ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட A /HRC /19 /L .2 தீர்மானத்தை, பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamils Forum-BTF), கனேடிய தமிழர் பேரவை(Canadian Tamil Congress –CTC), மற்றும் அமெரிக்க தமிழ் அரசியல் பேரவை (United States Tamil Political Action Council –USTPAC) ஆகியன வரவேற்கின்றன.
இலங்கையில் சமாதானம் மற்றும் பொறுப்புக் கூறுதல் ஆகியவை தொடர்பில் வரவேற்கத்தக்க ஒரு முதல்படி இது. 1987 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை தொடர்பிலான ஜ.நாவின் முதலாவது அடிப்படைத் தீர்மானமாக இது அமைவதுடன் இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்களை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை இது இலங்கை அரசாங்கத்திற்கு உணர்த்துவதாகவும் அமைகிறது. என புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கான பேச்சாளர் வாணி செல்வராஜா தெரிவித்துள்ளார்.
ஒரு சர்வதேச ரீதியான விசாரணை ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு ஆவன செய்வதற்கு இந்த தீர்மானத்தை நாம் எதிர்பார்த்து இருந்தாலும் இலங்கையில் பொறுப்புக்கூறும் தன்மை தொடர்பில், ஒரு முறையான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான ஒரு நடைமுறையின் முதல் படியாகவே இதனை பார்க்கின்றோம் இந்த தீர்மானத்தினூடாக சமாதானத்தை நோக்கிய ஒரு பாதையை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் காத்திரமான சிபார்சுகளை குறிப்பாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ மயமாக்கலை இல்லாமல் செய்தல், காணி பிணக்கு தொடர்பிலான தீர்வு பொறிமுறைகள் ஆகியவற்றை அமுல்படுத்துவதற்கும் மற்றும் நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நம்பகத்தன்மையானதும் சுயாதீனமானதுமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இந்த தீர்மானம் கோருகிறது.
அத்துடன், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கிய ஒரு விரிவான செயத்திட்டமொன்றை வழங்குவதற்கும் இந்த தீர்மானம் கோருகின்றது.
இறுதியாக இலங்கைக்கு தொழிநுட்ப உதவிகைளை வழங்குவதற்கு மனித உரிமைகளுக்கான ஜ.நா ஆணையாளர் மற்றும் இது விடயத்தில் ஆணையை கொண்டிருப்பவர்களை இந்த தீர்மானம் ஊக்கப்படுத்துவதுடன், 2013 மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பில் அவர்களை அறிக்கையளிப்பதற்கும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
இந்த தீர்மானத்தை ஜ.நா பேரவையில் கொண்டுவருவதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, அமெரிக்கா அரசாங்கத்திற்கும் குறிப்பாக உறுதியான முயற்சிகளை மேற்கொண்ட ஜ,நா வுக்கான அமெரிக்காவின் தூதுவர் எய்லின் டொனாகொய் மற்றும் அவரது சக பணியாளர்களுக்கும் இந்த தீர்மானத்தை கூட்டாக முன்மொழிந்த 40 நாடுகளுக்கும் மற்றும் தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகளுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, மற்றும் அமெரிக்கா தமிழ் அரசியல் பேரவை தனது பாரட்டுக்களை தெரிவிக்கின்றன.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பல வருடங்களாக பணியாற்றியிருக்கும் பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
இலங்கையில் இருந்து வந்து பல மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஜெனிவாவில் பிரதிநிதித்துவம் செய்திருப்பதுடன், சாமதானம் மற்றும் மனித உரிமைகளுக்காக துணிச்சலானதும், பல சந்தர்ப்பங்களில் உயிராபத்துமிக்கதுமான பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது நிபுணத்துவ ஆதரவு எமக்கு ஒரு அதிஷ்டகரமானதாகவும் மதிப்புக்குரியாதாகவும் இருந்திருப்பதுடன்,இலங்கையில் நீதியான சாமதானம் ஏற்படுவதற்காக மேலும் கடுமையாக பாடுபடுவதற்கு எம்மை எழுச்சியூட்டியிருக்கின்றது.
ஜ.நா பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் பொருட்டு உறுப்பு நாடுகளின் தூதுக் குழுக்களை ஊக்கப்படுத்தியும் தமது பெறுமதியான நேரத்தை செலவு செய்த பிரித்தானியாவின் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
பிரித்தானிய தமிழர் பேரவை
0 Responses to சர்வதேச சட்டத்திலிருந்து இலங்கை நழுவிச் செல்லமுடியாது!