Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர்வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள Assuring Destruction Forever: Nuclear Modernisation Around the World’ என்ற 150 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அணு ஆயுத போட்டியில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 12,500 கோடி வரை அணு ஆயுத ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆயுத தயாரிப்புக்காக பாகிஸ்தான் செலவிட்டு வருகிறது.

அணு ஆயுத தயாரிப்புக்கான புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பது, அதை சுத்திகரிப்பது, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் குறைந்த தூர, நெடுந்தூர ஏவுகணைகளைத் தயாரிப்பது ஆகிய பணிகளில் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது.

புளுட்டோனிய தயாரிப்புக்கான ஆராய்ச்சி மையங்களை அதிகளவில் உருவாக்கி வருவதோடு, அதை ஏந்திச் செல்ல திட எரிபொருளால் இயங்கும் ஏவுகணைத் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இப்போதைய நிலவரப்படி பாகிஸ்தானிடம் 90 முதல் 110 அணு குண்டுகள் வரை இருக்கலாம். மேலும் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் அதீத அளவில் சுத்திகரிக்கப்பட்ட யுரேனியம் (Highly enriched uranium-HEU) மட்டும் பாகிஸ்தானிடம் 2,750 கிலோ உள்ளது. இது தவிர ஆண்டுதோறு சுமார் 150 கிலோ அளவுக்கு யுரேனியத்தை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது (யுரேனியத்தை புளுட்டோனியமாக மாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது).

இதுவரை பாகிஸ்தான் 140 கிலோ புளுட்டோனியத்தைத் தயாரித்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

சீனாவுக்கு எதிராக ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை அமெரிக்கா பலப்படுத்தி வருவதை பாகிஸ்தான் தனது ஆதாயத்துக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா நெருக்கத்தைக் காரணமாக வைத்து சீனாவின் ராணுவ உதவிகளை பாகிஸ்தான் அதிகமாக பெற ஆரம்பித்துள்ளது.

வாகனங்களில் ஏற்றிச் சென்று ஏவும் திறன் கொண்ட குறைந்த தூர, நெடுந்தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் அதிகளவில் உருவாக்கி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அதனிடம் 80 அணு குண்டுகள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. அணு குண்டுகளை விமானம், ஏவுகணை தவிர நீர்மூழ்கிகள், கப்பல்களில் இருந்தும் செலுத்தும் திறனை வளர்ப்பதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to பாகிஸ்தானிடம் 90-110 அணு குண்டுகள்.. இந்தியாவிடம் 80 மட்டுமே!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com