி கூறியது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட .தே.கட்சியின் எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

யுத்தம் முடிந்ததும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துமாறு சர்வதேசம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்தது.

அரசாங்கம், தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைத்து இதன்மூலம் சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கை போன்றவை நிறைவேறும் என்று கூறியது.

ஆனால், இந்த ஆணைக்குழுவுக்கு எதுவித அதிகாரமுமில்லை. காணாமற் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் போன்றோரைக் கண்டுபிடிக்க இந்த ஆணைக்குழு விசாரணை நடத்துவதில்லை. ஊர்ஊராகச் சென்று மக்களின் சாட்சியங்களை மாத்திரம் பதிவுசெய்கின்றது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது. அது எப்படி முறிந்தது என்றே அந்த ஆணைக்குழு விசாரணை செய்கிறது.

2005 ல் இருந்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் எவையும் நடத்தப்படவில்லை. இலங்கை மக்களை ஏமாற்றுவதைப் போல் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒரு கண்துடைப்பாகும் என்று ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.

சர்வதேசம் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரித்தால் இலங்கை அரசு நிச்சயம் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். எதிர்காலத்தில் இலங்கை அரசு சர்வதேசத்தை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது.

முழு உலகமுமே சர்வதேச சட்டத்துக்குக் கட்டுப்பட்டுள்ளது. அதை மீறி எந்த நாட்டாலும் செயற்பட முடியாது.

ஒரு நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது அந்த நாடு அதுபற்றி விசாரணை நடத்தவேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அந்த நாட்டின் மீது சர்வதேசத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

நாம் கூறி வருவதுபோல் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கினால் இலங்கை அரசால் இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளிலும் இருந்து தப்பிக்கொள்ள முடியும். என்றார்.

அத்துடன், ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்களுக்கு மேற்கத்தைய நாடுகள் வீசா அனுமதி வழங்காத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட போரின் போது எந்தவொரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என அரசாங்கம் பெய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு பொய் சொல்ல வேண்டுமாயின் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பொய்யுரைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசு நிச்சயம் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்கவேண்டி வரும்: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com