தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு சித்திரவதை முகாம் ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி யேர்மனி தலைநகரம் பெர்லினில் இன்று காலை யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனித நேயம் அற்ற நிலையில் சித்திரை முகாமில் சிக்கித் தவிக்கும் உறவுகள் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த இரண்டு வாரங்களாக உண்ணா நிலையில் உள்ளார்கள், அவர்களில் சிலர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியம் பெறுவதாகவும் அறிகின்றோம்.
காந்தி தேசம் என தன்னை தானே புகழாரம் பாடும் இந்திய அரசு சிறைகளில் வாடும் அகதிகளை விடுவிக்காமல் மிக மோசமான நிலையில் தள்ளியுள்ளது.
இலங்கை அரசின் இனவழிப்பில் உடைமைகள் , மற்றும் உறவுகளை இழந்து தமது உயிர்களை மட்டும் காவி கொண்டு தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய மக்களை பொய்யான குற்றச்சாட்டில் இந்திய அரசு செங்கல்பட்டு சிறப்பு சித்திரவதை முகாமில் அடைத்துள்ளது.
இதற்கு எதிராக தமிழகத்தில் எமது தமிழின உணர்வாளர்கள் தமது ஆதரவை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் பெர்லினில் இந்திய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.
இவ் நிகழ்வில் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத்தமிழ் உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பதாதைகள் மற்றும் ஆங்கில மொழியில் பேச்சின் ஊடாக உண்ணா நிலையில் உள்ள உறவுகளின் நிலைமைகள் யேர்மன் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழீழத்தை கூறுபோட்டு இலங்கை அரசின் இனவழிப்புக்கு ஆதரவு கொடுக்கும் இந்திய அரசை கண்டித்து பல தடவை கடந்த காலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இந்திய தூதரகத்திற்கு முன்றலில் செய்து இருந்தாலும் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கண்ட தூதரக அதிகாரிகள் மிகவும் விழித்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
தூதரக உயர்அதிகாரிகள் பலதடவை தமது யேர்மன் ஊழியர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் இனம் காணுவதற்காகவும் ஒளித்திருந்து புகைப்படம் எடுக்கும் வகையில் பணித்திருந்தார்கள்.
அத்தோடு ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து கவனித்துக்கொண்டிருந்த யேர்மனியரை அவ்விடத்தில் அவர் நிற்க தடை என்றும் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தவறான செய்திகளை இங்கு பரப்பும் வகையல் இந்திய தேசத்துக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்றும் தமது ஊழியர்கள் ஊடாக பரப்புரையில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் "இந்தியா, அகதிகளை சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக நடத்து " , "செங்கல்பட்டு சித்திரவதை முகாமை இழுத்து மூடு", "செங்கல்பட்டு சித்திரைமுகாமில் தவிக்கும் அகதிகளை விடுதலை செய் ", மற்றும் ஈழத்தமிழ் அகதிகளை மறைமுகமான சித்திரவதை செய்வதை நிறுத்து " எனும் வாசகங்கள் பதித்த பதாதைகளை தாங்கியவாறு நீதிக்கான இவ் நிகழ்வில் ஈடுபட்டனர்.
இறுதியில் ஈழத்தமிழ் மக்கள் அவையால் கையளிக்கவிருந்த மனுவை மேலதிகாரி வாங்க மறுத்த நேரத்திலும் வாசலில் பிறிதொரு அதிகாரியால் பெற்றுக்கொண்டனர்.
0 Responses to செங்கல்பட்டு சித்திரவதை முகாம் தமிழர்களை விடுவிக்க கோரி யேர்மனி இந்திய தூதரகத்தின் முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்