கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க, மரணத்தின் விளிம்பில் நிற்கிறார் பேரறிவாளன். தன் மகனுக்காக, சட்டத்தின் அத்தனை கதவுகளையும் தட்டித் தட்டி சோர்ந்து கிடக்கிறார் அந்தத் தாய் அற்புதம் அம்மாள்!
'என் பையனுக்கும், ராஜீவ் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறிவை வெளியே கொண்டுவர்றதுக்கு எத்தனையோ தடவை போராடினோம். சட்டம் எங்க பக்க நியாயத்தை, கருத்தைக் காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்குதே.
21 வருஷங்களா ஒவ்வொரு நிமிஷமும் 'என்ன நடக்குமோ’ன்னு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். நல்லது நடக்கும்கிற நம்பிக்கை பொடியாப் போயிடுச்சே...
13 ஈழத் தமிழர்கள், 13 இந்தியத் தமிழர்கள்னு சரிபாதியாச் சேர்த்து இந்த வழக்கை ஜோடிச்சு இருக்காங்க. 1991, ஜூன் மாசம் 11-ம் தேதி, அறிவை விசாரிக்கணும்னு வந்தாங்க. நாங்களே அனுப்பிவெச்சோம். ஆனா, அடுத்த சில நாட்களில் பத்திரிகைகளில், 'பேரறிவாளனைத் தேடிக் கண்டுபிடிச்சோம்’னு செய்தி வந்தது.
படுகொலை செய்யப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ். அதைப்பத்தி விசாரணை வெளிப்படையா நடந்திருக்கணும் இல்லையா..? என் பையனைப் பிடிச்சிட்டுப் போனப்ப, அவனுக்கு 19 வயசு. அப்ப தடா சட்டம் இல்லை. ஆனா, அதுக்கு அப்புறம் இந்த வழக்கை தடாவுக்குக் கீழே கொண்டுவந்தாங்க.
தமிழ்நாட்டுல தடாவுக்குக் கீழே வந்த வழக்கு இது ஒண்ணுதான். அந்த சட்டப்படி, 20 வயசுக்கு மேற்பட்டவங்களைக் கைது செய்யலாம், இதற்கு முன், 'அவர் எந்தக் குற்றச் செயல்களிலாவது ஈடுபட்டிருக்காரா, அவர் குடும்பம் குற்றம் ஏதும் செய்திருக்கா?’னு பார்ப்பாங்க.
இந்த வழக்கில் எதையுமே கடைப்பிடிக்கலை. ஒவ்வொரு முறை என் மகன் நீதிமன்றத்துக்கு வரும்போதும் அவனோட பேசுறதுக்குக்கூட நாங்க அவ்ளோ கஷ்டப் பட்டோம்...
விரும்பி வாக்குமூலம் கொடுத்ததா சொல்றாங்க. ஆனா, சிறையில் எப்படி வாக்குமூலம் வாங்குவாங் கங்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியாததா? அதுவும் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார். அதை நீதிமன்றத்தில் நிராகரிச்சுடுவாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, இந்த வழக்கில் அந்த வாக்குமூலத்தைச் சேர்த்துட்டாங்க.
உச்ச நீதிமன்றம், 'இந்த வழக்கு தடாவின் கீழே விசாரிக்கப்பட்டது தவறு’னு சொல்லி இருக்கு. ஆனா, வாக்குமூலத்தை மட்டும் எப்படி ஏத்துக்கிறாங்கனு தெரியலையே?
கைது செய்யப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டாங்க. மூணு பேருக்கு ஆயுள் தண்டனை. மீதி நாலு பேருக்கு மரண தண்டனை. இதில் இரண்டு பேர் இந்தியத் தமிழர்கள், மீதி ஈழத் தமிழர்கள். நளினிக்கு ஆயுள் தண்டனையாக் குறைச்சாங்க. இப்ப முருகன், சாந்தன், பேரறிவாளன் மூணு பேரோட கருணை மனுவை 12 வருஷங்கள் கழிச்சு நிராகரிச்சிருக்காங்க. இது நியாயமா?
ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தாங்கிறதுதான் என் மகன் மேல் இருக்கும் குற்றம். அதுகூட ஒரு பெட்டிக்கடைக்காரர் சொன்னதை வெச்சுப் போட்டிருக்காங்க. அந்த 'பெல்ட் பாம்’ஐ யார் செஞ்சாங்கனு இன்னிக்கு வரை யாருக்குமே தெரியலை.
சோனியா காந்தியே, 'எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, இவர்களைத் தூக்கிலிடுவதில் விருப்பம் இல்லை. உங்களிடம் (ஜனாதிபதியிடம்) கருணை மனு வரும்போது, இவர்களுக்குத் தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’னு கடிதம் எழுதி இருக்காங்க.
அப்படி இருந்தும் கருணை மனு நிராகரிக்கப்பட்டு இருக்கு. முன்பு பெட்டிக்கடைக்காரரின் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொன்ன நீதிபதிகள் பின்னர் ஏனோ ஏத்துக்கிட்டாங்க. மரண தண்டனை அளிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுட்டாங்க.
ஏ-1 பிரிவில் இருக்கும் நளினிக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருக்காங்க. ஆனா, ஏ-18 அதாவது, 18-வது குற்றவாளியா இருக்கும் என் மகனுக்குத் தூக்குத் தண்டனையா? நளினிக்குத் தண்டனை குறைச்சதுக்கு அப்புறம்தான், பிரியங்கா போய் சந்திச்சிருக்காங்க. மரண தண்டனை கூடாதுனு ஊருக்கெல்லாம் பிரசாரம் பண்ணிட்டு இருக்கேன். ஆனா, கடைசியா என் மகனுக்கே இந்த நிலைமையா?
பரோலில்கூட விடாம, பரீட்சை எழுதவிடாம, அவனோட வசந்த காலத்தை எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்குறான்யா... யாரும் முகம் சுளிக்கிற மாதிரிகூட பேச மாட்டான். அவன் 10-ம் கிளாஸ் படிக்கிறப்ப என்.சி.சி. ஸ்டூடன்ட். இவனுக்கு என்ன ரேங்க் கொடுக்கறதுனு அதிகாரிங்களே திண்டாடி இருக்காங்க.
பெரியார் கொள்கை வழி வந்த குடும்பம்கிறதால பொது நலத்துக்காக வாழணும்னு அவன் முடிவு செஞ்சதுதான் தப்பாப்போயிடுச்சு. அப்படிப்பட்ட புள்ளையைப் பெத்த எனக்கு இந்த சமூகம் 'கொலைகாரனைப் பெத்தவ’னு பட்டம் கொடுக்குது!
அறிவோட அப்பா குயில்தாசன் மனசு உடைஞ்சு வீட்டிலேயே கிடக்கார். அவர் நல்ல கவிஞர். ஆனா, இப்ப எல்லாம் பேனா எடுத்தா, சிறைபற்றி மட்டுமே எழுத வருதுங்கிறதால எதையும் எழுதறது இல்லை.
அறிவு கேட்கிறது எல்லாம் உயிர்ப் பிச்சை இல்லை... மறுக்கப்பட்ட நீதி! மனுஷங்க வாழ்ற நாட்டுலதானே நானும் இருக்கேன்... இங்க யாருக்கும் மனிதாபிமானமே இல்லையா?''
அந்த அம்மாவின் கண்ணீருக்கு காலம் தரப்போகும் விடை என்ன?
இன்னும் நம்பிக்கை இருக்கிறது!
கருணை மனு நிராகரிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றப்போகும் தேதியை முடிவு செய்வார்கள்.
இந்த நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க முடியும் என்கிறார்கள், மரண தண்டனைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள்.
நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 72-வது பிரிவு இந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவர்களுக்கு வழங்குகிறது.
சட்டப் பிரிவு 161, மாநில ஆளுநர்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது!
அவர்கள் குற்றவாளிகள் தான்!: சொல்கிறார் ரகோத்தமன்!
ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் ஓய்வு பெற்று சென்னையில் இப்போது வசிக்கிறார். அவரைச் சந்தித்தோம்!
'' மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமா... கூடாதா என்று வாதங்கள் தொடங்கி உள்ளன. உங்கள் கருத்து என்ன?''
''ஒரு மனித உயிரை இன்னொரு மனிதன் எடுக்க எந்தவித அதிகாரமும் இல்லை. ஆனால் மரண தண்டனையை ஒரு குற்ற வாளிக்குக் கொடுக்கச் சொல்லி சட்டத்தில் இருக்கும் வரை எந்த நீதிபதியும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. ஆகவே 'சட்டத்தில் இருந்தே மரண தண்டனையை எடுத்து விடலாமே?’ என்பதுதான் இன்று எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்க முடியும்.
கொடூரமான குற்றங்கள் பெருகும்போது அதைச் செய்யும் குற்றவாளிகள் மேலும் மேலும் உருவாகி இந்தச் சமூகத்தையே அழிப்பார்கள். ஆகவே இந்த மரண தண்டனை வேண்டும்.' என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ 'வளர்ந்த சமூகத்தில் இதுபோன்ற மரண தண்டனை விதிப்பது காட்டு மிராண்டித்தனம். இந்தத் தண்டனையைச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.' என்கிறார்கள்.
கொடூரமான படுகொலைகளைச் செய்கிற குற்றவாளிகளை மரண தண்டனை மூலம் தண்டித்தால்தான் அப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது என்னைப் பொறுத்தவரை வீண் வாதம். ஏனென்றால் பலதரப்பட்ட கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தும் இந்த நாட்டில் படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எதிரி நாட்டுக்கு இரகசியத்தை விற்பதுபோன்ற நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஒருவன் கொடூரக் குற்றம் செய்தால் அப்போது அவனுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கலாம்!''
ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையே இன்னமும் முடியவில்லை. 'ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கைப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பல்நோக்கு விசாரணைக் குழு என்று இன்னொரு அமைப்பை நியமித்தார்களே... அது என்ன ஆனது? அதெல்லாம் முடியாத நிலையில் எந்த அடிப்படையில் சி.பி.ஐ. சொன்னதை மட்டும் கேட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன்... மூவருக்கும் மரண தண்டனை விதிக்கலாம்?’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்களே?
விசாரணை ஏஜென்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஜெயின் கமிஷனோ பல்நோக்கு விசாரணைக் குழுவோ... சி.பி.ஐ. கைது செய்து பிடித்த குற்றவாளிகள் பற்றி எதுவுமே கருத்து சொல்லவில்லை. அவர்கள் தலையிடவும் இல்லை. எங்களால் கைது செய்யப் பட்டவர்களை நிரபராதிகள் என்றும் சொல்லி விடவில்லை. அவர்கள் சொன்னது - 'புலிகள் இயக்கத்திடம் இந்தக் காரியத்தைச் செய்யத் தூண்டிய வேறு ஏதாவது சக்திகள் பின்னணியில் இருக்கின்றனவா?’ என்ற கோணத்திலும் விசாரிக்கும்படி சொன்னார்கள். அதற்கும் சி.பி.ஐ-க்கும் சம்பந்தமே இல்லை. இதை ஒரு வாதமாக வைத்து சி.பி.ஐ.யைத் திசை திருப்பக் கூடாது. எங்களைப் பொறுத்த வரை அந்தக் கொலை வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது!
இரண்டு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காகவா பேரறிவாளனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்கிறார்களே?
இது ஒரு சப்பையான வாதம்தான். பெல்ட் குண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? இங்கு எப்படி கொண்டுவரப்பட்டது என்கிற விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.’ என்று நான் ஒரு பேட்டியில் சொன்னேன். அதை மேற்கோள் காட்டி 'பெல்ட் குண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அதற்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்கு மரண தண்டனையா?' என்று இப்போது வினா எழுப்புகிறார்கள்.
நான் அப்படிச் சொன்னது வாஸ்தவம்தான். ஆனால் அந்த பெல்ட் குண்டு எங்கு இருந்து தயாரிக்கப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. அதை இயக்கத் தேவைப்பட்ட ஸ்பெஷல் பேட்டரிகளை பேரறிவாளன் மூலம்தான் ஒற்றைக் கண் சிவராசன் பெற்றான் என்பதற்கு சி.பி.ஐ.யிடம் ஆதாரங்கள் இருக்கின்றன.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த பொருட்களில் அந்த பேட்டரியின் பாகங்களை நாங்கள் கைப்பற்றினோம். யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் இயக்கத் தலைவர்களுடன் சிவராசன் இரகசியமாகத் தொலைபேசியில் பேச தேவைப்பட்ட பேட்டரியும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் பேரறிவாளனே பொய்யான விவரங்களைக் கொடுத்து அவரே டெலிவரி எடுத்துச் சென்றதை விசாரணையில் கண்டுபிடித்தோம். சிவராசனுக்காகப் புது மோட்டார் சைக்கிளை அவர் வாங்கிக் கொடுத்ததையும் அறிந்தோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பிரபாகரனை பேரறிவாளன் ரகசியமாக சந்தித்துத் திரும்பியதற்கும் ஆதாரங்கள் இருந்தன. பிரபாகரன் சொல்லித்தான் 'சாத்தானின் படைகள்’ என்ற புத்தகத்தை தமிழகத்தில் இரகசியமாக பேரறிவாளன் அச்சடித்தார். 'பிரின்டடு இன் யு.கே. இது ஒரு விடுதலைப் புலிகள் பிரசுரம்' என்கிற வாசகங்கள் அதில் இருந்தன. அதற்கான தொகையை திருச்சி சாந்தன் மூலம் இவர் பெற்று இருக்கிறார்.
அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் பார்த்தால் 'ராஜீவ் காந்தியை ஏன் கொல்ல வேண்டும்?’ என்கிற குறிக்கோளை வெளிப்படுத்திய முக்கிய ஆவணம் இது. இதற்கு மேல் அவரைக் குற்றவாளி என்று சொல்ல வேறு என்ன ஆதாரம் வேண்டும்?''
'ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?
'1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது!
ஜூனியர் விகடன்
கேட்பது உயிர்ப் பிச்சை அல்ல! மறுக்கப்பட்ட நீதி! - அவர்கள் குற்றவாளிகள் தான்!: சிபிஐ
பதிந்தவர்:
தம்பியன்
17 August 2011
We are Thamil so somebody will kill us
We cannot expect a good judgement from the EVIL indian Congress or their devils. We have to try full democratic force of Tamils around the World