தமிழர் தாயகப் பகுதியெங்கும் தற்போது சிங்கள இராணுவத்தினரின் பிரசன்னம் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் மூலைக்கு மூலை இராணுவத்தினர் காணப்படுகின்றனர். அங்கு ஓர் இராணுவ ஆட்சி நிலவுவதாகவே தோன்றுகின்றது. இதுதொடர்பாக பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
அங்கு இராணுவத்தினரின் அனுமதியின்றி எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது மக்கள் மிகவும் சலிப்படைந்துள்ள நிலையில், யாழ்.குடா உள்ளிட்ட வடபகுதி எங்கும் அதி உச்சமடைந்துள்ள கலாச்சார சீரழிவுகளால் மக்கள் விரக்தியடைந்துள்ள நிலையில், வட பகுதியில் இராணுவத்தினரை அகற்றி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துமாறு மலேசிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வடபகுதியில் படுகொலைகள், கொள்ளை, வன்கொடுமை, ஆட்கடத்தல்கள் என்பன சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் இராணுவத்தினரின் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் தான் காரணம் என சர்வதேசமே உணரத் தலைப்பட்டுள்ளது.
வன்னிப் பகுதியில் இராணுவ ஆட்சி நிலவுவதை படையினரே பல தடவை நிரூபித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை விடுவிக்கக் கோரியும் காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும் சிங்கள அரசாங்கத்தை வலியுறுத்தி ஓர் அமைப்பினால் கடந்தவாரம் கிளிநொச்சி நகரப் பகுதியில் ஆர்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாது தடுப்பதற்கென ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பின் இரு தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து பலர் முன்னிலையில் இழுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்கென வந்திருந்த தமிழ்த் தாய்மார் மற்றும் சிலரை பஸ்ஸில் ஏற்றி ஆர்ப்பாட்டத்தை தடுக்க இராணுவத்தினர் முயற்சித்தனர்.
கிளிநொச்சியில் முழுமையான இராணுவ ஆட்சி நிலவுவதாகவும் இங்கு ஆர்பாட்டம் செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ உயர் அதிகாரிகள் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களிடம் மிரட்டியுள்ளனர்.
ஜனநாயகத்தை ஏற்படுத்தி சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக சிங்கள அரசால் வெளி உலகுக்கு கூறப்படும் கிளிநொச்சியில் சட்டவிரோத இராணு ஆட்சியை அறிவிப்பது, ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் கருத்துவெளியிட்டுள்ளார்.
‘காணாமல் போனவர்களை விடுதலை செய்யவும், கைது செய்யப்பட்ட எமது இளைஞர்கள் இருவரை விடுதலை செய்யவும். அத்துடன் கிளிநொச்சி மற்றும் வடக்கு பகுதியில் இராணுவ ஆட்சியை இல்லாதொழித்து ஜனநாயகத்தையும் சிவில் ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்’. என்று அந்த ஏற்பாட்டாளர் உணர்வு பூர்வமாகத் தெரிவித்தார்.
இதேவேளை, பேருந்தின் பின்புற வழியால் ஏறுமாறு கூறிய ஒரேயரு காரணத்திற்காக தனியார் போக்குவரத்து பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்றும் வன்னிப் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. முழங்காவில் கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ளும் தனியார் பேருந்து, தனது வழக்கமான சேவைக்காக முழங்காவில் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ஆனைவிழுந்தான் என்ற இடத்தில் சாதாரண உடையில் பேருந்தை மறித்த நபரொருவர் பேருந்தின் முன்புற வழியாக ஏற முற்பட்டார்.
அதற்கு அனுமதிக்காத பேருந்து நடத்துனர் பின்புற வழியால் ஏறுமாறு அந்தப் பயணியைப் பணித்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளாத அந்த நபர் தான் படைச் சிப்பாய் என கூறிக்கொண்டு பேருந்து நடத்துனரைக் கடுமையாக தாக்கியுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநரும் சாரதியும் குறித்த நபரை திருப்பித் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தை அருகில் இருந்த காவலரண் ஒன்றில் நின்ற படையினர் அவதானித்து, அங்குவந்து நடத்துனரையும் சாரதியையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் படைச்சிப்பாய் ஒருவர் குறித்த சாரதியையும் நடத்துநரையும் சுடுவதற்காக தனது துப்பாக்கியை ஆயத்தம் செய்துள்ளார். இதனால் பயணிகள் பெரும் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அங்குகூடிய பொதுமக்களும் மேலதிக படையினரும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான இராணுவவன்முறைகள் கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக அந்த பகுதிகளில் உள்ள இராணுவத்தினர், பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
கிளிநொச்சி பாதை ஓரங்களில் இராணுவ வாகனங்களும், முச்சக்கர வண்டிகளும் நிறுத்தப்பட்டு, மீள்குடியேற்ற கிராமங்களில் உள்ள பெண்களையும், பாதையில் செல்லும் பெண்களையும் பலவந்தமாக இழுத்து வாகனத்தில் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்குள்ள பொது மக்கள் இதனைக் கண்டும் காணாதவர்கள் போலவும் கேட்டும் கேளாதவர்கள் போலவும் வாய்மூடி மௌனிகளாக எதுவும் செய்யமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சாதகமாக வைத்து சிங்களக் குடியேற்றங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழர் தாயகப் பகுதி எங்கும் பல இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் அத்துமீறி இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட நிலையில் கடந்தவாரம் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூர்வீக தமிழர் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நெடுங்கேணியைச் சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற இடத்தில் இந்தக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த இடத்திற்குச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்திற்குக்கூட இதுபற்றி அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன், இந்த விடயம் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தின் கவனத்திற்குத்தான் கொண்டு வந்துள்ள போதிலும், அதுபற்றி அரச தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!
தொடரும்...



0 Responses to உச்சம் பெறும் இராணுவ சர்வாதிகாரம்!