விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், புயலால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ., விஜயகாந்த் மக்களை சந்தித்து ஆறுதல் கூற வராதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “தானே’ புயல் தாக்குதலில் விழுப்புரம் மாவட்டமும் கடுமையாக பாதித்துள்ளது. அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு உதவ உடனடியாக களத்தில் இறங்கினர்.
டேங்கர் லாரிகளை வாடகைக்கு எடுத்து குடிநீர் வழங்கவும், உணவு தயாரித்து கொடுக்கவும் சில இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், புயலால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில், போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., விஜயகாந்த், இதுவரை தொகுதி பக்கம் வரவில்லை என்பது இப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் உள்ள பல கிராமங்களில், கடந்த நான்கு நாட்களாக மின் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, நெல், பருத்தி, உளுந்து ஆகிய பயிர்கள் புயலால் கடுமையாக சேதடைந்துள்ளன. பல கூரை வீடுகள் காற்றில் சின்னாபின்னமாகி பலர் வீடு இழந்துள்ளனர். பல வகையிலும் புயல் பாதிப்பால் கவலையில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வராததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
0 Responses to விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி