நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றுள்ளது இந்த வெற்றிக்காக உளைத்த அனைவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள், அங்குள்ள தமிழர் அமைப்புக்கள், தமிழ்நாடு உட்பட சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற ஈழ ஆதரவாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ஈழ ஆதரவு ஊடகங்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மாபெரும் அரசியல் சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனை மூன்றாவது தடவையாகவும் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
நாட்டின் தென்பகுதியில் அரச கட்சியை எவ்வாறு மக்கள் ஆதரிக்கிறார்களோ அதே போன்று வட கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிக்கிறார்கள்.
கடந்த 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற யுத்தத்தின் பிற்பாடு 2010 ல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முதலாவது தடவையாகவும் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் நேற்றைய தினம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மீண்டும் மூன்றாவது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் மாபெரும் அரசியல் சக்தி என்பதனை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
இனியாவது இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் யார் தமிழ் மக்களின் பிரதிநிதியென்பதனை.
தனது வெற்றிக்காக எத்தனையோ இராணுவ அடக்குமுறைகள், ரவுடித்தனங்களை அரசு மேற்கொண்டாலும், பல லட்சம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து பிரிக்க இந்த அரசால் முடியவில்லை மாறாக தமிழ் இன அழிப்பு செய்த இந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற இரு பிரதேச சபைகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றி பெற்றதற்காக கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளரும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் வைத்தியருமான தமிழ்நேசன் அவர்கள் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 July 2011



0 Responses to 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு