Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது.

நேற்று முன்தினம் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, இந்தியா, நோர்வே உட்பட்ட 24 நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகவும் சீனா, ரஸ்யா, கியூபா, பங்களதேஷ் உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன.

இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா பகீரத முயற்சி எடுத்த போதும் அது கைகூடவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அனைத்துலக அரங்கில் சிறிலங்கா பெரியதொரு இராஜதந்திரத் தோல்வியினைச் சந்தித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சிறிலங்கா அரசாங்கம் மீதான அனைத்துலக விசாரணை என்ற ஈழத் தமிழர் தேசத்தின் நீதியின்பாற்பட்ட நிலைப்பாட்டை எட்டவில்லை.

எனினும் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக அனைத்துலகக்கவனத்தினை ஈர்ப்பதற்கு இத்தீர்மானம் உதவியிருக்கிறது. போர்க்காலத்தில் அனைத்துலகச் சட்டங்களை மீறியமை தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் இவ்விடயத்தையே அனைத்துலக நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிட முனைந்த சிறிலங்காவுக்கு பெரும் தோல்வியினையும் கொடுத்துள்ளது.

இது போரின் பின் சிறிலங்காவுக்கு கிடைத்த முதலாவது தோல்வி. சிறிலங்கா தற்போது கடைப்படிக்கும் அணுகுமுறைகள் இத்தகைய தோல்விகள் தொடரவே வழி செய்யும். 2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வரலாற்றில் முக்கியமானதொரு ஆண்டு எனவும் இவ் ஆண்டில் யார் முன்னோக்கி ஓடுகிறார்களோ அவர்களுக்கு அடுத்த கட்ட நகர்வுகளில் வாய்ப்புக்கள் கூடுதலாக இருக்கும் எனவும் நான் முன்னர் விடுத்த புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தின் மூலம் சிறிலங்கா முன்னோக்கி ஓடுவதற்கு ஒரு தடை விழுந்துள்ளது. இதனையும் ஈழத் தமிழர் தேசம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2012 ஆம் ஆண்டு சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைக்கான ஆண்டு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மூன்றாவது அமர்வில் தீர்மானித்திருந்தது. இவ் ஆண்டில் சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைகைளக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகைளை முடுக்கி விடும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரின் முன்னரும் தொடரின் போதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களும் செயல்வள நிபுணர்களும் அனைத்துலக விசாரணைக்கான தேவையினை வலியுறுத்தி அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகைளை மேற்கொண்டிருந்தனர்.

இவர்களின் செயற்பாடுகள் ஈழத்தமிழர் தேசத்தின் நீதி கோரும் குரலை அனைத்துலக அரங்கின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு துணை புரிந்திருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் கோருவது போல உள்நாட்டில் போதிய நடவடிக்கைகைளை சிறிலங்கா எடுக்கப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது போன்று சிறிலங்காவுக்கு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவதற்கான அரசியல் முனைப்பும் இல்லை.

இது அனைத்துலக விசாரணை என்ற எமது நிலைப்பாட்டை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தும். சிறிலங்கா அரசாங்கம் மீதான அனைத்துலக விசாரணைகளை கொண்டு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இயங்கி வரும் அனைத்துலக சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்தவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது குறித்த தனது நடவடிக்கைகைளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா மீதான தீர்மான வாக்கெடுப்பு, உலகப் புவிசார் மூலோபாயம் மற்றும் அரசியலில் காணப்படும் முரண்பாடுகளையும் சுட்டி நிற்கிறது.

அமெரிக்கா தலைமையிலான ஒரு முகாமும் ரஸ்யா – சீனக் கூட்டின் தலைமையில் இன்னொரு முகாமுமாக வளர்ச்சியடைந்து வரும், புதியதொரு பனிப்போர்க்கால அரசியல் நிலைமையினையும் வெளிப்படுத்துகிறது.

அமெரிக்கா தலைமையிலான ஒற்றை மைய அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவது வெளிப்படும் அதேவேளை அமெரிக்கா தென்னாசியப் பிராந்தியத்தில், சிறிலங்காவில் கூடுதலாக நேரடிப் பாத்திரத்தை வகிக்கும் நிலைமைகளையும் இத்தீர்மான நடைமுறை காட்டி நிற்கிறது.

இச்சூழலையும் இதன் தர்க்கரீதியான முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கினையும் ஈழத் தமிழர் தேசம் உன்னிப்பாக அவதானித்துச் செயற்பட வேண்டிய அவசியத்தையும் நாம் குறித்துக் கொள்ளல் முக்கியமானது.

இந்தியா இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது சிறிலங்காவின் விருப்பத்துக்கு மாறான செயற்பாடு என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு அமெரிக்காவுடன் இணைந்து நிற்க வேண்டிய இராஜதந்திரத் தேவையுடன் தமிழகத்தில் இருந்து கிளம்பிய அழுத்தமும் துணை புரிந்திருக்கிறது.

இத்தகைய அழுத்தத்தை சிறிலங்கா மீதான தவறான வெளியுறவுக் கொள்கையினை இந்தியா மாற்றியமைக்கும் வரை உறுதியாகத் தொடரவேண்டும் எனத் தமிழக அரசியல் தலைவர்களையும் மக்களையும் நாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களுக்கு உலக அரங்கில் நீதி கிடைக்க வேண்டுமென குரல் கொடுத்து வரும் நட்பு சக்திகளின் குறிப்பாக, தமிழக, மலேசியத் தமிழ் உறவுகளது கரங்களைத் தோழமை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றோம்.

ஈழத் தமிழர் தேசம் தனக்கென தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதுதான் இன அழிப்புக்குள்ளாகி நிற்கும் நமது தேசத்தக்கு உண்மையான நீதியினைத் தரக்கூடியது. இந்த உணர்வினை

உயிர்ப்புடன் உள்ளிருத்திக் கொள்ளும் அதேவேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலக மயப்படுத்திய மாவீரர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நன்றியுடன் நினைவு கூர்கின்றது.
சிங்களத்தின் கொடும் இனஅழிப்புக்குள்ளாகி கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களின் உயிர்க்கூடுகளும் நமது நீதிக்கான குரலை அனைத்துலக அரங்கில் உரத்து ஒலிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

நமது தேசத்தின் நீதிக்கான இந்தப் போரில் அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வெற்றியடைவோம் என நாம் இத் தருணத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்.

0 Responses to நீதிக்கான போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்திடுவோம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com