Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற அறிக்கை தயாரித்தமை, அதனை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளித்துள்ளமை ஆகிய நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகும். இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களேயுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை சீர்குலைக்கும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் உலக நாடுகளில் தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

இலங்கை தற்போது புதிய சவால்களை எதிர்கொள்கின்றது. இதற்கும் படைகளின் பங்களிப்புகள் அவசியமாகும். சிறந்த பயிற்சி, ஒழுக்கம், அனுபவம் மற்றும் உத்வேகத்துடனேயே புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஆயுதப் போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வரும்போது காணப்பட்ட பொறுப்புணர்வுகள், தியாகபூர்வமான செயற்பாடுகள், அரசியல் தலைமைத்துவம் என்பனவும் சவால்களை எதிர்கொள்ள அவசியமாகும்.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சிறந்த முறையில் கையாண்டு கடந்த கால போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது போல் நிகழ்கால சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். இராணுவ வரலாறுகளில் இலங்கையைப்போன்று பெரும் தொகையான மக்களை களத்திலேயே எந்த நாடும் நிர்வகித்ததில்லை.

பயங்கரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களை மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாக மீட்டெடுத்து பாதுகாப்பான இடங்களில் படையினர் தங்க வைத்தனர். அரசாங்கம் அம்மக்களுக்கு தேவையான உணவு, மருந்து என அனைத்தையும் அனுப்பி வைத்தது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தப்பி வந்த பொதுமக்கள் மீது புலி உறுப்பினர்கள் துப்பாக்கி பிரயோகங்களை செய்தனர்.

ஏ 9 வீதி மீது தாக்குதல்களை மேற்கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல விடாது பயங்கரவாதிகள் தடுத்தனர். இராணுவம் கடல் உள்ளிட்ட மாற்று வழிகளை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்றது. இதற்கும் கூட கடல் புலிகளால் அச்சுறுத்தல் காணப்பட்டது.

இவ்வாறு உயிர் தியாகம் செய்து பொது மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த இராணுவத்தினரை ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் போர் குற்றவாளிகள் என்கிறது. அது மட்டுமின்றி சட்ட பூர்வ மற்றதும் அடிப்படை தன்மையற்றதுமான வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்திய இலங்கைக்கு எதிரான அறிக்கையினையும் நிபுணர் குழுவினர் தயாரித்தனர்.

இந்த அறிக்கையானது ஐ.நா. வின் உத்தியோகபூர்வ அறிக்கை இல்லை. ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட வேண்டியதை சர்வதேச மனித உரிமைகள் பேரவையிடம் கையளித்ததன் மூலம் இந்த விவகாரங்களில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இதன் பின்னணியிலும் இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் செயற்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். இவர்களின் பிரதான இலக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதாகும். அதனூடாக இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதாகும்.

எனவே சர்வதேச சமூகம் உண்மையான நிலவரங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். நாளுக்கு நாள் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களை நம்பாது அரசாங்கத்தின் வடக்கு கிழக்கிற்கான பணிகளை அவதானிக்க வேண்டும். தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றனர். தற்போது நாட்டில் 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி வேகம் காணப்படுகின்றது.

இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் முழு அளவில் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்கள் இல்லை. 95 வீதமான பாடசாலைகள் இயங்குகின்றன. 90 வீதமான மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா அரசுகளின் பங்களிப்புகளுடன் வடக்கு கிழக்கில் பாரிய கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதைத்தவிர அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் வடக்கில் அரசு முன்னெடுத்துள்ளது.

இதுதான் உண்மையான விடயமே தவிர இராணுவ மயமாக்கலோ, தேர்தல் மோசடிகளோ நடைபெறுவதில்லை. சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன.

வாகனத்தை செலுத்தியவருக்குத்தான் பயணம் தொடர்பான முழு விபரமும் தெரியும். வேடிக்கை பார்த்தவர்களுக்கு அல்ல என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச போர் விதிமுறைகளும் சட்டமும் காஸாவிற்கும் இலங்கைக்கும் ஒரே விதத்தில் பொருந்தாது என்றார்.

0 Responses to ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களே உள்ளனர்: ஜி.எல். பீரிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com