உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பு தென்னிலங்கையை ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. போர் தந்த வலியை மறந்த நிலையில் இன்னுமொரு தரம் தமிழ் ஈழத்திற்காக தமிழ் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்ற கொதிப்பில் குமுறிக் கொண்டிருக்கின்றது தென்னிலங்கை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து இனவாத பிரசாரத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை தவறாக வழி நடத்தி விட்டனர் என்று கூட தென்னிலங்கையில் பேசப்படுகின்றது.
சிங்களத்தில் பெயர்போன "மஹதன முத்தா' கதையை அடிப்படையாக வைத்து ரீ.என்.ஏ. (TNA) என்ற பானைக்குள், தமிழ் மக்கள் என்ற ஆடு தலையை திணித்துக் கொண்டு நிற்பதாகவும், ஜனாதிபதி கத்தியுடன் ஒரு பக்கத்தில் நிற்பதாகவும் கேலிச்சித்திரங்களை வரைந்து ஏதோ ஒரு செய்தியை சொல்ல விழைவதையும் காண முடிகின்றது.
அதாவது தமிழ் மக்கள் என்ற ஆடு மீண்டும் பலிக்கடாவாகப் போகின்றதா? என்ற செய்தி இந்த கேலிச்சித்திரத்தில் தொக்கி நிற்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.அல்லது "மஹதன முத்தா' பாணியில் தமிழர் விவகாரத்தை மீண்டும் அணுக வேண்டும் என்ற செய்தியை கூறுகின்றதோ தெரியவில்லை.
இதற்கும் அப்பால் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் ஆணை வழங்கியிருப்பதாக தமிழர் சார்பில் கூறப்படுவதாகவும், இதனை வழங்க வேண்டாம் என தென்னிலங்கை ஜனாதிபதிக்கு ஆணை வழங்கியிருப்பதாகவும் மார்தட்டிக் கூறுகின்றது.
தமிழ் மக்கள் 30 வருடகால போரில் இழந்தவற்றை அபிவிருத்திப் பாதையூடாக பெறுவதை விடுத்து அரசியல்தீர்வு குறித்து இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தெரியாத ஞான சூனியங்கள் என்று கூட தென்னிலங்கை பேசுகின்றது.
நாட்டில் ஒரு பகுதி மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமைப்பாடு ஒரு அரசாங்கத்திற்கு உண்டு. 30 வருடகால போருக்கு முந்திய வடக்கு கிழக்கின் அபிவிருத்தியை ஆட்சி பீடமேறிய அரசாங்கங்கள் எவ்வாறு செய்தன என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.
தமிழ் மக்களைப் பொறுத்து அன்றும் சரி இன்றும் சரி, தமது அரசியல் அபிலாஷை நிறைவேற்றப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகியிருக்கவில்லை. அந்த வகையில் வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பு ஆச்சரியப்படுவதற்கில்லை.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது பிரசாரத்தில் ஈடுபட்ட வேறு எவருமோ தமிழ் ஈழத்தை கோரிக்கையாக வைத்து பிரசாரத்தை முன்னெடுக்கவில்லை.
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று தமிழ் மக்கள் தமிழீழத்திற்கான ஆணையை வழங்கவில்லை. அரசியல் அதிகாரப் பரவலாக்கலுக்கான தமது உள்ளக் கிடக்கையையே தேர்தல் தீர்ப்பாக வழங்கியுள்ளார்கள். பொதுத் தேர்தலாக இருக்கட்டும், மாகாண சபைத் தேர்தலாக இருக்கட்டும் அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலாக இருக்கட்டும். தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷை குறித்த செய்தியையே திரும்பத் திரும்ப பதிவு செய்து வந்துள்ளனர்.
தமிழ் மக்களின் இந்த ஜனநாயக உள்ளடக் கிடக்கையை அடையாளப்படுத்த தெரியாத தென்னிலங்கை ஜனநாயக விரோத செயல் என்றும் பின்னாளில் பயங்கரவாதம் என்றும் தொடர்ச்சியாக முத்திரை குத்தி வந்தது. இந்த மனநோயிலிருந்து விடுபடாத தென்னிலங்கையே உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளைக் கூட கடந்த காலங்களைப் போன்று நோக்குகின்றது.
கடந்த 60வது வருடகால தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் பெரிதளவாக கரிசனை கொள்வதில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளை பிடுங்கிக் கொள்வதில் மாத்திரம் விரைந்து செயல்படுகின்றனர்.
தற்போதைய உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து வாக்களித்த மக்களின் விரல்களில் பூசப்பட்ட மை அழிவதற்கு முன்பாகவே யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 10 இலிருந்து ஆறாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் யாழ். மாவட்டம் தனது நான்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை இழந்து நிற்கும். தேசிய ரீதியில் நாடாளுமன்றத்தில் நான்கு பிரதிநிதித்துவத்தை பறிகொடுத்து தமிழினம் நிற்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில் தமிழினம் போருக்குப் பிந்திய நிலையில் கூட தேசிய அரசியலிலிருந்து மேலும் ஒதுக்கப்படும் நிலையே ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ, அவர்களை சூடான், கோசோவா போன்ற நாடுகளின் நிலைக்கு தென்னிலங்கை மிக வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்பதையே இன்றைய நிலைவரங்கள் உணர்த்தி நிற்கின்றன.
இந்த ஒரு பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசியல் தீர்வுப் பொதியை முன்வைக்குமாறு மீண்டும் ஒருமுறை இங்கு பதிவு செய்கிறோம்.
அதேவேளையில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான சீலன் கதிர்காமர் அவர்களின் வேண்டுகோளையும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னால் முன்வைக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வெற்றியுடன் வேலை முடிந்ததென அமர்ந்து விடாது கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் சிவில் அமைப்புகளை உருவாக்கி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாகும்.
வி. தேவராஜ்
கொசோவா சூடான் நிலைமையை தென்னிலங்கை உருவாக்க முயல்கின்றதா?: வி.தேவராஜ்
பதிந்தவர்:
Anonymous
31 July 2011



0 Responses to கொசோவா சூடான் நிலைமையை தென்னிலங்கை உருவாக்க முயல்கின்றதா?: வி.தேவராஜ்