Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய நிரந்தர தீர்வு ஏற்படும் வரை எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத எமது ஜனநாயக அரசியல் போராட்டம் தொடரும்' இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

அண்மையில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டபோது அவர் கூறியவை வருமாறு:

நாடாளுமன்ற அமர்வுகளுக்காக நாங்கள் கடந்த 7ம் திகதி மதியம் ஒரு மணிக்கு கிளிநொச்சியில் உள்ள எமது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டோம். சுமார் 4 மணியளவில் வவுனியாவிற்கு வந்து அங்கிருந்து அப்படியே நேரடியாக அநுராதபுரம் புத்தளம் பகுதி வழியாக வந்துகொண்டிருந்தோம்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுக்குளம பகுதியில் வைத்து வாகனம் ஒன்று எங்களைக் கடந்துகொண்டு சென்றது. அந்த வாகனத்தில் இருந்து திடீரென துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதில் வாகனத்தின் முன்னால் உள்ள கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு தோட்டாவொன்று சாரதியை நோக்கி வர அவர் தெய்வாதீனமாக தப்பியதுடன். அவர் மிகவும் சாதுரியமாக வாகனத்தை வேறு திசைக்கு திருப்பினார்.

நான் டிரைவர் சீட்டிற்கு நேர் ஆசனத்தில் என்னுடைய ஆசனத்தை பணித்து தூங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய வாகனத்தில் சாரதியுடன் சேர்த்து 4 பேர் இருந்தனர். திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதும் நான் விழித்துக் கொண்டேன். இதேவேளை இரண்டு கைக்குண்டுகளை வாகனத்திற்கு கீழ் பகுதியில் அந்த ஆயுதக் கும்பல் போட்டனர்.

அந்த இடத்திலிருந்து வாகனத்தை சாரதி வேகமாக செலுத்தி இரண்டு மூன்று செக்கன்களில் பாரிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டது. சாரதியின் சாதுரியத்தால் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததால் அந்த கைக்குண்டில் இருந்து நானும் என்னுடைய மெய்ப் பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேரும் தப்பினோம்.

நான் வாகனத்தின் பின்புறமாக பார்த்தேன் 3 பேர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டு பின்தொடர்ந்தே வந்துகொண்டிருந்தனர்.

அன்று என்னுடன் இருந்தது ஒரு மெய்ப் பாதுகாவலர் மாத்திரமே. அவர் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.

அவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் என்னுடைய வாகனத்தின் பின்புறம் உள்ள கண்ணாடியும் முற்றாக சேதமடைந்தது. மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கிப் பிரயோகம், சாரதி வாகனத்தை மிக வேகமாக செலுத்தியதால் அவர்களது வேகம் குறையத் தொடங்கியது.

எங்களுடைய வாகனத்தின் டயர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் வாகனத்தின் இடது பக்கத்தின் பின் டயரில் காற்று போய்விட்டது. காற்று இல்லாமல் றிம்மில் சுமார் 9 கிலோ மீற்றர் வரை வாகனம் செலுத்தப்பட்ட டயர் ஒரு கட்டத்தில் வாகனம் ஓட முடியாத ஒரு நிலையில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது.

முறிப்பாகம என்ற இடத்திலேயே நிறுத்தினோம். அந்த இடத்திலிருந்த சிங்கள வீடொன்றுக்குச் சென்றோம். அங்கு போனவுடன் என்னுடைய மெய்ப் பாதுகாவலர் அவர்களுக்கு விஷயத்தை விளங்கப்படுத்தி நடத்தவற்றைக் கூறினார்.

வேறு ஒருவர் என்றால் அந்த இடத்தில் எங்களை வீட்டுக்குள் அழைத்திருக்கவோ எங்களுடன் கதைக்கவோ மாட்டார்கள். ஆனால் அதற்கு மாறாக அந்த சிங்கள குடும்பம் எங்களை உள்ளே அழைத்து எங்களை பராமரித்தார்கள். அத்தோடு எங்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்தார்கள்.

அங்கிருந்து நான் உடனடியாக எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தினேன். அவர் அந்தச் சமயம் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதனால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து எமது மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு கதைத்தேன். நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளோம். எங்கள் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யும்படி கூறினேன். அதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாங்களும் 119க்கு தொடர்பு கொண்டோம். எம்மால் அழைப்பினை ஏற்படுத்த முடியவில்லை.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொலிஸுக்கு அறிவிக்க 6.30 மணிக்கு நொச்சியாகம பொலிஸார் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பொலிஸார் வருவதற்குள் எங்களுடைய வாகனத்தின் டயரையும் மாற்றி வாகனம் வழமை நிலையில் இருந்தது. அங்கு வந்த பொலிஸார் எங்களையும் எமது வாகனத்தையும் பாதுகாப்பாக பொலிஸுக்கு கொண்டு சென்றனர். பொலிஸில் விளக்கங்கள் மற்றும் விசாரணைகளின் பின்னர் இரவு 10.30க்கு நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு கொழும்பை வந்தடைந்தோம்.

கேள்வி - இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

கடந்த 8 ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளுக்கு நாடாளுமன்றம் சென்றேன். அங்கு சென்ற நான் எங்களுடைய கட்சியின் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோருடன் கலந்துரையாடியதன் பின்னர் சமல் ராஜபக்சவை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்கப்படுத்தினேன்.

அப்போது அன்றைய தினம் முன் பிரேரணை உரையொன்றை நிகழ்த்தும்படி சபாநாயகர் என்னிடம் கூறினார். அத்தோடு இந்த நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முன்பிரேரணை உரையொன்றை நிகழ்த்தினேன்.

அந்த உரை வருமாறு:

யுத்தம் நிறைவுற்று சமாதானம் மலர்ந்துள்ளதாக தெரிவிக்கின்ற கால கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்மை தொடர்பில் சபாநாயகர் கவனத்திற் கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு மணியளவில் புறப்பட்டேன். சுமார் 4 மணியளவில் வவுனியா வந்தடைந்தேன். இதனை தொடர்ந்து வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் வைத்து வாகன இலக்க தகடு இல்லாத ஒரு வாகனம் எமது வாகனத்தை முந்தி சென்றது. இவ்வாறு முந்தி சென்ற வாகனத்திலிருந்து சற்று நேரத்தில் நாம் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைக்குண்டுகளும் எறியப்பட்டன.

இதனால் நாம் பயணித்த வாகனம் பலத்து சேதமடைந்து பயணத்திற்கு இடையூறாகக் காணப்பட்டது. எனினும் வாகனம் சேதமடைந்த நிலையில் சுமார் 9 கிலோமீற்றர் தூரம் வரை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பயணித்தோம். வாகனம் சேதற்ற நிலையில் பயணித்த எமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.. சுமத்திரன் ஆகியோர் பொலிஸாரிடம் தொடர்புகளை ஏற்படுத்தினர்.

அதன் பின்னரே எமது பாதுகாப்பு உறுதி படுத்தப்பட்டமையை சபாநாயகராகிய உங்களின் கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டடைப்பு உறுப்பினர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. தமிழ் மக்களுக்கு பாதுகாப்பளிப்பதாக கூறும் அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பளிப்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கமைய தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பில்லாத பட்சத்தில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு எங்கிருந்து கிடைக்கும்.

இதேபோன்று, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சிவநேசன் போன்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் படுகொலை தொடர்பாகவும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அத்துடன் தாம் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு எனது பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும்' என்பதாகும்.

கேள்வி - தொடர்ந்து உங்கள் நடவடிக்கை எவ்வாறு இருக்கும்? தற்போது நீங்கள் வழமைக்கு வந்துவிட்டீர்களா?

இந்த தாக்குதலின் பின்னர் நான் என்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க அச்சப்படவில்லை. நான் வழமை போன்று என்னுடைய செயற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

எனினும் இதுவரை எனக்குப் பாதுகாப்பு தரப்படவில்லை. இரண்டு மெய்ப் பாதுகாப்பாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய பாதுகாப்புக்கு இரண்டு பேர் போதாது. அதனை 4 பேராக்கும்படி கேட்டேன்.

இதுதொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.. சுமந்திரன், .சரவணபவன் மற்றும் நான் உட்பட எமது கூட்டமைப்பு குழுவினர் 9 ம் திகதி சபாநாயகருடைய அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடினோம்.

இந்தக் கலந்துரையாடலின்போது பொலிஸ் மா அதிபர் கமகே, மெய்ப் பாதுகாப்பு நடவடிக்கைகக்கு பொறுப்பான பணிப்பாளர் குமாரசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது. அதனை மேலும் பலப்படுத்துமாறும் அதற்கான ஏற்பாடு வசதிகளை செய்து தரும்படியும் கோரிக்கை விடுத்தோம். அதற்கு பொலிஸ் மா அதிபர் கூறிய பதில் அவ்வாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்க முடியாது.

உங்களுக்கு இரண்டு மெய்ப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே வழங்கப்படும். அவர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேரும் விடுமுறைக்குச் செல்வார்களானால் அவர்களுக்கு மாற்றீடாக வேறு ஒருவரோ அல்லது இரண்டு பேரோ வழங்கப்படும். எனக் கூறினார்.

அன்றைய தினமே என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைத் தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றையும் பொலிஸ் மா அதிபர் சபாநாயகரிடம் கையளித்தார். அந்த அறிக்கையில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன, யார் சூத்திரதாரிகள் என்பது குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. என்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அதிகரிக்கவில்லையென்றாலும் என்னுடைய வழமையான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இன்றும் நான் கிளிநொச்சியில் இருக்கிறேன். கட்சியின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து இதுதொடர்பான விளக்கங்களையும், எதிர்கால ஜனநாயக ரீதியான உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பான விடயங்கள் மற்றும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பாக நான் கலந்துரையாடினேன். நூற்றுக்கு நூறு வீதம் ஜனநாயகத்தையே நம்பி, அதன்மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது கவலையளிக்காது.

வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்யக் கூடிய தீர்வுக்காக அவர்கள் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை அங்கீகக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான நிரந்தர தீர்வு வழங்கப்படும் வரை எங்களுடைய ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டம் தொடரும்.

கேள்வி - பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன? அது உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

திருப்தியளித்திருக்கிறதா என்று என்னால் சொல்ல முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், சந்திரநேரு ஆகியோருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டிருந்தார்கள். ரவி ராஜூக்கு நான்கு மெய் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பரராஜசிங்கத்திற்கும் நான்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள். ஆனாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களுக்கும் பாதுகாப்பு பிரச்சினை இருந்தது. ஆனால் அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

ஜனநாயகத்திற்காகவும் தமிழர்களுடைய உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பாரிய உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம். இவ்வாறு இருக்க, அரசாங்கம் பெரும் உயிர் அச்சுறுத்தல் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேற்குறிப்பிட்டிருந்தது போல் எனக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு மெய் பாதுகாவலர்கள் மாத்திரமே. ஆனால் அதைவிட எனக்கு பாதுகாப்பு தேவையாக உள்ள போதிலும் அதனை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசாங்கம் எனக்கு இந்தவேளையில் வழங்கியுள்ள பாதுகாப்பு எனக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்பதை நான் வெளிப்படையாகவே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி - தீபனுடைய உறவினரா? அதனால் தான் இந்த தாக்குதல் உங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

தீபன் என்பவர் என்னுடைய தூரத்து உறவு மைத்துனன். அத்தோடு அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒரு போராளி. அந்த அமைப்பில் இருந்து அவர் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பது பழைய விடயம். ஆனால் அவரை இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இணைத்து முடிச்சு போடுவது ஏற்க முடியாத ஒரு விடயமாகும். என்னுடைய குடும்பத்தில் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வீரச்சாவு அடைந்ததற்காக நான் ஜனநாயக ரீதியான அரசியலில் பிரவேசிக்க முடியாதா? அப்படியென்றால் எனக்கு ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டத்தில் ஈடுபட முடியாதா? அப்படியானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த . நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண். அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கூட. அவர் ஜனநாயக போராட்டத்தை நிலைநாட்டுவதற்காக புலிகள் அமைப்பில் இணைந்து செயற்படவில்லையா? இதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறவரவில்லை.

கடந்த தசாப்தங்களில் மக்களுடைய உரிமைகளை அரசாங்கம் நசுக்கி கீழ்ப்படுத்தவும், அதனை ஆயுதங்களால் அடக்கி ஆளவும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இலங்கையில் ஆயுதப் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சாத்வீக மற்றும் அகிம்சை வழிப் போராட்டங்களை மேற்கொண்ட போது அதனை ஆயுதங்கள் மூலம் அரசாங்கம் அடக்க முற்பட்டபோது இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லையென ஆயுதப் போராட்டங்களை மேற்கொள்ள முற்பட்டனர். இப்பொழுதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைக் கொடுக்காது இராணுவத்தைக் கொண்டு ஆயுதங்களால் அதனை அடக்கி ஆள அரசாங்கம் முயற்சிக்கிறது.

வடக்கில் தற்போது இராணுவத்தினர் குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அவர்களுக்கே அங்கு முன்னுரிமை. அவர்களிடம் கேட்டால் சுற்றுநிரூபம் மூலம் எமக்கு இந்த நிவாரணங்களை வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். இப்படியான காலத்தில் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்திப் போராடியது பிழை என்று கூற முடியாது.

அத்தோடு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் நான் தவறு என்று கூற மாட்டேன். என்னுடைய மைத்துனர் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி என்பதற்காக என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை திசை திருப்பப் பார்ப்பதை சோடிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையாகவே பார்க்கிறேன்.

கேள்வி - இந்தத் தாக்குதல் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது. அது என்ன அரசியல் நோக்கம்?

கிளிநொச்சி மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக அரசியல் ரீதியான தலைமைத்துவம் இருக்கவில்லை. நாங்கள் அந்த தலைமைத்துவத்தை எடுத்து அதனை நேர்த்தியாக கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுக்க முடியவில்லை.

அதனால் என்மீது தனிப்பட்ட அரசியல் கோபம் உள்ளவர்களே இதனைச் செய்திருக்கலாம். இதுவரை காலம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த தற்போது இருக்கின்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்காதிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்ட எடுக்கும் முயற்சியைப் பார்த்து பொறுக்க முடியாத அரச தரப்பிற்கு கையாட்களாக வேலை பார்க்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம்.

இவ்வாறான விஷமிகளின் இருப்புக்கள் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதுள்ளமை இந்தத் தாக்குதல் மூலம் தெரிய வருகிறது. எது எவ்வாறு இருப்பினும் இந்தத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும் சரி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலானது அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இடம்பெற்றிருக்கிறது. அரசாங்கத்தின் உதவியுடன் இல்லாமல் இவ்வாறான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருக்க முடியாது. இலக்கத் தகடு இல்லாத வாகனத்தில் பட்டப்பகலில் வந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு எனக்கு யாருடனும் தனிப்பட்ட தகராறோ அல்லது தொழில் ரீதியான தகராறுகளோ கிடையாது.

இந்தத் தாக்குதலுக்கான பொறுப்பை நூற்றுக்கு நூறு வீதம் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். குறுகிய அரசியல் இலாபத்திற்காக தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூண்டோடு அழித்துப் போடும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி என்றே கூறவேண்டும். தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது இவ்வாறான, தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்கள் ஏற்கனவே தாக்குதல் மேற்கொண்டு அவர்களது குரல்களை மேலோங்கவிடாது தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்யக் கூடிய தீர்வுக்காக அவர்கள் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான நிரந்தர தீர்வு வழங்கப்படும் வரை எங்களுடைய ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டம் தொடரும்.

நன்றி- வீரகேசரி

0 Responses to அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத ஜனநாயக அரசியல் தொடரும்: சிறிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com