வன்னியில் இறுதிக்கட்ட போரில் இலங்கை படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் போர்குற்ற விசாரணை அவசியமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வன்மையாக கண்டித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஏ.சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலண்டன் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட கூடாது என தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கண்டித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாக இலங்கை இராணுவத்தினால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட போரின் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், நிராயுதபாணிகளாக வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட மற்றும் இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிற எமது உறவுகள் இலங்கை அரசாங்கம் மீது முறையான போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் புலம்பெயர்ந்த மக்கள் எதுவும் அறியாதவர்கள், அவர்கள் அரசியல் ஞானம் அற்றவர்கள் என கூறியிருப்பது கொலை வெறிபிடித்த சிங்களப் பேரினவாத சக்திக்கெதிராக போராடி வரும் எமது புலம்பெயர் மக்களின் எழுச்சியைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
மனித உரிமை அமைப்புகள், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய உட்பட பல மேற்கேத்தேய நாடுகள் இலங்கை அரசாங்கம் மீது போர் குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என அழுத்தம் பிரயோகிறது, ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என கடுமையான போக்கை முன்னெடுக்கிறது.
இலங்கை இராணுவத்தினால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட விபரங்களை "சனல் 4" தொலைக்காட்சி நிறுவனம் அக்குவேறு ஆணிவேறாக உலக மக்களுக்கு திரைபோட்டு காட்டிவரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை மற்றுமல்ல இந்திய அரசாங்கத்தையும் போர் குற்ற விசாரணையிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.
தமிழ் தேசியம் மற்றும் தமிழீழத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக பல்வேறு கஷ்ட்டங்களை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருந்தோம். ஆனால் சுமதிரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட அடிப்படை கோட்பாடுகளை மறந்து செயற்படுவது கவலையளிப்பதாகவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்துக்கு இதுவரையில் அதில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு உறுப்பினரும், எதிர்ப்போ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படாமையினால,; கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை முகங்கள் வெளிக்கு வந்துள்ளது.
இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெற்ற மூன்றாம் பேச்சுவார்த்தையின் போது சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கை அரசாங்கத்துடன் ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், நேரத்துக்கொரு கதையை அரசாங்கம் கூறிவருவதாகவும, பேச்சுவார்த்தையில் எந்த முன்னெற்றமும் ஏற்படவில்லையென மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
உலக நாடுகளே வன்னி மண்ணில் இடம்பெற்ற கொடூரத்திற்கு நீதி வேண்டும் என ஒருமித்த குரல் கொடுக்கும் போது, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் செயற்படுகிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கூற்றுக்கு அக்கட்சி விளக்கம் தெரிவிப்பதுடன், இலங்கை அரசாங்கம் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாடுபடும் புலம் பெயர்ந்த மக்களுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சிறீலங்காவை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் கூட்டமைப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
29 July 2011



0 Responses to சிறீலங்காவை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் கூட்டமைப்பு