இருபது வருடப் போராட்டத்தின் பயனாய் இந்தியாவின் குர்க்கா இனத்தவர்கள் தனி நிர்வாக அலகைப் பெற்றுள்ளனர். மேற்கு வங்காளத்தின் வடபால் அமைந்துள்ள டார்ஜீலிங் (Darjeeling) பகுதி வாழ் குர்க்கர் இனத்தவர்கள் குர்க்கர் ஜன்முக்தி மோர்ச்சா (Gorkha Janmukti Morcha) தலைமையில் தனி நிர்வாக அலகு வேண்டிப் போராடி வந்தனர்.
சென்ற திங்கட்கிழமை (18/07/2011) இது தொடர்பாக ஒரு முத்தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்திய அரசு, மேற்கு வங்க அரசு குர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா அமைப்பினர் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
மேற்கு வங்கத்தின் தரைப்பரப்பு அளவு இதன் மூலம் குறையும் என்ற காரணத்தால் மக்களும் மாவட்ட அரசும் கடும் எதிர்ப்பு காட்டினார்கள். கடை அடைப்பு போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்திய அரசினால் குர்க்காக்களின் கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியவில்லை.
குர்க்காக்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாகப் பிரதேசம் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களைத் தொடுக்கும் ஒடுங்கிய கேந்திர முக்கியமான இணைப்பு நிலத்தில் இருக்கிறது.
இந்த ஏழு மாநிலங்களுக்கும் இடையில் தொடுப்புப் பிரதேசமாக குர்க்காக்களின் வாழ்விடம் அமைகின்றது. இந்த ஏழு மாநிலங்களுக்குச் செல்வதற்கு வேறு பாதை கிடையாது.
அதே போன்று குர்க்கா நிர்வாக அலகு நேபாளம், பூட்டான் சிக்கிம் ஆகியவற்றிற்கான பாதையில் இருக்கிறது. சிக்கிம் சீன எல்லையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகப் போக்குவரத்திற்காக வங்காள தேச நிலப்பரப்பு ஊடாகச் செல்லும் பாதை உரிமையை அண்மையில் இந்திய அரசு வங்காள தேசத்திடமிருந்து பெற்றுள்ளது.
ஆனால் இந்தப் பாதை மூலம் இராணுவப் போக்குவரத்துச் செய்யமுடியாது. குர்க்கா இனத்தவர்கள் இந்திய இராணுவத்தில் கணிசமான அளவு செல்வாக்குடன் இருக்கிறார்கள். குர்க்காக்களின் போராட்டத்திற்கு இது வலுச் சேர்த்துள்ளது.
குர்க்காக்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாக அலகு கொர்க்காலாந்து நிர்வாக நிலப்பரப்பு (Gorkhaland Territorial Administration) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 45 தெரிவு செய்யப்பட்டவர்களும் 5 நியமனமானவர்களும், மொத்தம் 50 உறுப்பினர்கள் இடம்பெருவார்கள்.



0 Responses to இந்தியாவில் புதிய நிர்வாக மாவட்டம் உதயம்