Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் போரின்போது நடைபெற்ற யுத்த மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதற்கு சர்வதேச நாடுகள் தனது பலமான ஆதரவை வழங்கியுள்ளதை தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு கிடைத்த பெரும்பான்மை ஆதரவு வாக்குகள் வெளிப்படுத்தி நிற்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. அத்துடன் எட்டு நாடுகள் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்காது நடுநிலை வகித்துள்ளன.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்த பேரவையின் உறுப்பு நாடுகளில் இந்தியா, நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியனவும் உள்ளடங்குகின்றன.

இலங்கையில் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில் யுத்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமானது பொறுப்புக் கூறாது தட்டிக்கழித்ததாலும், அதன் பொறுப்புக் கூறல் முயற்சிகள் தொடர்பில் அனைத்துலக சமூகமானது பெருமளவில் திருப்தி கொள்ளாததன் விளைவாகவே தற்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு பேரவையின் பெருமளவான உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன" என ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கான சட்ட இயக்குனர் யூலியட் டீ ரிவேரோ (Juliette De Rivero) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது அதில் பங்குபற்றிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான முக்கிய முதல் நகர்வாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள பேரவையின் தீர்மானமானது உள்ளதை பல நாடுகள் அடையாளங் கண்டுகொண்டுள்ளன" எனவும் சட்ட இயக்குனர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமானது இவ் யுத்த கால மீறல்கள் தொடர்பாக நீதியான நடவடிக்கையை எடுத்து, இதற்கான பொறுப்பைக் கூறவேண்டிய சட்டக் கடப்பாட்டைக் கொண்டுள்ளதையும், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் கண்டறியப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான மிகப் பயனுள்ள உறுதியான திட்ட வரைவொன்றை வழங்குவதற்கான நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டே தற்போது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்வதற்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா வின் உயர் ஆணையகம் மற்றும் ஏனைய ஐ.நா மனித உரிமைகள் தூதுவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் பேரவையின் இத்தீர்மானமானது வலியுறுத்தி நிற்கின்றது.

மனித உரிமைகள் பேரவையின் முன்மொழிவை நிராகரிப்பதற்காக இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவிலும் ஏனைய வெளிநாட்டு அரசாங்கங்களின் மத்தியிலும் மேற்கொண்ட பரப்புரை தோல்வியடைந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தமது ஆதரவைத் தெரிவித்தற்காக அவர்கள் ஜெனீவாவிலும், இலங்கையிலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகினர். எடுத்துக்காட்டாக, இலங்கையைச் சேர்ந்த மூன்று முதன்மையான மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என அரச ஊடகமான Ceylon Daily News விமர்சித்திருந்தது. அத்துடன் இவர்கள் 'இலங்கைக்கு துரோகம் இழைக்கும்' நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவ் ஊடகத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா கூட்டத் தொடரில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஒளிப்படம் பிடிக்கப்பட்டு, அவர்களின் படங்கள் ஊடகங்களிலும் இணையங்களிலும் வெளியிடப்பட்டதுடன், அவர்கள் 'தேசத்துரோகிகள்' எனவும் முத்திரை குத்தப்பட்டனர்.

பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் தோல்வியடைந்த இலங்கை அரசாங்கமானது, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதன் ஊடாக தனது சொந்த மக்கள் ஆபத்தைச் சந்திக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது" என யூலியட் டீ ரிவேரோ (Juliette De Rivero) தெரிவித்துள்ளார்.

"இலங்கை அரசாங்கமானது யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாது தவிர்ப்பதற்காக இவ்வாறான தந்திரங்களைக் கையாண்டு வருவதை மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் கண்டறிந்து கொண்டன" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொறுப்புக் கூறுதலில் பேரவையின் தீர்மானமானது முக்கிய முன்னேற்றமாக உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மே 2009 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் யுத்தத்தின் போது மீறப்பட்ட அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை வெளிக்கொண்டு வருவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்ததுடன், கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

எனினும், ஏப்ரல் 2010ல் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது மட்டுமே இலங்கை ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக உள்ளது. இவ் ஆணைக்குழுவானது தன்னால் கற்றறிந்து கொண்ட பாடங்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை கடந்த டிசம்பரில் வெளியிட்டது. ஆனால் இதில் இலங்கை அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான பல மீறல் சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை.

யுத்தத்தில் பங்கு கொண்ட இலங்கை அரசாங்கப் படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பாக நம்பகமான சாட்சியங்களை உள்ளடக்கிய அறிக்கையை ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினர் ஏப்ரல் 2011ல் தயாரித்தனர். அதில் முக்கிய பல பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அனைத்துலக சுயாதீன ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐ.நா வல்லுனர் குழு கோரிக்கை விடுத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்திடம் யுத்த கால மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுமாறு வினவப்பட்ட போதெல்லாம், அரசாங்கமானது தனது நடவடிக்கைகள் தொடர்பாக வாயளவில் மட்டும் கூறியதே தவிர அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கையில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை தற்போது பேரவையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவானது உறுதிப்படுத்திக் கொள்வதுடன், கண்காணிக்கப்பட வேண்டியதும் மிக முக்கியமானதாகும்" என யூலியட் டீ ரிவேரோ (Juliette De Rivero) தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெனிவா தீர்மானம்: இலங்கைக்கான கடுமையான செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com