Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள்.

சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து அதிரடியாக வெளியேறியது குறித்து தமிழக பத்திரிகைகள் சூடு பறக்க எழுதி வருகின்றன.

ஆனால் முக்கியமான கேள்விகள் சிலதை அப்பத்திரிகைகள் வசதி கருதி கேட்காமலும் விட்டும் வருகின்றன.

கேள்வி: 01

ஜெயலலிதா, கலைஞர் இருவரும் சிறீலங்கா புகழ் மகிந்த ராஜபக்ஷவைப் போல ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற சனி மாற்றம் ஜெயலலிதாவின் ஆட்சியையே பறித்துவிடக்கூடியது என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர்கள் உசுப்பேற்றி விட்டிருக்கலாம். அதற்கேற்ப ஒரு பரிகாரம் வேண்டுமெனவும் சோ. ராமசாமி போன்ற இந்துத் தீவிரவாதிகள் சொல்லியிருக்கலாம். சசிகலா குடும்பத்தை விரட்டி அந்த சனி தோஷத்திற்கு பரிகாரம் தேடியிருக்கலாம். ஏற்கெனவே சசிகலாவுடன் மாலை மாற்றி பரிகாரம் செய்த ஜெயலலிதா அதுபோல இந்த நாடகத்தையும் ஏன் அரங்கேற்றியிருக்கக் கூடாது ? இதை ஏன் எவரும் மூட நம்பிக்கைகளின் பக்கமாகப் பார்க்கவில்லை..?

கேள்வி: 02

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஜெயலலிதாவின் அதிமுகவை தாண்டி பெரிய விடயமாக பேசப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த விவகாரத்தை உடனடியாக திசை திருப்ப இப்படியொரு நாடகம் அவசியம். இப்போது தமிழக ஊடகங்கள் கோபாலசாமி, சீமான் போன்றவர்களின் முல்லைப் பெரியாறு முழக்கங்களை கைவிட்டுவிட்டன. விஜயகாந்த் கிறிஸ்மஸ் பிரியாணி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். ஸ்டாலின் வைத்தியசாலை போயுள்ளார், அரசியல் பேசாத ஏ.ஆர்.ரஹ்மான் டேம் 999 ற்காக பேச வேண்டிய நெருக்கத்தை சந்தித்துள்ளார். வண்டலூர் செக்ஸ்புலி, டெல்லி குரங்கு மனிதன் போல சசிகலா விவகாரம் ஒரு கவனத்திசை திருப்பலாக ஏன் இருக்கக்கூடாது ?

கேள்வி: 03

சசிகலா குடும்பம் ஊழல் புரிந்தது உண்மைதான் என்றாலும், ஜெயலலிதா ஊழல் புரியாதவர் அல்ல, அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கில் ஏதாவது திருப்பத்தை ஏற்படுத்த அவர் முயல்கிறாரா என்பது அவதானிக்கத்தக்கது. காரணம் ஜெயலலிதா குறித்த உண்மைகளை சசி குடும்பம் நீதிமன்றில் வெளியிட்டாலும் கட்சியில் இருந்து விலத்தப்பட்ட பின் வெளியிடுவதால் அவை அனைத்தும் காழ்ப்புணர்ச்சி என்ற தலைப்பிற்குள் வந்துவிடும். மேலும் நிருபாமாராவ் – ஜெயலலிதா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். கொஞ்சம் பின்னால் போய் பார்த்தால் சசிகலாவின் கணவர் நடராஜன் இங்கிலாந்து மாவீரர் நாளில் சென்ற ஆண்டு பேசியுள்ளார். எனவே சசி குடும்பம் நீக்கப்பட்டு, காங்கிரஸ் – ஜெயலலிதா உறவுக்கான அஸ்த்திவாரமிடப்படுகிறதா ? ஜெயலலிதாவை தூய்மை மிக்கவராகக் காட்டி, காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து தேர்தலை சந்திக்க முயல்கிறதா..? ஜெயலலிதா புனிதம் பெற்றுவிட்டார் என்று சுப்பிரமணிய சாமி சொன்னது எதற்காக ?

கேள்வி: 04

இத்தனைக்குப் பின்னரும் சசிகலா குடும்பத்தினர் தமது தரப்பு நியாயங்களை கூறாமல் மௌனம் காப்பது எதற்காக? ஜெயலலிதாவின் உண்மைகளை வெளிவிடாதது ஏன்? சசிகலா குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெறாமலே சகட்டுமேனிக்கு பத்திரிகைகளில் எழுதிக் குவிப்பது சரியா..? குற்றவாளியின் வாக்குமூலம் இல்லாத வழக்காக இந்த விவகாரம் ஒரு பக்கப் பாதையில் நகர்வது சரியா..? இந்த நிலையில் தமிழக போலீஸ் சசிகலா குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுத்ததா? இது குறித்த போலீஸ் அறிக்கை வெளிவராதது ஏன்?

கேள்வி: 05

ஜெயலலிதாவிற்கு தடிமன் வந்தால் தும்மல் என்று காலைச் செய்திக்கு அறிக்கைவிடும் கருணாநிதி மூச்சுப்பேச்சு இல்லாமல் இருப்பது எதற்காக ? மேலும் காங்கிரசும் கை கழுவிப்போகப் போகிறது என்பதா ஸ்டாலின் இதயத்தை பாதித்த அதிர்ச்சிக்கான காரணம்..? சன் டி.வியிடம் சசிகலா குடும்பம் பணம் வாங்கியுள்ளது என்றால் மாறன் குடும்பமும் பல்டியடிக்கப்போகிறதா..?

இந்த ஐந்து கேள்விகளையும் மனதில் வைத்து சசிகலா விவகாரத்தை சிந்தித்தால் மேலும் பல புதிய விடைகள் கிடைக்கலாம். உலக அரசியலும், பெரும் போர்களும் பூவா தலையா போட்டுப்பார்த்து எடுக்கப்பட்ட முட்டாள்தனமான முடிவுகளே என்பதை எண்ணிப் பார்த்தால் இதில் மறைந்துள்ள வெளிவராத மர்மப் பித்தை கெல்லி எடுக்கலாம்.

இந்த ஐந்து கேள்விகளும் ஊகங்களும் சரியாக இருந்தால் எதிர்காலத்தில்:

01. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெறலாம். (ஏற்கெனவே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது)

02. ஜெயலலிதா – காங்கிரஸ் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்கலாம். (நிருபாமாராவ் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டார்)

03. சசிகலா குடும்பம் யாதொரு தண்டனையும் பெறாது. (இதுவரை அவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படவில்லை. திமுகவில் ஊழல் செய்தவரை சிறையில் போடும் ஜெயலலிதா இவரை மட்டும் போடாதது ஏன்)

04. ஈழத் தமிழர் விவகாரம் ஜெயலலிதாவால் குப்பையில் வீசப்படும். (இப்போது அவர் அதை பேசுவதே இல்லை)

05. ஜெயலலிதா ஈழத் தமழருக்காக பேசக் காரணம் நடராஜனின் தப்பான வழிகாட்டலே என்று அடுத்த செய்தி வரலாம்.

06. ஜெயலலிதாவின் பதவியை காக்கவே அவர் இவைகளை செய்தார் இது அறிவு பூர்வமான விடயம் என்று சோ ராமசாமி பின்னர் ஒரு நாள் கூறலாம். விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு அடித்ததை நியாயப்படுத்திய சோ ராமசாமிக்கு இது பெரிய வேலை இல்லை.

எழுத்து: அலைகள் தென்னாசிய அரசியல் சிந்தனைப் பிரிவு 23.12.2011

1 Response to புலி ஆதரவு நடராஜனை புறந்தள்ளி ஜெயலலிதா – காங்கிரஸ் உறவுக்கு பாலம் அமைக்கப்படுகிறதா...

  1. கருநாயை விரட்டி ஓநாயை தழுவிய தமிழகத் தமிழர்கள் மீண்டும் கருநாயை தழுவலாம், தமிழகத்தில் மூன்றாவது சக்தியாக தமிழ் தலைவர்கள் ஓரணியில் தோற்றம் பெறாத வரையில்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com