Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் தொகை அதிகமாகக் காணப்படுவது நாட்டின் ஒட்டுமொத்தத் தேசிய அவமானம் என பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Hunger and Malnutrition எனும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளும் அமைப்பு, இந்தியாவில் பொருளாதாரப் பின்னடைவுள்ள 9 மாநிலங்களைச் சேர்ந்த 112 மாவட்டங்களில் வதியும் மக்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சி தருபவையாக அமைந்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

இது தொடர்பில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தியிருக்கும் அவ்வமைப்பு, சுமார் ஒரு இலட்சம் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்ததில், 5 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான எடையை எட்டியுள்ளது ஆனால் மிகுதி நான்கு குழந்தைகள் ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் வாழ்கின்றன எனத் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைக்கு, குடும்பப் பொருளாதாரம், சுற்றுப்புறச் சுகாதாரம், தாயின் கல்வியறிவு, தாய்ப்பால் கொடுக்கும் தாயின் ஆரோக்கியம், குடும்பங்களில் பெண்கள் நடத்தப்படும் முறை என்பவை இந்த ஊட்டசத்துக் குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், தனது அறிக்கையில் அந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் ஆதாரங்களின் அடிப்படையில் நாட்டின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மொத்த வீதத்தில் 42 வீதமானோர் ஊட்டச்சத்துக் குறைவானவர்களாக இருப்பதாகத் தெரிய வருகிறது. உலகில் ஊட்டச்சத்துக்குறைவான மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை என்கின்ற நிலையைத் தோற்றுவிக்கிறது.

இந்த அறிக்கையை மேற்கொள் காட்டிப் பேசிய பிரதமர், இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும், இவ்வளவு அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து அற்று இருப்பது நாட்டின் ஒட்டு மொத்தத் தேசிய அவமானம் என்பதுடன், எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியமற்ற நிலைகுறித்தம் அக்கறைப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசிய பிரதமர் இது தொடர்பான மாற்றுச் சிறப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

தற்போதுள்ள குழந்தைகள் நலத் திட்டங்கள் சிறப்பாக உள்ள பொதும், அவற்றினால் மட்டும் இப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்பதால், இவ்வாறான உதவி தேவைப்படும் 200 மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பிலும், சிறப்புத் திட்டங்கள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

0 Responses to உலகின் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளில் மூன்றில் ஒன்று இந்தியக் குழந்தை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com