தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நேற்று (23-07-2011) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
கறுப்பு ஜூலை இன அழிப்பு மற்றும், அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை மாலை 3:00 மணி முதல் 6:00 மணிவரை பொதுமக்கள் மத்தியில் வழங்கல் செய்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தொண்டர்களும், பொதுமக்களும், மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை நினைவு நிகழ்வை நடத்தியிருந்தனர்.
மக்கள் தமது உள்ளுணர்வை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புடை அணிந்து காணப்பட்டதுடன், கறுப்புக் கொடிகளையும் தாங்கி நின்று, இழந்த எம் உறவுகளுக்காக மெழுகுதிரி கொழுத்தி ஆத்ம வணக்கம் செலுத்தினர்.
இந்த நினைவு வணக்க நிகழ்வில் ‘இன அழிப்பிற்கு எதிரான தமிழர்கள் அமைப்பைச்’ சேர்ந்த ஜனனி ஜனநாயகம், பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்த இன அழிப்பின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக 1983 கறுப்பு ஜூலைப் படுகொலைகள் திகழ்கின்றன.
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச்சபையும் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி கையெழுத்துப்பெறும் போராட்டத்தை இன்று நடத்தியிருந்தது.
நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை





0 Responses to பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)