Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி. பரதன், துணைப் பொதுச்செயலர் எஸ். சுதாகர்ரெட்டி, தேசிய செயலர்கள் டி. ராஜா, குருதாஸ் தாஸ்குப்தா, மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கை அரசால் 2008-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்நாட்டுப் போர் நடைபெற்ற இடங்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களைக் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடைசியாக நடைபெற்ற போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட குழுவின் முதல் கட்ட அறிக்கை கூறுகிறது. இது ஒரு அப்பட்டமான இன அழிப்பு போர்க் குற்றமாகும். உலக அளவில் மனித உரிமை பிரச்னையாக எழுந்துள்ள இதற்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா மட்டும் மௌனம் சாதிக்கிறது. இது பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட இலங்கைப் பிரச்னையும் ஒரு காரணமாகும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் விதத்தில் சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்த உணர்வை மதிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என்று தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to தமிழர்களுக்காக நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com