தமிழர் பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல்தீர்வுக்கு வகை செய்யும் 13-வது பிளஸ் திருத்தம் குறித்து நாடாளுமன்றக் குழு இறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னைகள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ஷே, 'த ஹிந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசியல் தீர்வு எப்போது?
அரசியலமைப்பு சட்டத்தின்படி, அரசியல் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றைப் பரிந்துரைக்குமாறு எனது கட்சியையும், இதர கட்சிகளையும் கேட்டுக்கொண்டுள்ளேன். அவ்வாறு அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே நான் ஏற்றுக் கொள்வேன். இறுதியில், நாடாளுமன்றத்துக்கு அந்தத் தீர்வு கொண்டு செல்லப்படும்.
மும்பையே உதாரணம்!
பாதுகாப்பு விவகாரங்கள் அனைத்தும் அரசிடம் தான் இருக்க வேண்டும். இந்தியாவையே எடுத்துக்கொள்ளுங்கள்... மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையின் நடவடிக்கைகள் மெதுவாகவே இருக்கின்றன. ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசிடம் சென்று உத்தரவைப் பெற வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே தான் பாதுகாப்பு விவகாரங்களை அரசிடமே (இலங்கை அரசு) வைத்துள்ளோம்.
இராணுவமயமாகும் வடக்குப் பகுதிகள்!
வடக்குப் பகுதிகள் இராணுவமயமாகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஈராக்கில் என்ன நடக்கிறது? இவ்வளவு நாட்கள் ஆகியும் அங்கு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இங்கு, போர் முடிந்தவுடன் 'கற்ற பாடங்கள் மற்றும் மறுவாழ்வுக்கான ஆணையம்' அமைப்பை அமைத்தேன்.
தெற்குப் பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்கள் உள்ளன. அந்த வகையில் தான் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் இயங்கி வருகின்றன. இது, இராணுவ ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உணர வேண்டும்.
சனல் 4 வீடியோ
சனல் 4 வெளியிட்டது ஒரு திரைப்படம். நிர்வாண கோலத்தில் உள்ளவர்களைக் கட்டி வைத்து பின்னால் இருந்து சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதில் கட்டி வைக்கப்பட்டிருப்பது தமிழர்கள் அல்ல. அவ்வாறு கட்டி வைக்கப்பட்டு சுடப்படுவது இலங்கை இராணுவத்தினர். அவர்களைச் சுட்டுக் கொல்பவர்கள் தான் விடுதலைப்புலிகள். சுடும் நபர்கள் அணிந்திருக்கும் பெல்ட், புலிகளுடையது. அதுபோல் இராணுவத்தினர் அணிந்திருக்க மாட்டார்கள். எனவே, அது திரைப்படம் தானே தவிர உண்மையான ஆவணப் படம் அல்ல. இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறோம்.
அந்தப் படத்தின் அசல் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்வதற்கு கேட்டிருக்கிறோம். இராணுவத்துக்கு எதிராக எந்தவித ஆதாரங்கள் இருந்தாலும், யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அளிக்கலாம். நாங்கள் அவற்றின் மீது முழுமையாக விசாரிக்க காத்திருக்கிறோம்.
ஜெயலலிதாவுக்கு அழைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை வருமாறு, அவரைச் சந்தித்த இலங்கைத் தூதர் மூலம் அழைப்பு விடுத்திருந்தேன். அவர்கள் அதற்கு தயாராக இல்லாத பட்சத்தில் அல்லது நேரமின்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பலாம்.
இந்திய மத்திய அரசுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்தி, அவரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி வைக்கலாம். தமிழ்நாடு மட்டுமின்றி, இதர மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களும் இங்கு வரலாம். அவர்கள் வடக்குப் பகுதியில் உள்ள நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த பேட்டியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.



0 Responses to முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை வருமாறு போர்க்குற்றவாளி மஹிந்த அழைப்பு!