கடந்த ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர், ரவுடிகள், சமூக விரோதிகளைப் பார்த்து அஞ்சும் நிலை இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணைத்திருந்த அடிமைச் சங்கிலியை சமீபத்தில் மக்கள் உடைத்தெறிந்துள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தேறியது. முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை போர் நினைவுச் சின்னத்திலிருந்து வெள்ளை சீருடை அணிந்த போலீஸார் வரவேற்று புனித ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவருக்கு தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வரவேற்பு அளித்தார். பின்னர் முப்படை தளபதிகள், டிஜிபி ராமானுஜம், கூடுதல் டிஜிபி ஜார்ஜ், மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி ஆகியோரை முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின்னர் கோட்டை வளாகத்தில் முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோட்டைக் கொத்தளத்துக்கு முதல்வர் வந்தார். அங்கு தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையை அவர் நிகழ்த்தினார்.
முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரை:
வரலாற்று சிறப்புமிக்க இந்த புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திலிருந்து பாரதத் தாயின் மணிக்கொடியை ஏற்றி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.
ஆங்கிலேயரிடம் இருந்து நாம் விடுதலைப் பெற்று 64 ஆண்டுகள் முடிந்து விட்டன. 65-வது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய வேளையில், வங்கக் கடலோரம் வீசும் மெல்லிய பூங்காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் இந்த மணிக்கொடி, ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியாம் இந்த சுதந்திரம் பற்றிய பல்வேறு உணர்வுகளை இத்தருணத்தில் நம்முள்ளே கிளர்ந்தெழச் செய்கிறது.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழகம். வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழகம். நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களைக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்தத் தியாகச் செம்மல்களை நினைவு கூறும் திருநாள் இது.
அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, வறுமையில் வாடுவோர் வளம் பெற்று, அனைத்துத் தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம்.
அந்த வகையில், இந்த சுதந்திரத் திருநாள், தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் தன்னிகரில்லாத் திருநாள். தமிழக மக்களின் முகங்களில், ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியை காண்கின்ற திருநாள். 64 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை இன்று கொண்டாடி மகிழும் அதே வேளையில், தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு துறையிலும் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையே அச்ச உணர்வில் தான் கழிந்தது. எனவே தான், ஐந்து ஆண்டு கால கொடுங்கோல் குடும்ப ஆட்சி ஒழிந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களாட்சி மலர்ந்தவுடன், மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்த உணர்வு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை சட்டம்-ஒழுங்கு சீரழிவு. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக் காடாக மாற்றினார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இதனை சீர்செய்யும் விதமாக
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், நிருவாகத்தை செம்மையாக்கவும் எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம், காவலர்கள் தங்கள் பணிகளில் எத்தகைய குறுக்கீடும், இடையூறும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு, மக்களுக்கான தங்கள் கடமையை செவ்வனே செய்ய வழிவகை ஏற்படுகிறது. அப்போதேல்லாம் சமூக விரோதிகள் மீதும், தீவிரவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதே போன்று, தற்போதும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, மக்கள் எவ்வித பயமும் இன்றி அமைதியாக தங்களது வாழ்க்கையை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது.
ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக நிலைநாட்டப்பட வேண்டும் எனில், அந்த மாநிலத்தில் காவலர்கள் தங்கள் பணிகளில் எந்தவித குறுக்கீடும் இன்றி, தங்கள் பணிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டு காலமாக சமூக விரோதிகளைக் கண்டு காவலர்கள் அஞ்சிய துர்பாக்கியமான சூழ்நிலையை தலைகீழாக மாற்றி, சமூக விரோதிகள் காவலர்களைக் கண்டு அஞ்சும் சூழ்நிலையை நான் பொறுப்பேற்ற உடனேயே மீண்டும் உருவாக்கி உள்ளேன் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
எல்லோரும், எல்லாமும் பெற்று, வாழ்வில் வளம் பெறும் வகையிலான ஆட்சி அமைவதே சிறந்த மக்களாட்சி ஆகும். இவ்வாறான மக்களாட்சியில் தான், ஏழைகளும், வசதி படைத்தோருக்கு இணையான வசதிகளைப் பெற இயலும். எனவே தான், மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுள்ள இத்தருணத்தில், அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வளம் ஏற்படும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை எனது அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது.
வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளில் அனைத்து தரப்பு மக்களும் தன்னிறைவு பெறுவது ஒரு சிறந்த பொருளாதாரக் கோட்பாடாகும். அந்த வகையில், மக்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சில பொருட்களை, விலை இன்றி, எங்கள் அரசு வழங்கி வருகிறது. விலையின்றி இவ்வாறு வழங்குவதை “இலவசம்” என்று நாங்கள் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
ஏழை, எளியவர்களுக்கு இவ்வாறு பொருட்களை விலை இன்றி வழங்குவது மக்கள் நலன் பேணும் அரசின் கடமை ஆகும். எனவே தான், நான் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை, விலை ஏதுமின்றி வழங்க ஆணையிட்டேன்.
அதே போன்று, வாழ்வாதாரம் ஏதும் இன்றி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இயலாமல் உள்ள முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்தேன்.
இந்த அடிப்படையில் தான், பெண்களின் வாழ்க்கை வசதிக்காக மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் துவங்க உள்ளோம். ஆடம்பரத் தேவைகள் கூட அத்தியாவசியத் தேவைகளாக மாறி விட்ட இன்றைய நவீன யுகத்தில், குடும்பத் தலைவிகளின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட உள்ளன. அதே போன்று தான், அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக விளங்கும் மின் விசிறியையும் மகளிருக்கு வழங்க உள்ளோம்.
இதே போன்று, தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு, வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை “இலவசம்” என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் திட்டமாகவும்; கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் திட்டமாகவும் தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசே வழங்கும் அதே நேரத்தில், இது ஒரு நிரந்தரத் தீர்வு என்று எனது அரசு கருதவில்லை. மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்கு அரசை எப்போதும் சார்ந்து இராமல் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்று, தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களது பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான் எனது தலைமையிலான அரசின் எண்ணம் ஆகும்.
ஏழைகள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டுமெனில், ஏழை, எளிய மக்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது மக்கள் அரசின் கடமை ஆகும். இந்த அடிப்படையில், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் உன்னத நோக்கத்தோடு, வரும் ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் ஏழை, எளியோருக்கு தலா 4 ஆடுகள் வழங்கும் திட்டத்தை, அதாவது 28 லட்சம் ஆடுகள் வழங்கும் திட்டத்தை எனது அரசு செயல்படுத்த உள்ளது.
இந்த ஆடுகள் வழங்கும் திட்டமும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் துவக்கப்பட உள்ளது. ஏழை, எளியவர்களின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கும் இன்னொரு மகத்தான திட்டம் தான் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின்படி 5 ஆண்டுகளில், 60,000 கறவை மாடுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் வழங்கப்படும் ஆடுகள் மற்றும் கறவை மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பயனாளிகளுக்கே வழங்கப்பட்டு, ஏழை, எளியவர்களின் உரிமை நிலை நாட்டப்படும்.
நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம், மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல முன்னோடித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறேன். அந்த வகையில், என்னுடைய சிந்தனையில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட “தொட்டில் குழந்தைத் திட்டம்’’ ஆகும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பெண் சிசுவதை நடந்து கொண்டிருந்தாலும், எனது தலைமையிலான தமிழக அரசு மட்டுமே முதன் முதலாக சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடவும், குழந்தைகளை இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றவும் உறுதி பூண்டு, 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் “தொட்டில் குழந்தை திட்டம்’’ என்ற மகத்தான திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. 2001 ஆம் ஆண்டு, நான் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. பெண் சிசுக்கொலை நடைமுறையில் இருந்த, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, குழந்தை வரவேற்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கவனிக்கத் தக்க வகையில் இறங்கு முகமாக உள்ளதால், இந்நேர்வில் அரசின் தனிக் கவனம் தேவைப்படுவதை உணர்ந்து, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் தொடங்க எனது அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்துள்ளது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்னும் ஒரு முன்னோடியான திட்டத்தை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அந்தப் பெண் குழந்தையின் பெயரில் வைக்கப்படும் வைப்புத் தொகை 22,200 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாகவும்; இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அந்தப் பெண் குழந்தைகளின் பெயரில் வைக்கப்படும் வைப்புத் தொகை தலா 15,200 ரூபாயில் இருந்து தலா 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக, தங்கத்தின் விலை விண்ணை எட்டும் அளவு ஏறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகளிரின் நலன் காக்கும் வகையில், பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன் பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன், திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கக் காசு வழங்கவும்; கல்வியறிவு பெற்ற மகளிரை ஊக்குவிக்கும் வகையில், அந்தப் பயனாளிகள் பட்டம், பட்டயப்படிப்பு முடித்திருப்பின், அவர்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கக் காசுடன், திருமண உதவித் தொகையை
50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ள காரணத்தால் தான், ஆடுகள் வழங்கும் திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் கீழும், பெண்களையே பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கவும், மகளிரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
உண்மையான மக்கள் அரசு, சமூக நீதியை நிலை நாட்ட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதில் எனது தலைமையிலான அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காக்கும் வகையில் 11.7.2011 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு; மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்கு 20 விழுக்காடு; ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு; பழங்குடியினருக்கு 1 விழுக்காடு; ஆக மொத்தம், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்ந்து கடைபிடிக்கப்பட இந்த அரசாணை வகை செய்துள்ளதன் மூலம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. மேலும், வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட இந்த அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், வாழ்வில் முன்னேற்றம் பெற்று அதன் மூலம் சமூக, பொருளாதார மேம்பாட்டினை அடையும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கிப் பயிலும் விடுதிகள், அவர்கள் செம்மையாகக் கற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 1080 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில், 83 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது. அதே போல், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ, மாணவியர் தங்கும் 148 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட இந்த ஆண்டு 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் மாத உணவுப் படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும்; கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மாத உணவுப் படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல், விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தற்போது அளிக்கப்படும் மாத உணவுப் படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும்; கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டு அறிவுசார் மனித வளத்தை நம்பியே உள்ளதால், எனது தலைமையிலான அரசு அறிவுசார் மனித வள மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அறிவுசார் மனித வளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்குத் தடையின்றி, தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்த வகையில், மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து இடைநிற்றலைக் குறைக்கும் பொருட்டு, பத்தாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும்; மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும்; மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 2,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகை மாணவ, மாணவியர்களின் பெயரில் பொதுத் துறை நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் போது அந்த மொத்தத் தொகையான 5,000 ரூபாய் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். இது மாணவ, மாணவியரின் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை ஊக்குவிப்பதுடன், கல்லூரிப் படிப்பைத் தொடரவும் வாய்ப்பாக அமையும்.
மேலும், அறிவுசார் மனித வளத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, நமது அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்ட கணினி அறிவை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து +1, +2 மாணவ, மாணவியர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் மகத்தான திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் எனது தலைமையிலான அரசு துவங்க உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு பயன் தரக்கூடிய மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்யும் வகையில், தொழில் முனைவோர்களை ஈர்ப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும்.
பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டுமெனில் வேளாண்மை, தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி சீராக அமைய வேண்டும். எனவே, முதன்மை துறையான விவசாயம், கால்நடைத் துறை, மீனளம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக எனது தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களைத் தீட்டி உள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே வறுமை ஒழிவது மாத்திரம் அல்லாமல், பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்ற உண்மையை எனது தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான், ஏழை, எளிய குடும்பங்களில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.
இந்த அடிப்படையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக் கூடிய பல புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார் ஜெயலலிதா.
5 ஆண்டு கால அடிமைச் சங்கிலியை மக்கள் உடைத்து விட்டனர்: முதல்வர் ஜெயலலிதா
பதிந்தவர்:
தம்பியன்
15 August 2011
0 Responses to 5 ஆண்டு கால அடிமைச் சங்கிலியை மக்கள் உடைத்து விட்டனர்: முதல்வர் ஜெயலலிதா