Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் பகுதிகளிலே நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலமாக ஆதரித்து மகத்தான வெற்றியினைப் பெறச் செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு தெளிவான செய்தியினை வழங்கியுள்ளனர்.

எமக்கு அன்னமும் வேண்டாம்! ஆகாரமும் வேண்டாம்! ஆடை அணிகலன்களும் வேண்டாம்! அபிவிருத்தி செய்கிறோம் என்ற மயக்க மொழிகளும் வேண்டாம்! அரசியல் உரிமைதான் வேண்டும் என்பதே அச் செய்தியாகும்.

தேர்தலுக்கு முன்பாக படை, பரிவாரங்களுடன் யாழில் முகாமிட்டிருந்த சிறீலங்கா அரச அதிபரும் அவரது அடிவருடிகளும் எமது மக்களிற்கு எத்தனையோ ஆசை வாக்குறுதிகளைத் தெள்ளித் தெளித்தும், இலவசங்களை அள்ளி வீசியும், மக்களை நெருக்குவாரத்திற்கு உட்படுத்தியும், அச்சுறுத்தியும் வாக்குவேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆயினும் மக்கள் அவையெதற்கும் மசியாமலும், அடிபணியாமலும் தாங்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கமே என்பதை மீண்டும் ஒருமுறை சிறீலங்கா அரசிற்கும் பன்னாட்டிற்கும் ஐயந்திரிபறத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

வெறும் வெட்டிப் பேச்சுக்களும், வார்த்தை ஜாலங்களும் காலத்திற்கு ஒவ்வாதவையென சிறீலங்கா அதிபரும் அவரது அடிவருடிகளும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதனை இவ்வேளையில் கனடியத் தமிழர் பேரவை சுட்டிக்காட்ட விரும்புன்றது.

இத் தேர்தல் முடிவுகளின் பின்னராவது சிறீலங்கா அரச தலைவரும், அவரது அரசும், ஏனைய அரசியல்வாதிகளும் தமிழர்களுடைய உள்ளார்ந்த விருப்புகளை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியற் தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கனடியத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.

இத் தருணத்திலே தேர்தல் சமயங்களிலே எவ்வித மிரட்டல்களிற்கும் இலவசங்களிற்கும் அடிபணிந்து போகாது தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காத்து நின்ற எம் தாயக உறவுகளிற்கு நன்றியறிதலையும், இத்தனை இடர்களின் மத்தியிலும் தாயக உறவுகளின் காவலனாக அவர்களின் நம்பிக்கை ஒளியாக நின்று இத்தேர்தலை வென்றெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எங்கள் வாழ்த்துக்களையும் கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கின்றது.

0 Responses to அன்னமும் வேண்டாம்!அபிவிருத்தியும் வேண்டாம்! அரசியல் உரிமைதான் வேண்டும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com