Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எகிப்தில் நடைபெற்ற படுகொலைகளை அறிந்ததும் அறையைப் பூட்டிக்கொண்டு விவாதம் நடாத்திய ஐ.நா பாதுகாப்புச் சபை இப்போது மறுபடியும் அறையைப் பூட்டிக்கொண்டு பேச்சுக்களை நடாத்தியுள்ளது.

சுமார் இரண்டு மணி நேரம் இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்ததாக ஐ.நாவின் பாதுகாப்பு சபை பேச்சாளர் ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த மரிய கிறிஸ்டீனா பார்சிவல் கூறினார், ஐ.நாவின் உதவி தலைவர் எடுராடோ டெல் பேல்.

நேற்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் இரசாயன நச்சு வாயு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 1300 போராளிகள் பொது மக்கள், குழந்தைகள் கொத்தாகக் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அல் ஜஸீரா தொலைக்காட்சி நிருபர் 1600 பேர் என்றும் நூற்றுக்கணக்கானவர் படு காயம் என்றும் கூறுகிறது.

இறந்தோர் தொகை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது, டமாஸ்க்கஸ்சை சுற்றி..

கமோரியா நகரில் 150 சடலங்கள்..
காபாற்னா நகரில் 100 சடலங்கள்..
சகியுபா நகரில் 67 சடலங்கள்..
டோமா நகரில் 76 சடலங்கள்..

எல்வஸ்வெயா நகரில 40 சடலங்கள்.. இதுவரை மீட்கப்பட்டுள்ளன..

இப்பகுதி முழுவதும் இன்னொரு ஆனந்தபுரமாகக் காட்சி தருகிறது..

சதாம் உசேனின் மைத்துனர் தலைமையில் கெமிக்கல் அலி குர்டிஸ்தானியர் மீது நடாத்திய நச்சுவாயு தாக்குதல் போல இதுவும் போர்க்களத்தில் ஒரு பிரதான திருப்பமாக இருக்கிறது.
அதைத் தொடர்ந்து இன்று வியாழன் காலையும் சிரியப் படைகளின் அகோரமான தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இது நடக்கிறது.

கடந்த ஒரு வார காலமாக சிரியாவில் நச்சு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாக ஐ.நா குற்றம் சுமத்தி வந்தது, குற்றச்சாட்டு ஊர்ஜிதமாகும் வேளை வந்ததால் தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது இனி சாணென்ன முழமென்ன என்ற நிலைக்கு ஆஸாட் வந்துள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறும்போது சிரிய அதிபர் ஆஸாட் சர்வதேசம் வரைந்த சிவப்புக்கோட்டு எல்லையை தாண்டிவிட்டதாக எச்சரித்திருந்தார்.

இப்போது ஆஸாட் படைகள் அந்த எல்லையைத் தாண்டி வெகுதூரம் பயணித்துவிட்டார்கள், என்ன செய்வது ஐ.நா பூட்டிய அறைக்குள் கூட்டம் நடாத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து இது குறித்த தெளிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.

இதற்குள் பிரான்சிய வெளிநாட்டமைச்சர் சிரியா விமானங்களை முற்றாக தகர்த்து, பறக்கவிடாமல் செய்தால் களத்தில் சமபலம் நிலவும் என்று தெரிவித்துள்ளார், ஆனால் பிரான்சின் தரைப்படைகளை அனுப்புவதை அவர் ஏற்கவில்லை.

அமெரிக்காவும் சிரியாவின் விமானப்படை கட்டமைவை முற்றாக செயலிழக்க செய்ய தயார் என்று கூறியுள்ளது.
சிரிய அதிபர் மட்டும் இரசாயன நச்சு வாயுவை பயன்படுத்தினால் அவருடைய ஆட்டம் சரி என்று ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜி லாரோவ் முன்னரே கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் இப்போது சிரியாவின் ஆதரவு நாடுகளான சீனா, ரஸ்யாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டு காலங்களில் நடைபெற்ற மோசமான நச்சுவாயு தாக்குதல் இதுவென்று கூறப்படுகிறது.

வன்னி ஆனந்தபுர போரில் சிங்கள அரசு வீசிய இரசாயன நச்சு வாயுத்தாக்குதலில் தீபன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டபோது ஐ.நா பாதுகாப்புச் சபை தனது அறையை காற்றோட்டமாக திறந்து வைத்துக் கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

நேற்றைய இரசாயன நச்சு வாயு தாக்குதல் ஆஸாட்டின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விழும் இடத்திற்கு விவகாரத்தை இழுத்துள்ளது.

எட்வேட் சுனோவ்டன் விவகாரத்தில் ரஸ்யா மீது கோபமாக இருக்கும் அமெரிக்கா சிரியா விவகாரத்தில் ரஸ்யாவின் கருத்தை மதிக்காது செயற்பட வாய்ப்புள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க இராணுவ இரகசியங்களை வழங்கிய 25 வயது இராணுவ அதிகாரி பிராட்லி மெனிங்கிற்கு நேற்று அமெரிக்க நீதிமன்று 35 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இவருக்கு 90 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படாலாம் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது.

மறுபுறம் முன்னாள் எகிப்திய சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் விடுதலை செய்யப்பட்டுள்ளார், அதைத் தொடர்ந்து இவர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வெளியே நடமாட முடியாது என்பதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதற்குள் ஐ.நா பாதுகாப்பு சபை எகிப்து தொடர்பாக எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் புறுக்சல்ஸ் நகரில் நேற்று அவசர அவசரமாகக் கூடியது.

எகிப்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இனி ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களை அனுப்பமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கா இன்னமும் நிறுத்தவில்லை.

0 Responses to சிரியாவில் நச்சுப்புகை ஆயுதம் 1300 பேர் மரணம் ஐ.நா அவசர கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com