Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் ஜூலை 23 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பலை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழர்களின் வாக்குகளை ராஜபக்சே கும்பல் அச்சுறுத்திப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. காவல்துறை மற்றும் இராணுவத்தைக் கொண்டும் தமக்கு ஆதரவான ஒற்றுக் குழுக்களைக் கொண்டும் தமிழ் மக்களை மிரட்டி வெற்றி வாகை சூடிவிடலாம் எனக் கணக்குப் போட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் தம்முடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், அரசியல் வலிமையை வெளிப்படுத்தவும் இத்தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கதான அளவில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழீழத் தாயகத்தில் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிவரும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஒரே அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆகும். சிங்கள இனவெறி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஒற்றைக் குரலாய் இன்று ஈழ மண்ணில் உரத்து ஒலித்துக் கொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் மட்டுமே ஆகும். எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கும் அவமதிப்புகளுக்குமிடையில் தமிழர் குரலை உலக அரங்கில் எதிரொலிக்கும் வாய்ப்பையும் வலிமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திலும், ஊடகத் தளங்களிலும் ஈழத் தமிழர்கள் சுமக்கும் காயங்களையும் வடுக்களையும் ஆற்றுப்படுத்த இயலாத வலிகளையும் சிந்தும் கண்ணீரையும் செந்நீரையும் ஓரளவுக்கேனும் பதிவு செய்யக்கூடிய களப்பணிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆற்றி வருகிறது. இத்தகைய கூட்டமைப்பை அரசியல் ரீதியாக மேலும் வலிமைப்படுத்த வேண்டியது ஈழத்தமிழினத்தின் இன்றியமையாத கடமையாக உள்ளது. மேலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் சிங்கள இனவெளியர்களும் அவர்களின் ஆதரவுத் தமிழ் ஒற்றுக் குழுக்களும் ஆளுமை செலுத்துவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இடமளிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமிழர்களின் வரலாற்றுக் கடமையாக உள்ளது.

எனவே, தமிழீழத் தாயகத்தில் வாழும் ஒட்டுமொத்தத் தமிழினமும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பெராதரவு வழங்கி அக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், ஊனமுற்றோர், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் முதலிய அப்பாவித் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி இலட்சக் கணக்கில் கொன்று குவித்த கொலைகார இனவெறியன் மகிந்த ராஜபக்சேவுக்கும் தமிழ் ஒற்றுக் குழுக்களுக்கும் பாடம் புகட்டுவதற்கு ஒரு மகத்தான வாய்ப்பாகக் கருதி இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

போர்க் குற்றவாளிகளான, இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிப்பதற்கு சர்வதேசச் சமூகத்தின் ஆதரவு மிகமிக இன்றியமையாததாக உள்ளது.

சர்வதேசச் சமூகத்தை தமிழர் பக்கம் திருப்புவதற்கு தமிழீழத் தாயகத்தில் உள்ள மக்களின் பங்களிப்பும் தவிர்க்க முடியாத தேவையாகவுள்ளது. அதற்கேற்றதொரு வாய்ப்பாக இத்தேர்தலைத் தமிழீழச் சொந்தங்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கு உந்துதலாக இருக்கும் வகையிலும் வாக்குகளைச் சிந்த விடாமல் சிதறவிடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அளித்து மாபெரும் வெற்றியை வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவன் வேண்டுகோள்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com