பாகிஸ்தானில் கடத்திச் சென்ற 15 பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்று விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியிலிருந்து கடந்த மாதம் கடத்தப்பட்டவர்களாவர்.
இவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷனுல்லா இஷான் தெரிவித்துள்ளார். கைபர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களது சடலம் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் வீசப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் இஷானின் இந்த அறிவிப்பை தலிபான் அமைப்பின் தலைமை உறுதி செய்யவில்லை.
கடந்த டிசம்பர் 23ஆம் திகதி இராணுவத்துக்கு எதிராக தலிபான் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 15 பாதுகாப்புப் படையினரைக் கடத்திச் சென்றனர். இவர்களை விடுவிக்க சிறையில் உள்ள சில தலிபான்களை விடுவிக்க வேண்டும் என அப்போது கோரிக்கை விடுத்திருந்தனர்.
கைபர் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து தலிபான் அமைப்பினர் இத்தாக்குதலை மேற்கொண்டனர். இதுபோன்ற பல பழிவாங்கும் தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாக இஷான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தலிபான் கமாண்டர் கம்ரான் காலித் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலிபான்களின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் இராணுவத்துக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாக தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் மெளவி ஃபகிர் முகமட் தெரிவித்த போதிலும் அதை இஷான் மறுத்துள்ளார்.
0 Responses to கடத்திச் சென்ற 15 பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்ற தலிபான்கள்!