Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் பாரம்பரிய அடையாளங்களைப் பேணுவதிலும் அவற்றை புலம்பெயர் தமிழ் இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் தனது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு, மாபெரும் அணிகளுக்கிடையிலான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை நடத்துவதில் பெருமையடைகின்றது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகிய கிளித்தட்டு பல நூற்றாண்டுகளாக மருதநில வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களால் விளையாடப்பட்டு வந்த ஒன்று என்பதுடன், இன்று இது தமிழீழத்தின் தேசிய விளையாட்டுகளில் ஒன்றாக தமிழீழம் எங்கும் பரவலாகவும் விளையாடப்பட்டு வருகின்றது.

இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது இளையோர்கள் பலர் தமது பாரம்பரியம், அடையாளம், கலாசாரம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வங்காட்டி வருகின்றனர். அதனடிப்படையில் எமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடத்துவதற்கு நாம் எடுத்த முயற்சிக்கு பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இளையோர் மத்தியில் இவ்விளையாட்டை பழகுவதிலும் இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டுவதிலும் ஆர்வம் காணப்படுகின்றது.

தமிழர்களாகிய நாம் ஒரு செழிப்பான பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்கள். அப்பாரம்பரிய அடையாளங்களை கால ஓட்டத்தில் அழிந்துவிடாது காத்து எமது அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துவதில் நாம் பெருமுயற்சி எடுத்து வருகின்றோம். குறிப்பாக சிறீலங்கா அரசு தமிழர்களின் பாரம்பரியத்தை சிதைப்பதில் மும்முரமாகச் செயற்பட்டு வரும் இக்காலகட்டத்தில், நாம் எமது பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கும் முயற்சியைப் பன்மடங்காக்கி அவற்றை வளர்த்தெடுப்பதில் முன்னிற்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இப்போட்டி நிகழ்வைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையிலும் பங்குபெறும் அணிகளை ஊக்கப்படுத்தும் விதத்திலும் கிளித்தட்டுக்கான ‘தமிழீழ பாரம்பரிய கேடயம்’ எனும் வெற்றிக்கேடயம் ஒன்றை கனடா தமிழ் இளையோர் அமைப்பு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அணிகளுக்கிடையிலான இப்போட்டி ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் அனைத்தும் தமிழர் அடையாளங்களை முதன்மைப்படுத்தும் வகையில் தமது அணிகளுக்குப் பெயரிடுவது என முடிவு செய்துள்ளன.
எமது இம்முயற்சி வெற்றியளிக்கவும், எதிர்காலத்தில் இது போன்ற செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுக்கவும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு அனைவரவு ஆதரவையும் வேண்டி நிற்கின்றது.

கனடா தமிழ் இளையோர் அமைப்பு.

0 Responses to கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்தும் மாபெரும் கிளித்தட்டுப் போட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com