ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா. சபையில் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானமானது, சர்வதேச நாடுகளில் வாழும் தமிழர்களின் உணர்வுப் பிரச்னையாக பார்க்கப்பட்டது. இந்த விஷயத்தில் இந்தியா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருந்தது.
தீர்மானமும், கடிதங்களும்: இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் 2009-ம் ஆண்டில் நடைபெற்ற போரின்போது குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஐ.நா. சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்காக அந்த நாட்டுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய அரசு தள்ளப்பட்டது.
இந்திய அரசு துணை நிற்பதன் மூலம் ஐ.நா. தீர்மானம் தோற்கடிக்கப்படும் என இலங்கை கருதியது. இந்தப் பிரச்னை தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு இரு முறை கடிதங்களை எழுதினேன். அமெரிக்க நாட்டின் தீர்மானத்துக்கு ஆதரவாக இருந்து, இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்தினேன்.
இந்த விஷயம் குறித்து நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, "ஐ.நா. சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் வரைவு அறிக்கை தாக்கலாகி அது வாக்கெடுப்புக்கு வரும்போதுதான் அதுகுறித்து இந்திய அரசு முடிவு செய்யும்' எனக் கூறினார்.
குடியரசுத் தலைவர் உரை மீது நடைபெற்ற விவாதத்துக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும், அப்படி வாக்களிப்பதற்கு விருப்பமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரமதரின் இந்தப் பதிலில் திருப்தி அடையாத அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நேரடியாகத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவாகத் தெரிவிக்க நானும் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
இந்தச் சூழ்நிலையில்தான் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டதாகவும், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இறுதி முடிவெடுக்கவில்லை என கிருஷ்ணா தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எஸ்.எம்.கிருஷ்ணாவின் கருத்து திசை திருப்பும் முயற்சி என திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.
மனமார்ந்த நன்றி:
இந்தக் குழப்பமான சூழ்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன்.
இந்தப் பிரச்னையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தி மாநில சட்டப் பேரவையில் தீர்மானமும், பிரதமருக்குக் கடிதங்களும், அதிமுக எம்.பி.க்கள் மூலம் வலுவாக கோரிக்கைகளும் தொடர்ந்து வைக்கப்பட்டன.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி கண்டிருப்பது அந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் நீதியின் முதல் படியாகும். சர்வதேச நாடுகளில் வாழக் கூடிய தமிழர்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு ஜெயலலிதா வரவேற்பு!
பதிந்தவர்:
Anonymous
23 March 2012
0 Responses to தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு ஜெயலலிதா வரவேற்பு!