இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற இந்திய அரசு உதவும்' என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் எழுதியுள்ள தமிழினத்தின் இதயம் இலங்கை' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் தலைமை தாங்கி நூலை வெளியிட அதனை தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பேசியதாவது:
இலங்கை இந்தியா நட்பும், உறவும் நீண்டு நெடியது. 1927ல் காந்தி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விடுதலை விதை விதைத்தது முதல் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக ஆற்றிய பணிகள் பற்றி இதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் இந்த உறவு அறுந்து போனது என்று வேதனையோடு அவர் குறிப்பிடுகிறார். மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. ரூ.1000 கோடி நிதியுதவி முதல் இலவச டிராக்டர், மீன் பிடி படகுகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், ரெயில் பாதை, துறைமுக மேம்பாடு உள்பட பல உதவிகளை செய்து வருகிறது.
இலங்கை தமிழர்களுக்கு வாழ்வும், வளமும் அளிப்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்வதால் மட்டுமே அவர்களை நண்பர்களாக மாற்ற முடியும். இதனை சிங்களர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இன்றைக்கு அமைதி நிலையை காட்டும் என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்றால் ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் மீண்டும் பெற வேண்டும். அதற்கு இந்திய அரசு உதவி செய்யும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற இந்திய அரசு உதவும்: ஜி.கே.வாசன்
பதிந்தவர்:
தம்பியன்
07 January 2012
0 Responses to இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற இந்திய அரசு உதவும்: ஜி.கே.வாசன்