Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரிக்கு, இதுதொடர்பான 4 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுதியுள்ளனர்.

அந்தத் கடிதத்தில், கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தான், அமெரிக்காவின் மேலதிக நிதி உதவிகள், வர்த்தக மற்றும் இராணுவ சலுகைகள் தங்கியிருப்பதாக இலங்கை அரசாங்கத்துக்கு தெளிவான அறிவிப்பை விடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இடைமாறு கால நீதி, இராணுவத்தினர் தண்டனையில் இருந்து தப்பித்தலுக்கு முடிவுகாணல், பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, சட்டத்தின் ஆட்சி, 30/1 தீர்மானத்துக்கு அமைவாக, தமிழ் மக்களின் கரிசனைகளுக்கு தீர்வு காணுதல், ஆகியன தொடர்பாக நம்பகமான முன்னேற்றங்களில் தான், அமெரிக்காவின் உதவிகள் தொடரும் என்பதை இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

முன்னேற்றங்கள் மிகவும் மெதுவாக- விருப்பமின்றி இடம்பெறுகின்றன. நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான செயல்முறை இப்போது, நம்பிக்கையை பலவீனப்படுத்தும் காரணியாக மாறியுள்ளது என்றும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள மூத்த அதிகாரிகள், முக்கியமான குற்றவியல் விசாரணைகளை தடுப்பது தொடர்பான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை ஜோன் கெரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கம் இந்த தடுப்பாளர்களை பதவி நீக்க அல்லது அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைச் சீர்குலைக்கும் கொள்கை வகுப்பு நிலையில் உள்ள அதிகாரிகளை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், டன்னி கே.டேவிஸ், ஸ்டீவ் ஸ்ரிவேர்ஸ், ரிச்சர்ட் ஈ நீல், லியோனாட் லான்ஸ், ஜான் ஸ்காகோவ்ஸ்கி, பற்றிக் ஜே ரிபேரி, வில்லியம் ஆர் கீற்றிங், டானியல் எம்.டொனோவன் உள்ளிட்ட 24 காங்கிரஸ் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

0 Responses to நீதி விசாரணைக்கான அழுத்தத்தினை இலங்கைக்கு வழங்க வேண்டும்; ஜோன் கெரியிடம் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com