தமிழ் மக்களின் துயர்துடைக்கப் பாடுபட்ட அஞ்சா நெஞ்சன் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் நான்கு வருடம் பூர்த்தியாகின்றது. கடந்த 2008 ஆம் வருடம் முதலாம் திகதி, வருடம் பிறந்து சில மணி நேரங்களில் கயவர்களின் துப்பாக்கிச் சூட்டில் மகேஸ்வரன் இறைவனடி சேர்ந்தார்.
புதுவருடப் பிறப்பன்று கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சிவனை வழிபடுவதற்காக தனது சின்ன மகளுடன் புறப்பட்டார் மகேஸ்வரன். பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த அவர் ஆலயத்தை சுற்றிக் கும்பிட்டு விட்டு வாங்கிய காளாஞ்சியுடன் ஆலயத்தின் பிரதான வாசலில் விழுந்து கும்பிட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஆலயத்துக்குள் அதுவும் சிவனது வாசஸ்தலத்தில் இத்தகையதொரு விபரீதம் நடக்கும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. அந்தோ பரிதாபம். படுகாயமடைந்த மகேஸ்வரனின் உயிர் பிரிகின்றது. அவருடன் ஆலயத்துக்கு சென்ற சின்ன மகள் பவித்திரா பரிதவித்து நிற்கின்றாள்.
ஆலயத்தில் வழிபாட்டிலிருந்த பக்தர்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு பதறியடித்து சிதறி ஓடுகின்றனர். மகேஸ்வரன் சுடப்பட்ட விடயம் காட்டுத் தீ போல் பரவுகிறது.
அவரது மனைவி, பிள்ளைகள் உட்பட தமிழ் நெஞ்சங்கள் அழுது புலம்பின.
தமிழ் மக்களுக்காக 2000 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தவர் தான் மகேஸ்வரன்.
குறுகிய காலத்தில் நாடாளுமன்ற உறுப்பின ராகி இந்து கலாசார அமைச்சராகி அவர் சாதித்த சாதனைகள் ஏராளம்... ஏராளம்.
இனப் பிரச்சினை மற்றும் யுத்தத்தினால் தமிழ் மக்கள் படும் வேதனைகள், சோதனைகள் கண்டு பொங்கியெழுந்த மகேஸ்வரன், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அரசியலில் பிரவேசிக்கத் திட்டமிட்டார்.
தேசிய கட்சி ஒன்றின் மூலமாக அரசியலில் பிரவேசித்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஓரளவுக்காவது தீர்க்க முடியும் என்று எண்ணினார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார்.
தேசிய சிங்களக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குடாநாட்டில் வெல்லவே முடியாது என்று பலரும் எண்ணியிருந்த காலகட்டமது. இருந்த போதிலும் தனது செல்வாக்கினாலும் மக்களைக் கவரும் அவரது செயற்பாட்டினாலும் அவர் யாழ்ப்பாணத்தில் அமோக வெற்றி பெற்றார்.
தேர்தலில் வென்றதும் அவர் செயற்பட ஆரம்பித்தார். தமிழ் மக்களின் துன்ப, துயரங்களைப் போக்குவதற்காக பல போராட்டங்களில் ஈடுபட்டார். குடாநாட்டில் எரிபொருட்களின் விலையினைக் குறைக்குமாறு நாடாளுமன்றத்துக்கு மாட்டு வண்டியில் சென்றும் போராட்டம் நடத்தினார்.
2001 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது யாழ். மாவட்டத்தில் இரண்டாவது தடவையாகவும் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். அவரின் திறமையினைக் கண்ட அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகேஸ்வரனுக்கு இந்து கலாசார அமைச்சர் பதவி வழங்கினார்.
இந்து கலாசார அமைச்சராக பதவி வகித்த 3 வருட காலத்தில் மகேஸ்வரன் ஆற்றிய பணிகள் அளப்பரியன. இரண்டாவது உலக இந்து மாநாட்டினை நடத்தினார். தீபாவளியை தேசிய விழாவாகப் பிரகடனப்படுத்தினார்.
இந்து கலாசார அமைச்சின் மூலம் இந்து ஆலயங்களைப் புனரமைத்தார். குடாநாட்டில் பல குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்தார். அமைச்சிலிருந்து 24 மணி நேரம் சேவகனாக அவர் பணியாற்றினார்.
2004 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திகா குமாரதுங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது குடாநாட்டில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியத்தின் நன்மை கருதி குடாநாட்டில் போட்டியிடாது தலைநகர் கொழும்பில் அவர் போட்டியிட்டார்.
கொழும்பில் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மகேஸ்வரன் 55 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
2004 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சமயம் கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் மகேஸ்வரன் எம்.பி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மயிரிழையில் உயிர் தப்பிய அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் எம். ஜி. ஆரைப் போல் வெற்றி பெற்றார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும் மக்களுக்கான தனது சேவையினை அவர் தொடர்ந்தார். தேசியக் கட்சியில் அங்கம் வகித்த போதும் தமிழ் மக்களுக்கு எதிரான அவசரகால சட்டத்தினை மகேஸ்வரன் எதிர்த்தே வந்தார்.
கட்சியின் தலைமைப்பீடம் அவசரகால சட்டத்தினை ஆதரிக்குமாறு பல தடவைகள் வற்புறுத்திய போதும் மகேஸ்வரன் அதற்கு இணங்கவே இல்லை. உயிரிழக்கும் வரை அவசரகால சட்டத்தினை அவர் எதிர்த்தே வந்தார்.
தமிழ் மக்கள் கைது செய்யப்பட்ட போதும், கடத்தல், காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்ற போதும் துடிதுடித்த மகேஸ்வரன் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடினார். நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்தார்.
லொட்ஜ்களிலிருந்த தமிழ் மக்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு வவுனியாவுக்கு அனுப்பப்பட்ட போது வெகுண்டெழுந்த மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் தனது மேலங்கியை கழற்றி எறிந்து போராடினார்.
இவரது இறுதிக் கிரியைகளில் வெள்ளம் போல் மக்கள் கலந்து கொண்டமை இவர் செய்த சேவைகளுக்கு சான்றாகும். மகேஸ்வரனது பூதவுடலை வெள்ளவத்தையில் அவரது வீட்டிலிருந்து கனத்தை இந்து மயானம் வரை இளைஞர்கள் தோளில் சுமந்து சென்றதுடன் வெள்ளம் போல் மக்கள் பேரணியாக அணிவகுத்து சென்றனர்.
வெள்ளவத்தை முதல் பொரளை கனத்தை வரையான வீதிகளின் இரு மருங்கிலும் கூடி நின்ற மக்கள் மகேஸ்வரனின் பூதவுடலை வணங்கி கண்ணீர் விட்டு கதறியழுதனர்.
இவையெல்லாம் அவரின் சேவைக்கு கிடைத்த காணிக்கைகள் என்றே கூற வேண்டும்.
அன்னான் ஒரு வருட திதி நிகழ்வு கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற போது அதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை அவரது சேவை மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளமைக்கு சான்றாக அமைந்தது.
நினைவுதின நிகழ்வில் தமிழக அறிஞர் இரா. செல்வ கணபதியின் நினைவுப் பேருரையும் விசேட அம்சமாக இடம்பெற்றது. இதனை விட யாழ்ப்பாணம் காரைநகர், வடமராட்சி பகுதிகளிலும் அன்னாரின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மக்களுக்காக வாழ்ந்த மகேஸ்வரன், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் வீதியில் இந்துக் கல்லூரி ஒன்றினை அமைப்பதற்கு இறுதிக் காலத்தில் பெரும் முயற்சி எடுத்தார். அவரது அந்த முயற்சியை கைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்.
இந்தப் பூவுலகை விட்டு மகேஸ்வரனின் உயிர் பிரிந்தாலும், அவரது நினைவுகள் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலிருந்து அகலாது, என்றுமே அவர் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது மட்டும் திண்ணம்.
பால வடிவேல்பிள்ளை
பம்பலப்பிட்டி.
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றும் வாழும் மகேஸ்வரன் - 4ம் ஆண்டு நினைவு இன்று
பதிந்தவர்:
தம்பியன்
01 January 2012
0 Responses to தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றும் வாழும் மகேஸ்வரன் - 4ம் ஆண்டு நினைவு இன்று