Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது.

காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கு விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.

சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம்புரளாமல் இன்றுவரை தொடர்கின்றது.

2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 லெட்சத்திற்கும் மேலான எமது உறவுகளையும் குறிகிய நிலப்பரப்பில் அடைக்கப்பட்டு, உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும்.

நிலத்தில் போராட்டம் மௌனித்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் மக்கள தொடர்ந்து ஏந்தி செல்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா?

இன்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.

உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர் போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும்.

நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் எமது தொடர் போராட்டம் காரணமாக தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்றன.

இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது.

ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும். ஒரு தனிமனிதனால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் குறுகிய காலத்தில் தேசிய மக்கள் போராட்டமாக மாறியது. அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.

நிலத்தில் எம் உறவுகள் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் தேர்தல் மூலம் கொடுத்த மௌனத்தின் மரண அடி, மானத் தமிழர்கள் மடியவில்லை! அடிபணியவில்லை என்று சீறுகிறது.

புலத்தில் பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம் ஜெகன் அங்கிள் தொடர்ந்து, டென்மார்க் உணர்வாளர்களிடம் விரிந்து, தமிழக உறவுகளிடம் பரந்து, ஜேர்மன் இளையோர்களின் ஈருருளிப் பயணத்தை அடுத்து மீண்டும் டென்மார்க் உணர்வாளர்களிடம் ஈருருளிப் பயணமாக மாறி இன்று கறுப்பு யூலை தினத்தில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து ஆறு தேசிய உணர்வாளர்கள் மூலம் பாரீஸ் நகரத்தை நோக்கி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடர்கின்றது.

நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது ஓயாது எம் போராட்டம்.

நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து)

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

0 Responses to நிலத்திலும் புலத்திலும் ஈழத் தமிழர்களின் தடுக்க முடியாத உரிமைக்கான தொடர் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com