மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹசாரேவின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.
டாக்டர். மஹேந்திர கவேடியா இது பற்றி தெரிவிக்கையில் ஹசாரே, treadmill மற்றும் சைக்கிளில் தற்போது நடைபயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளார். இடைவிடாது 15 நிமிடங்களுக்கு அவரால் செய்ய முடிகிறது. அவர் இப்போது சோர்வடைவதில்லை. நன்கு உஷாராக இருக்கிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை வைத்திய அதிகாரிகளுடன் மேற்கொள்ளும் கூட்டத்தின் பின்னர், ஹசாரேவை எப்போது விடுவிப்பது என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
இதேவேளை உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அன்னா ஹசாரே பிரச்சாரம் செய்ய மாட்டார் என ஹசாரே குழுவின் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
வலிமையான லோக்பால் மசோதா நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வில்லை என குற்றம் சுமத்தியிருந்த ஹசாரே, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், வலிமையான லோக்பாலுக்கு ஆதரவு தெரிவிக்காத கட்சிகளை எதிர்த்தும் தீவிர பிரச்சாரம் செய்ய போவதாக முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மத்திய அரசை கண்டித்து கடந்த வாரம் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொள்ள தொடங்கினார். எனினும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உண்ணாவிரதத்தை 2 வது நாளிலேயே முடித்து கொண்டார்.
இந்நிலையில் அவரை புனே நகரில் உள்ள மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்த கிரண் பேடி பின்னர், நிருபர்களை சந்தித்த போது, ஹசாரேயின் நுரையீரலில் நோய்த்தொற்று உள்ளது. இச்சூழ்நிலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவோ, வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளவோ கூடாது என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹசாரேயின் உடல் நல ஆரோக்கியத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு, அவருக்கு இப்போது ஓய்வு தேவைப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை எமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஹசாரே குழுவினரின் கூட்டம் நடைபெறும்.
அதில் ஹசாரே கலந்து கொள்ள மாட்டார் என்கிற போதும் அவர் என்னிடம் மருத்துவமனையில் பகிர்ந்து கொண்ட தகவல்கள், ஆலோசனைகள் என்பவற்றை இக்கூட்டத்தில் தெரிவிப்பேன். பின்னர் எமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதில் முடிவு எடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
0 Responses to ஹசாரேவின் உடல் நிலை தேறி வருகிறது: வைத்தியர்கள்