தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக அணி திரள்வோம் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்த இன அழிப்பின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக 1983 கறுப்பு ஜூலைப் படுகொலைகள் திகழ்கின்றன.
இவ்வாறான இன அழிப்பின் உச்சகட்டமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் திகழ்ந்துவரும் பின்புலத்தில், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நினைவேந்தும் அதேவேளை, அதனை ஏனைய மக்களிற்கும் மீண்டும் நினைவூட்டுவோம்.
ஜூலை 23ஆம் நாள் நாளை சனிக்கிழமை மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை இல.10, டவுணிங் வீதியிலுள்ள பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நினைவேந்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கறுப்புடைய அணிந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் அதேவேளை, இழந்த எம் உறவுகள் மீது ஒன்றாய் இணைந்து உறுதியெடுக்க மக்கள் அனைவரும் அணிதிரண்டு வர வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை
22-07-2011



0 Responses to கறுப்பு ஜூலை நினைவேந்தல் - பிரித்தானியா