மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே! ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் சறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்க! தமிழக அரசு ஆளுநர் மூலம் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்! என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைப்பட்டிருக்கும தோழர்கள், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களின் கருணை மனுவை நடுவண் உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்யலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியவுடனேயே, அவசர அவசரமாக கருணை மனுவை தள்ளுபடி செய்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
ராஜீவ் கொலை வழக்கிற்கு தடாச்சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இது மிகப்பெரும் முரண்பாடாகும்.
இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய பொலிஸ் அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சித்து அதற்காக தண்டனையும் பெற்றவராவார்.
இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அதனை நீதிமன்றத்தில் சாட்சியமாகத் தாக்கல் செய்தார். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.
இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.
அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில அரசிடம் எழுத்தாளர் சுவேதாதேவி முறையிட்டதன் பேரில், மாநில ஆளுநர் தலையிட்டு அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி யிருக்கின்றனர்.
1960களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலன் என்பவருக்கு குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்ட பிறகும், கேரள அரசு தமது ஆளுநரின் மூலம் அவரது தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்திருக்கிறது.
எனவே, இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி, மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கான அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்குகின்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னையில் 17.08.2011 அன்று சைதை பனகல் மாளிகை முன்பு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
உணர்வாளர்களும், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் இவ்வார்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி
0 Responses to மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே!: பெ.மணியரசன்