பன்றிக்காய்ச்சல் இந்தியாவில் மீண்டும் மிக வேக மாக பரவி வருகிறது. மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்குதல் மிக அதிகமாக உள்ளது.
குறிப்பாக மராட்டிய மாநிலம் புனேயில் தான் பன்றிக்காய்ச்சல் அதிக அளவில் பரவியுள்ளது. இந்த சீசனில் இந்தியாவில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 18 மாதங்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
அதன் பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகத்திறமையாக செயல்பட்டு தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, புனே உள்பட வெளிமாநில ஊர்களுக்கு சென்று வருபவர்கள் மூலம் பன்றிக்காய்ச்சல் பரவுவது தெரியவந்துள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவர் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர். மற்றொருவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவராவார்.
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ஒரு தனியார் உற்பத்தி நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். அவர் கடந்த 18-ந்தேதி தன் நிறுவன வேலை நிமித்தமாக டெல்லிக்கு சென்றிருந்தார். வேலை முடிந்து விமானத்தில் திரும்பி வரும் போது பின் இருக்கையில் இருந்தவர் விடாமல் தும்மல் போட்டுக்கொண்டே இருந்துள்ளார்.
அதனால் கோட்டூர்புரம் அதிகாரிக்கும் ஒரு வாரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், தும்மல் ஏற்பட்டது. தனியார் மருத்துவ பரிசோதனை கூடத்தில் அவரை சோதித்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது எச்சில் மற்றும் ரத்தம் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதில் அந்த அதிகாரி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதற்கிடையே கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெறுவதாக தகவல் வந்தது.
ஆதம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த அவர் ஆட்டோ மொபைல் டீலர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 22-ந்தேதி கடுமையான காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்துக்கு சிகிச்சை பெற அவர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது எச்சிலை பரிசோதித்த கிங் இன்ஸ்டிடியூட் அதிகாரிகள், அவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பதை உறுதி செய்தனர்.
சென்னையில் 2 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை சென்னை மாநகராட்சி கூடுதல் சுகாதார அதிகாரி ஜி.டி. தங்கராஜன் உறுதிபடுத்தினார்.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரது வீட்டுக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் மருந்து, மாத்திரை கொடுத்து தீவிர சிகிச்சை அளித்தனர். குறைந்தது 2 வாரத்துக்கு வெளியில் எங்கும் வராமல் தனி அறையில் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப் பட்ட இருவர் மூலம், அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவி விடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட இருவரின் உறவினர்களிடமும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வேறு யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது.
கோட்டூர்புரம் தனியார் நிறுவன அதிகாரி டெல்லி சென்று வந்ததால் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது உறுதியான நிலையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவருக்கு பன்றிக்காய்ச்சல் எப்படி வந்தது என்பது மர்மமாக உள்ளது.
அவர் வேலை பார்க்கும் ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கு வெளியில் இருந்து வந்து சென்றவர்கள் மூலம் இந்த காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே சென்னையில் பன்றிக்காய்ச்சல் ஓசையின்றி பரவி வரலாம் என்று தெரிகிறது.
கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூக்கில் இருந்து நீர் வடிதல் போன்றவை பன்றிக்காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறி களாகும். இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் உடனே டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
முதலிலேயே பன்றிக்காய்ச்சலை கண்டு பிடித்தால் மிக எளிதாக மாத்திரை மூலம் குணப்படுத்தி விட முடியும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்கும் அது பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “தமிழ் நாட்டில் சென்னை உள்பட எங்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை” என்றார். பன்றிக் காய்ச்சல் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிவிக்க மறுத்து விட்டார்
0 Responses to சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்