கடந்த வெள்ளிக்கிழமை மாலை 15.30 மணியளவில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அரசாங்க நிர்வாக மையத்தில் கேட்ட கார்க்குண்டு வெடிப்பு முதலில் ஐரோப்பாவின் காதுகளில் சற்று வித்தியாசமாகவே கேட்டது. யாரோ ஒரு இஸ்லாமியன் அவன் அல் குவைடா பயங்கரவாதத்துடன் தொடர்புடையவன் செய்த வேலை என்று அனைத்து ஊடகங்களும் சட்டென முடிவு செய்தன. நீட்டி முழக்குவதற்கு தயாரானபோது நிலமை சட்டென சூல் கொண்டு திரும்பியது.
தலைநகர் ஒஸ்லோவில் இருந்து வெறும் அரைமணி நேரப் பிரயாணத்தில் போய்ச் சேரக்கூடிய உரூயா தீவில் ஓர் இளைஞன் போலீஸ்காரர் போல வேடமணிந்து நுழைந்து கொண்டிருந்தான். ஒஸ்லோ நகரில் வெடித்த குண்டுபற்றிய செய்திகளை பரிமாறியபடி இருந்த நோஸ் லேபர் யூத் கட்சி உறுப்பினர்கள் சுமார் 600 பேர்வரை குழுமியிருந்த இடத்திற்குள் அந்த இளைஞன் நுழைந்தான். உங்களுக்கு பாதுகாப்பு வழங்கவே வந்துள்ளேன் என்று அவன் கூறியபோது எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
சொற்ப நேரத்தில் கூட்டத்தை நோக்கி அவன் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தான். சட்சட்டென அங்கு நின்றவர்கள் செத்துவிழத்தான் தெரிந்தது நிலமை மோசமாகிவிட்டது. அல்குவைடா தேடலில் ஓடியவர்கள் திகைத்து திரும்ப, ஓர் இளைஞன் கைது செய்யப்படுகிறான். அவன் அல்குவைடா அல்ல 32 வயதுடைய நோஸ்க் இளைஞன் ஆனஸ் பிறீவிக்.
யார் இந்த ஆனஸ் பிறீவிக்… ஏன் இப்படிச் செய்தான்… அப்படியானால் அல் குவைடா எங்கே… அவனுக்கு மூளை பிழைத்துவிட்டதா..
அதை ஆராய்வதற்குள் செத்து மடிந்தவர்கள், கடலில் நீந்துவதற்கு குதித்தவர்கள், குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. மறுபுறம் ஒஸ்லோவில் வெடித்த குண்டு ஏழு பேருடைய உயிர்களை காவு கொண்டுவிட்டது. மேலும் வெடிக்குமா தெரியவில்லை என்ற பதகளிப்பில் போலீசார் கதிகலங்கி ஓட ஆரம்பித்தார்கள்.
மறுபுறம்…
ஆனஸ் பிறீவிக் என்ற தீவிரவாத இளைஞனின் பேஸ்புக்கை ஆராயத் தொடங்கியபோதுதான் அவனைப்பற்றிய உண்மைகள் தெரியவந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களில் அவன் தன்னுடைய தீவிரவாதக் கருத்துக்களை இடையறாது பதிந்து வந்துள்ளான். அத்தருணம் உலகில் உள்ள தீவிரவாத போக்குடையவர்கள் பற்றிய தகவல்களையும் அவன் பதிந்துள்ளமை தெரியவந்தது. அதில் ஒரு கருத்து டென்மார்க்கையும் திரும்பிப் பார்க்க வைத்தது. டென்மார்க்கில் அகதிகள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறிவரும் டேனிஸ் மக்கள் கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மோற்றன் மாஸ்சஸ்மித் பற்றியும் அவன் எழுதியுள்ளமை தெரியவந்தது.
அந்த இளைஞன் இஸ்லாத்தை வெறுத்துள்ளான். இஸ்லாம் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஆதரவான சக்திகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளான். சோசல் டெமக்கிரட்டி கட்சியின் இளைஞர் அணியின் கூட்டம் நடைபெற்ற உற்றுயா தீவை நோக்கி சென்று அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளான். பிந்திய தகவல்களின்படி அந்த நிகழ்வில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் ஒரு முக்கிய விடயம் இருக்கிறது. இதுவரை முஸ்லீம்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் எதிரான போக்குடையவர்கள் நேரடியாக அவர்களுக்கு எதிராக செயற்பட்டார்கள். ஆனால் இந்த இளைஞன் அதிலிருந்து மாறுபட்டு தனது இனத்தின் மென்போக்குடையவர்கள் மீது தாக்குதலை நடாத்தியுள்ளான். எனவேதான் பயங்கரவாதத்தில் இருந்து சிறிது வேறுபட்ட கடும் தீவிரவாதமாக இது அடையாளம் காணப்பட்டது.
இத்தகைய தாக்குதல்களுக்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான துவேஷத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மென்போக்கு வாதமுடைய உவைமார்க் குடியரசு அரசியல்வாதிகளை எதிர்த்தான். தன்னின மென்போக்காளர்களை வீழ்த்திய பின்னரே ஜேர்மனிய ஆரியவாதத்திற்குள் நுழைந்து, யூதரை அழித்து உலகப்போரைச் சந்தித்தான்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பாவில் உருவான வலதுசாரிப் போக்கும், இஸ்லாத்திற்கு எதிரான போரும் இத்தாலி முதல் நோர்வேவரை ஒரு வெப்ப அலையாக வீச ஆரம்பித்தது. அத்தகைய செயலை ஊடகங்கள் தூரப்பார்வையற்று ஊதிக்கொடுக்க ஆரம்பித்தன. பல இளம் தீவிரப்போக்குடையவர்களை உருவாக அதுவே காரணமாகவும் அமைந்தது.
இந்த நிகழ்வு ஐரோப்பாவில் உள்ள சமூக ஆய்வாளர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்களை ஓர் உலுக்கு உலுக்கியுள்ளது. அவர்கள் காத்த மௌனங்களும், தெரிந்தும் தெரியாமல் இருந்த இருப்புக்களும் ஐரோப்பாவில் உருவான பல்வேறு தீவிரவாதங்களை அடையாளம் காட்டவும், தீவிரப் போக்குகளை தடுக்கவும் தவறிவிட்டதும் தெரியவந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆறு முக்கிய பிரச்சனைகள் வரும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதில் ஒன்று இனவெறுப்பு கலந்த தீவிரவாதம், அதுதான் தன்னை இப்போது வெளிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய சமூகவியல் அறிஞர்கள் பொருளாதார காரணிகளுக்காக மௌனம் காக்காமல், அரசியல்வாதிகளை சரியாக நெறிப்படுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது. ஊடகங்கள் பொறுப்புடன் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
புலம்பெயர் தமிழ் மக்களும், தமிழ் ஊடகங்களும் இதுகுறித்து ஆரோக்கியமாக சிந்திப்பதும், அறிவதும் முதன்மை செய்தியாக இருக்க வேண்டும். தமிழில் இது கவனிக்கப்படாத விடயமாக இருப்பதை நாம் கவலையுடன் அவதானிக்க வேண்டியிருக்கிறது. நோர்வேயில் நடைபெற்ற நிகழ்வு வெறுமனே நோர்வேக்கு மட்டுமானதல்ல, உலகம் முழுவதிற்குமான பொதுப் பிரச்சனை. இனவாதம், நிறவாதம், மொழிவாதம் போன்ற வாதங்கள் உலகத்தை பாரிசவாதத்தில் வீழ்த்தியுள்ளதை உணர்ந்து, அனைத்து மக்களும் கடும்போக்குகளை தவிர்த்து இயல்போடு வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
எல்லாவற்றுக்கும் அஞ்சலி நிகழ்வு நடாத்தி மெழுகுவர்த்தி ஏற்றும் புலம் பெயர் தமிழர்களின் மெழுகுவர்த்திகள் இந்த அப்பாவி மக்களை அஞ்சலிக்காது உறங்கிக்கிடப்பதும் ஏனோ..? மெழுகுவர்த்தி கொழுத்தி நாள் முழுக்க சோக கீதம் போடும் தமிழ் ஊடகங்களும் உற்றுப்பார்க்க மறந்துபோய்விட்டன…
ஒரு கொடிய நிகழ்வில் மரணித்த அனைத்து மக்களுக்கும் எமது அஞ்சலிகள்..
அலைகள் வடக்கு ஐரோப்பிய பிரிவு.. 26.07.2011
நோர்வேயில் குண்டு வெடிப்பும், துப்பாக்கிப் பிரயோகங்களும் சொல்லும் செய்தி என்ன?
பதிந்தவர்:
Anonymous
26 July 2011



0 Responses to நோர்வேயில் குண்டு வெடிப்பும், துப்பாக்கிப் பிரயோகங்களும் சொல்லும் செய்தி என்ன?