Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராணுவத்தை இப்போது மட்டுமல்ல முன்பும் கூட தவறாகப் பயன்படுத்தப் பார்த்தது காங்கிரஸ் அரசு. 1989ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜீவ் காந்தி அரசு பெரும் தோல்வியைச் சந்தித்ததும், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பூட்டாசிங், ராணுவத்தை டெல்லிக்குள் கொண்டு வர கற்பனையான காரணத்தைக் கூறி அப்போது இருந்த லெப்டினென்ட் கவர்னரை பயன்படுத்த முயற்சித்தார் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.

இதுதொடர்பாக அவர் தனது பிளாக்கில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்…

இந்த வாரத்தின் மிகுந்த அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லி பதிப்பு நாளிதழில் ஏப்ரல் 4ம் தேதி புதன்கிழமை வெளியாகியிருந்த செய்திதான். அந்த செய்தியில், அரசுக்கு தெரியாமலேயே டெல்லிக்குள் 2 ராணுவப் பிரிவுகள் வரவழைக்கப்பட்டன என்ற தலைப்பில் வந்திருந்த செய்தி பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

இது அதிர்ச்சி தருவதாக இருந்தால், ஏப்ரல் 5ம் தேதி வெளியான செய்தி இன்னும் அபாயகரமான அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதைப் போல, அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான உறவு வரலாறு காணாத வகையில் மோசமாகியுள்ளதாகவே கருத வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ராணுவத்தின் மீது எந்த அளவுக்கு துவேஷ உணர்வுகள் ஊடுறுவியுள்ளன என்பதை இது காட்டுகிறது.

எனது நண்பரும், எனது வீட்டுக்குப் பக்கத்தில் வசிப்பவருமான முன்னாள் டெல்லி யூனியன் பிரதேச லெப்டினென்ட் கவர்னர் விஜய் கபூர் 1989ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் குறித்து என்னை நேரில் சந்தித்து தெரிவித்தார். அதைக் கேட்டு நான் மேலும் அதிர்ச்சி அடைந்தேன்.

அப்போது ராஜீவ் காந்தி அரசு பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது. ஆட்சியை இழந்திருந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் பூட்டாசிங். ராஜீவ் காந்தி ஆட்சியை இழந்த கோபத்தில் இருந்த அவர், ராணுவத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். ஆனால் அது பின்னர் தடுக்கப்பட்டு விட்டது.

அப்போது விஜய்கபூர் டெல்லி அரசின் தலைமைச் செயலாளராக இருந்தார். அப்போது லெப்டினென்ட் கவர்னராக இருந்தவர் ரொமேஷ் பண்டாரி. இந்த சம்பவம் குறித்து விஜய் கபூர் சொன்னவுடன் அது தொடர்பான ஆதாரப்பூர்வ தகவல் இருக்கிறதா என்பதை நான் தேடினேன்.

அப்போதுதான் ரொமேஷ் பண்டாரியின் சுயசரிதை புத்தகம் எனக்குக் கிடைத்தது. இதை அவரே 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தார். அதில், 1988ம் ஆண்டு தான் லெப்டினென்ட் கவர்னராக நியமிக்கப்பட்டது குறித்து ரொமேஷ் பண்டாரி கூறியிருந்தார். மேலும், 1989ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசு பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் தான் ராஜினாமா செய்தது குறித்தும் எழுதியிருந்தார்.

தொடர்ந்து பண்டாரி அதில் கூறியிருப்பதாவது…

1989ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானபோது காங்கிரஸ் கட்சி படு மோசமாக தோல்வியைச் சந்தித்தது தெரிய வந்து விட்டது. லோக்சபாவை சட்டப்படி கலைக்க வேண்டிய வேலைகள் பாக்கி இருந்தன. பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்லத் தயாராகி வந்தார். இருப்பினும் லோக்சபா தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருந்தது. அது வெளியான பிறகுதான் லோக்சபாவை கலைக்க முடியும்.

எனக்குத் தேதி தெரியவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு, பூட்டாசிங்கிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அஜீத் சிங்கின் ஏற்பாட்டின் பேரில் ஹரியானா, மேற்கு உ.பி.யிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி திரண்டு வருவதாக பேசப்படுகிறது. இவர்கள் ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போகிறார்கள். ராஜீவ் காந்திக்கு நெருக்கடி கொடுத்து நாடாளு்மன்றத்தைக் கலைக்க வைக்கவே இந்த முயற்சி என்றார் பூட்டாசிங்.

மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாக்கியுள்ளன. ஆனால் அதற்குள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வெடித்து விடாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். டெல்லிக்குள் யாரையும் ஊடுறுவ நாம் அனுமதிக்க முடியாது என்றார்.

ஆனால் விவசாயிகள் வரப் போவதாக எனக்கு எந்தவிதமான அறிக்கையும், எச்சரிக்கைத் தகவலும் வரவில்லை. இருப்பினும் பூட்டா சிங் சொன்னதைத் தொடர்ந்து நான் டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த ராஜா விஜய் கரணைத் தொடர்பு கொண்டு அப்படி எதுவும் நடைபெறவுள்ளதா என்று கேட்டேன். அவரிடமும் அப்படி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் உள்துறை அமைச்சர் சொன்ன பிறகு அதை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. இதையடுத்து எனது வீட்டிலேயே உடனடியாக ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். அதில், தலைமைச் செயலாளர் விஜய் கபூர், போலீஸ் கமிஷனர், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஐபி மற்றும் உள்துறை அமைச்சக் உயர் அதிகாரிகளையும் வரவழைத்திருந்தேன். பூட்டாசிங் என்னிடம் சொன்னது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் பூட்டாசிங் சொல்வதில் உண்மை எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று அனைவருமே கூறினர். மேலும் உடனடியாக பெருமளவில் மக்களைத் திரட்டுவதும் முடியாத காரியம் என்றும் அவர்கள் கூறினர். அப்படி ஒருவேளை திட்டமிடப்பட்டிருந்தால் அது நிச்சயம் எப்படியும் தகவல் கசிந்திருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறும், பூட்டா சிங் கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்பதை பிரதமருடமும், பூட்டாசிங்கிடமும் தெளிவுபடுத்துமாறும் அனைவரும் என்னிடம் கூறினர். இதுதான் நடந்தது. ஆனால் பாஜகவின் மதன்லால் குரானா, பூட்டாசிங் டெல்லிக்குள் ராணுவத்தை வரவழைக்க முயற்சித்தது போலவும், எனது முயற்சியால் அது தோல்வி அடைந்ததாகவும் கூறியுள்ளார். அது தவறு.

ரொமேஷ் பண்டாரி இப்படிக் கூறலாம். ஆனால் உள்துறை அமைச்சராக இருந்த பூட்டாசிங் உண்மையை மறைக்க முடியாது. கற்பனையான ஒரு செய்தியைக் காரணம் காட்டி டெல்லிக்குள் ராணுவத்தை வரவழைக்க பூட்டாசிங் முயன்றார் என்பதை ரொமேஷ் பண்டாரியின் சுயசரிதையே மறைமுகமாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது…

0 Responses to 1989ம் ஆண்டிலேயே தவறாகப் பயன்படுத்த பார்த்தது காங்.- அத்வானி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com