Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஏழாம் திகதி அநுராதபுரத்தில் வைத்து .தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீது திட்டமிட்டமுறையில், அவரின் உயிரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. சிங்களப் பேரினவாதத்தின், இந்த இனவிரோத, சனநாயகவிரோத பயங்கரவாதச் செயலை பிரான்ஸ் தமிழர் நடுவம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது தொடர்பாக பிரான்ஸ் தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீதான படுகொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! தமிழ் மக்களின் நிலை குறித்து சர்வதேசத்தின் தீவிர செயற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் எவராக இருந்தாலும், பௌத்த சிங்களப் பேரினவாதம் ஆட்சிசெய்யும் சிறீல்காவில், கேள்வி நியாயங்களுக்கு அப்பால் வேட்டையாடப்படுவர் என்ற அபாயகரமான செய்தி, மீளவும் மீளவும் வலியுறுத்தப்படுகின்றது.

தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்டு, அம்மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராசசிங்கம், நடராஜா ரவிராஜ், கிட்டினன் சிவநேசன் ஆகிய மூவரும் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த காரணத்திற்காக ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில், கடந்த ஏழாம் திகதி, அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீது திட்டமிட்டமுறையில், அவரின் உயிரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து, அவர் அதிஸ்ட்ட வசமாக உயிர் தப்பியுள்ளார்.

சிங்களப் பேரினவாதத்தின், இந்த இனவிரோத, சனநாயகவிரோத பயங்கரவாதச் செயலை பிரான்ஸ் தமிழர் நடுவம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

தமிழ் மக்களின் சுதந்திரமான நடமாட்டம் குறித்தும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் குறித்தும், சிறீலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ்ச அடிக்கடி தெரிவித்துவருகின்றபோதும், நடைமுறையில், மோசமான இராணுவ பிடிக்குள், வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் ராஜபக்ஸ்சவின் பேச்சுக்கு நேர்விரோதமான கொடூரமான அனுபவங்களையே எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக் குரலை முற்றாக நசுக்கி ஒடுக்கும் கைங்கரியங்களே, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மீதான தொடர்ச்சியான கொலைகள் கொலை முயற்சிகள், அச்சுறுத்தல்கள் என்பதில் சந்தேகமில்லை.

சிறீலங்கா அரசு மீதான சர்வதேசத்தின் அதிருப்திகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், கண்டனங்கள் என்பனவற்றை, துச்சமாக மதித்து, சிறீலங்கா தன்போக்கில் செயற்பட்டுவருகின்றது என்பது அதன் செயற்பாடுகளில் வெளிப்பட்டு நிற்கின்றது.

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டின் அமர்வுகளின்போது, சிறீலங்கா மீதான குற்றச்hட்டுக்களை, மனித உரிமை அமைப்புக்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோதே, மறுபுறத்தே சிறீலங்காவில் தமிழ் மக்களின் பிரதிநிதியொருவரின் உயிரைப் பறித்தெடுக்கின்ற முயற்சியும் நடந்தேறியிருக்கின்றது.

சிறீலங்கா அரசு மீதான சர்வதேச கண்டனங்கள், குற்றச்சாட்டுக்கள், அதிருப்திகள் சிறீலங்கா அரசை, ஒரு நேரிய பாதைக்கு இட்டுச்சென்று, மனித உரிமைகளைப் பேணவும், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணவும், தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், மனித குலத்துக்கு உண்டான அனைத்து உரிமைகளையும் பெற்று வாழவழிவகை செய்யும் தீர்வை ஏற்படுத்தும் நிலைக்கும் இட்டுச்செல்லப்போவதில்லை.

இவறை ஏற்படுத்திக்கொள்ள, சர்வதேச சமூகத்தின், தீவர முடிவுகள், நடவடிக்கைகள் சிறீலங்கா அரசை நோக்கி இருக்கவேண்டும் என்பதே, ஒரேயொரு உபாயமாக இருக்கும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இதுவிடயத்தில், அனைத்துலக நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் தீவிர கரிசனை செலுத்தி, சிறீலங்கா அரசுக்கெதிரான, காத்திரமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என, வேண்டுகோள் விடுகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

0 Responses to சிறீதரன் மீதான படுகொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!: தமிழர் நடுவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com