இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான பரப்புரைகள் சூடுபிடித்துள்ள இவ்வேளையில், நாடாளுமன்றத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான சிங்களத்தின் இறுக்கமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
சமஷ்டித் தீர்வினை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்று கூறும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தத் தீர்வினை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டதாலேயே, அவரைக் கடந்த தேர்தலில் சிங்களம் தூக்கி எறிந்ததென விளக்கம் சொல்கிறார்.
பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல்களை வழங்கும் அமைச்சர் பெருமக்களின் கருத்து, இதை விட மோசமான பேரினவாத சிந்தனைகளை முன்வைக்கின்றது. தமிழ் மக்கள் மீது அடக்கு முறைகள் தொடருமாயின், தனது தலைமையில், ஒத்துழையாமை இயக்கம், அரசிற்கெதிராக முன்னெடுக்கப்படுமென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட எச்சரிக்கையால், வெகுண்டெழுந்துள்ளார் பௌத்த சிங்கள இனவாத புத்த பிக்குகளின் பிரதிநிதி சம்பிக்க ரணவக்க.
காலாவதியாகிப்போன 13வது திருத்த சட்டத்தை இனி ஏற்றுக்கொள்ள முடியாதென 13 விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார் பெற்றோலிய வனத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த. மகிந்தரின் வலது - இடது கரங்கள், 13 ஆவது திருத்தம், சமஷ்டி போன்றவை குறித்த பேச்சிற்கே இடமில்லை என்று உறுதியாகக் கூறினாலும், புலம்பெயர் நாட்டிலுள்ள சிலர் இந்தியாவின் உதவியுடன் இவையெல்லாவற்றையும் பெறமுடியுமென அடம்பிடிக்கிறார்கள்.
இந்தியாவின் அரசியல் முகமாக, சிங்களத்துடன் பேசும் நிரூபமா ராவோ, அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிக்கும் முழுப்பொறுப்பினையும், மகிந்தரிடம் ஒப்படைத்துவிட்டார்.
ஆகவே தீர்வு குறித்து, இந்தியா அழுத்தம் கொடுக்குமென யாராவது கூறமுற்பட்டால், அவர்கள் தமிழ் மக்களின் காதுகளில் பெரிய பூமாலை ஒன்றை சூட்ட முற்படுகின்றார்களென்று திடமாகக் கூறலாம்.
காணி, காவல்துறை அதிகாரமில்லாத 13 ஐத் தந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற வகையில், கிடைப்பதைப் பெறுவதே அரசியல் சாணக்கியமென, தேசியப் பட்டியல் மூலம் இணைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், அழுத்தம் கொடுப்பதாக இணையத் தளமொன்று அண்மையில் செய்தி ஒன்றினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்வா, நாமல் ராஜபக்ச போன்ற சிங்களத்தின் பெருந்தலைகள், யாழ்.குடாவில் இறங்கி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டக்ளசைப் பொறுத்தவரை வாழ்வா, சாவா? என்று இத்தேர்தலை எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துள் தள்ளப்பட்டுள்ளார்.
அவரது வீணையை வாசிக்க முடியாமல், தமது சின்னத்தை முதன்மைப் படுத்துகிறது சிங்களம். இவர்கள் வெற்றி பெற்றால், அது தென்னிலங்கை அரசியலின் வெற்றியாகவே உலகிற்கு காட்டப்படும். ஏனெனில் தாயகத் தமிழ் மக்களின் அரசியல் தலைமை, தமது ஆளுமைக்குள் இருக்கிறது என்பதனைக் காட்ட வேண்டிய தேவை பேரினவாதத்திற்கு இருக்கிறது.
கூட்டமைப்பானது, தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமை அல்ல என்று இத்தேர்தல் மூலம் காட்டுவதன் ஊடாகத் தாம் திணிக்கப்போகும் தீர்வினை தமிழ் மக்கள் ஏற்கின்றார்கள் என்று கூற அரசு முயல்கின்றது. இந்த அவசர நகர்வின் ஆபத்தை, கூட்டமைப்பும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் சோகம். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற வகையில், கிளிநொச்சி மக்களைப் பலவந்தமாக ஒன்றிணைத்து ஆர்ப்பாட்ட நாடகமொன்றினைச் சென்ற வாரம் சிங்களம் நடத்தியது.
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறுவது போன்று, உணவும் வீடுமே தமிழ் மக்கள் கேட்கும் உரிமை என்பதனை, இந்த கட்டாயப் பேரணி நினைவுபடுத்துகின்றது.
வடக்கில் நடைபெறும் இராணுவ ஆட்சியின் கீழ் இதைவிட பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. அவசரகாலச் சட்டத்தையும், பயங்கரவாத தடைச் சட்டத்தையும் வைத்துக்கொண்டுதான் தனது இராணுவ நிர்வாக ஆட்சியை சிங்களம் நியாயப் படுத்துகின்றது.
தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை வண்டியை ஓட்டிவிட்டால், தேசிய இன நல்லிணக்கமும் உறவுப் பாலமும் நிர்மாணிக்கப்பட்டுவிடுமென, தாயக மக்களை ஏமாற்ற முயலும் சிங்களத்தைத் திருத்த முடியாதென்பதை, எட்டுச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கூட்டமைப்பு புரிந்துகொள்வது நல்லது.
தேர்தல்கள், பேச்சுவார்த்தைகள் ஊடாக அரசியலில் உரிமைகளைப் பெற்றுவிடலாமென இனியும் நம்பிக்கை கொள்ளாமல், சர்வதேச அழுத்தமானது இலங்கை மீது விழும் வகையில் பணியாற்ற வேண்டியது கூட்டமைப்பின் கடமையாகின்றது. இந்திய பொதுமக்களிடையே சனல்-4 ஆவணப்படம் உருவாக்கும் உணர்வுகளையும் பரந்தளவில் இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியினர் நடாத்தும் விழிப்புணர்வுப் போராட்டங்களையும், கவனத்திலெடுக்க வேண்டும்.
சிங்களத்தின் பொருளாதாரத்தினை பலவீனப்படுத்தக் கூடிய வகையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நகர்வுகள் அமையவேண்டும். தற்போது சிங்களத்தின் கவனமெல்லாம், வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை எவ்வாறு நிமிர்த்துவது என்பதிலேயே இருக்கின்றது.
அதாவது, உல்லாசப் பயணத்துறையை துரித கதியில் அபிவிருத்திசெய்ய சிங்களம் அவசரப்படுகின்றது. கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விவகாரம் இதுதான்.
ஈழமுரசு



0 Responses to வடக்கை கையகப்படுத்த முனையும் சிங்களப் பேரினவாதம்!: இதயச்சந்திரன்