கடந்த 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகளாக கருதப்படும் ஐவர் எதிர்வரும் மே 5ம் திகதி அமெரிக்க நீதிமன்றின் முன் நிறுத்தப்பட இருக்கிறார்கள். இந்த ஐவரும் தற்போது கியூபாவில் உள்ள குவான்ரநோமா சிறைக் கொட்டடியில் சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்கள்.
இவர்கள் மீது 1. பயங்கரவாதம் 2. விமானக்கடத்தல் 3. கொலைகளுக்கு உடந்தை 4. உடமைகளின் சேதம் 5. பேரழிவுக்கு திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இவர்கள் நீதிமன்றில் மே மாதம் ஆஜர்படுத்தப்பட்டாலும் வரும் நவம்பர் 6ம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு பின்னரே இந்த வழக்கு சூடு பிடிக்கும்.
அதேவேளை அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதப்பட்ட நிறவாத படுகொலை சந்தேக நபர் திடீரென தலைமறைவாகிவிட்டார். இவர் எல்லோருக்கும் டிமிக்கிவிட்டு, கிறுகி ஓடியதால் இந்த வழக்கு ஸ்தம்பிதமடைந்துள்ளது. கடந்த மாசி மாதம் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் 17 வயதுடைய ராவோன் மாட்டின் என்ற கறுப்பின இளைஞனை வாயிற்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த யோர்ஜ் ஸிம்மார்மான் என்ற வெள்ளையின ஊழியர் சுட்டுக் கொன்றிருந்தார். இந்தக் கொலையை தாம் தற்பாதுகாப்பிற்காக செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இது நிறவாதக் கொலை என்று கூறிய கறுப்பின மக்கள் பலத்த ஆர்பாட்டங்களை செய்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பெரும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் துயரமான நிகழ்வு என்று குறிப்பிட்ட அவர் விசாரணைகளை மேற்கொள்ளும்படி கூறியிருந்தார்.
இந்த விவகாரம் கறுப்பின அதிபர் தன்னுடைய நிறத்தைச் சேர்ந்த மக்களுக்காக பாரபட்சம் காட்டுகிறார் என்ற உணர்வலையை வெள்ளையரிடையே ஏற்படுத்துவதாயிருந்தது. காவலாளியை தண்டித்தால் வெள்ளையரின் வாக்குகள் விழாது, தண்டிக்காமல் விட்டால் கறுப்பரின் வாக்குகள் விழாது. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம் என்ற இக்கட்டான நிலை தோன்றியது. இந்த விடையில்லா சிக்கலுக்கு விடை தருவதுபோல சந்தேக நபர் நிலத்திற்கு அடியில் மறைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வரும் நவம்பர் வரை இந்த விவகாரம் சூடுபிடிக்காது மந்தமடைந்துவிடும். தப்பியோடியவர் நவம்பரின் பின் பிடிபட்டு உளவியல் விசாரணைக்கு உட்பட்டு, உண்மைகள் வர நாளாகலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. ஒபாமாவை ஆட்சிக்கு கொண்டுவந்த அமெரிக்கக் கொள்கை வகுப்பு அவரை அடுத்த தடவையும் ஆட்சியில் வைத்திருக்கும் என்பதையே அமெரிக்க அரசியலின் தடகள நிகழ்வுகள் உணர்த்துகின்றன. மறுபுறம் ஒக்கலகாமா ருலுயா நகரத்தில் மூன்று கறுப்பர்களை கொன்று மேலும் இருவரை காயப்படுத்திய குற்றத்தில் கைதான 19 வயது நபர் மூவரை சுட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றய காயம் பட்ட இருவரையும் சுட்டதில் 32 வயது நபர் சேர்ந்தியங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் விட்டேனாபார் என்று ஒபாமாவுடன் போட்டியிட றிப்பப்ளிக்கன் வேட்பாளர்கள் மூவர் மோதிக்கொண்டிருக்கிறார்கள். போட்டியாளரை தெரிவு செய்ய மொத்தம் 2286 வாக்குப் புள்ளிகள் உள்ளன. இவற்றில் 1144 புள்ளிகள் எடுத்தவரே றிப்பப்ளிக்கன் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளராக நிற்க முடியும். இதுவரை நடந்த வாக்களிப்புக்களில் மிற் றொம்னி 651 புள்ளிகளும், நியுற் ஜிங்கிறிற் 138 புள்ளிகளும் றொன் போவுல் 79 புள்ளிகளும் பெற்றுள்ளனர். இவர்களில் மிற் றொம்னிக்கே அதிக வாய்ப்பு தெரிகிறது. இதேவேளை நேற்று முன்தினம் புளோரிடாவில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கள் அவர் மெல்ல மெல்ல பெரும் முதலாளிகளின் பக்கம் சரிவதைக் காட்டுகிறது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பணக்காரர் வாரன் பஃபேயின் கருத்துக்களை அடியொற்றி அவருடைய பொருளியல் கருத்துக்கள் வெளி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்விதமிருக்க கடந்த ஆண்டு யூலை மாதம் 77 பேரை கொலை செய்த நோர்வே நாட்டு மன நோயாளியான ஆனர் பிகார்ஸ் பிறீவிக் உளவியல் நோயாளி அல்ல, அவர் குற்றத்தில் இருந்து தப்ப முடியாது. என்ற புதிய ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. முன்னர் வெளியான அறிக்கையின்படி இவர் ஸ்கிசோபன் என்ற உளவியல் நோய்வாய்ப்பட்டவர் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் தண்டனையில் இருந்து தப்பும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் இதை நோஸ்க் மக்கள் அறவே விரும்பவில்லை, இந்த நிலையில் 300 பக்கங்களில் வெளியான புதிய ஆய்வறிக்கையால் இவர் 77 படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று உயிருள்ளவரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்சில் ஏழு பேரைக் கொன்ற கொலையாளி முகமட் மராச் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்த விவகாரங்களில் மெல்லிய மாற்றம் தெரிகிறது. சகட்டு மேனிக்கு மக்களை கொன்றவர் பின் பைத்தியமென தப்பித்தால் பல பைத்தியங்கள் உருவாக அது வழிசமைக்கும். எப்படி ஒரு அல் குவைடா கொலையாளியை பைத்தியமென வைத்தியம் செய்வதில்லையோ அதே நிலைப்பாடே இவருக்கும் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
0 Responses to 2001 செப் 11 தாக்குதல் சந்தேக நபர்கள் நீதிமன்றில்