Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி ஊழல் விவகாரத்தில் முன்பு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குனர்ர் ஏ.பி.சிங்கை நேரில் சந்தித்து பாஜக குழு வலியுறுத்தியது.

வழக்கமாக சிபிஐ இயக்குனர்கள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதில்லை. ஆனால், தற்போது பாஜக எம்பி பிரகாஷ் ஜாவதேகர் தலைமையில் 5 எம்பிக்கள் அவரை சந்தித்த அனுமதி கோரியதையடுத்து, சிங் அவர்களை அனுமதித்தார்.

இதையடுத்து ஜாவேத்கர், மாயா சிங், சிவகுமார் உதாசி, பூபேந்திர யாதவ் மற்றும் ஜகத் பிரசாத் நடா ஆகியோர் அடங்கிய குழு ஏ.பி.சிங்கை இன்று சந்தித்து ஸ்பெக்ரம் லைசென்ஸ் விற்பனைக் கொள்கைக்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாகக் கூறப்படுவது தொடர்பான ஆதாரங்களை வழங்கினர்.

இந்த ஆதாரங்களை பாஜக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளது.

மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலமாக அரசுக்கு ஒட்டுமொத்தமாக எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை சிபிஐ கணக்கிட வேண்டும் என்றும் பாஜக குழு கோரியுள்ளது.

சிபிஐ இயக்குனரிடம் இந்தக் குழு கொடுத்த மனுவில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்காததற்கான காரணங்கள் ஆச்சரியமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விலையைத் நிதியமைச்சகமும், தொலைத்தொடர்பு அமைச்சகமும்தான் தீர்மானிக்க வேண்டும் என்று 2003ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனவே எந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு அமைச்சகங்களுக்கும் சமமாக பொறுப்பு உள்ளது என்றும் அதில் பாஜக கூறியுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த ஜாவேத்கர், இப்போது சிபிஐயிடம் மனு அளித்துள்ளோம். அது நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம். நடவடிக்கை ஏதும் இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.

0 Responses to ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐயிடம் பாஜக நேரில் வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com