Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டை சீரான பாதையில் ஆட்சி செய்ய முடியாவிட்டால், ஆட்சியை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்குங்கள் என்று முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையில் போட்டாலும், தனது அரசியல் பயணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், மக்களுக்காக எந்தச் சந்தர்ப்பத்திலும் ராஜபக்ஷக்கள் துணிகரமாகவே குரல் எழுப்புவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிரணியால் (மஹிந்த ஆதரவு அணி) கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டடிமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "அரசுக்கு எதிராக மக்கள் அலையென திரண்டுள்ளதை காணும்போது மகிழ்வாக இருக்கின்றது. இந்தக் கூட்டத்துக்கு நான் வரமாட்டேன் என வதந்திகளைப் பரப்பிவிட்டனர். இவர்களைவிட பெரிய மடையர்கள் இந்த உலகில் இருக்கமாட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

நான் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது பொருளாதாரம் வீழ்ச்சி, வங்கித்துறை ஸ்தம்பிதம், உணவுப் பிரச்சினை, புலிகள் என ஐந்து வகையான பிரச்சினைகளை உக்கிரமடைந்திருந்தன. அவற்றை நாம் சமாளித்தோம். புலிகளை இரு வருடங்களில் ஒழித்தோம். தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினோம். விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களையும் பாதுகாத்தோம். சொபின் பையுடன் வந்த ரிஷாட்டும் இதை இன்று மறந்துவிட்டார்.

9 வருடங்களில் நாட்டை பலமான நிலைக்குக் கொண்டுவந்தோம். ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் இருந்தோம். இப்படித்தான் ஆட்சியைக் கையளித்தோம். ஆனால், என்மீது போலிக்கடன் கணக்கு காட்டப்படுகிறது. தகவல்களை ஒளித்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இவையாவும் பொய்யாகும். உண்மை பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே காலத்துக்குக் காலம் போலிக்கதைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

பிள்ளைகளை சிறையில் அடைத்து, எனக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன். அரசியல் பயணத்தை கைவிட்டுவிடுவேன் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது பகல் கனவு மட்டும்தான். அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் நாம் அடிபணியமாட்டோம். என்னையும், ஏன் எனது முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணத்தை கைவிடமாட்டேன். 1976இல் ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஷாக்களின் பயணம் தொடரும். இதை எவராலும் தடுக்க முடியாது.

அரச வளங்களை விற்பனை செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். ஆட்சியை நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள். உரமானியம் வழங்குவோம். 10 நிமிடமாவது இருட்டில் வைக்கமாட்டோம். வேலைவாய்ப்புகளை வழங்குவோம். சீனாவை விமர்சிக்க வேண்டாம். கொழும்பு துறைமுகநகர் திட்டத்தை ஆரம்பியுங்கள். மக்களுடன் மக்களாக நான் இருப்பேன்.” என்றுள்ளார்.

0 Responses to ஆட்சி செய்ய முடியாவிட்டால்; ஆட்சியை என்னிடத்தில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்குங்கள்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com