Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றிகரமாக மார்ச் 22-இல் நிறைவேற்றப்பட்டது. நீதிக்குக் கிடைத்த வெற்றியாகவே இதனை ஒவ்வொருவரும் கருதினாலும், இனிவரும் காலங்கள்தான் முக்கியமானதாக இருக்கப்போகிறது.

மேற்கத்தைய நாடுகள் சமர்ப்பித்து வெற்றியடையச் செய்த குறித்த பிரேரணை வெறும் எச்சரிக்கையுடன் நின்றுவிடாமல், தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதுடன் போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரவேண்டுமென்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கை.

இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீது சில மணிநேர விவாதங்களுக்குப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்படி 47 உறுப்பு நாடுகளில் பிரேரணைக்கு எதிராக 15 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து வாக்களித்தன. எட்டுநாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 24 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளாவன: ரஷ்யா, சீனா,கியூபா,பங்களாதேசம், மாலைதீவு கொங்கோ, ஈக்குவடோர், இந்தோனேசியா, குவைத், மொரிட்டானியா,பிலிப்பைன்ஸ்,கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து மற்றும் உகண்டா. இந்த நாடுகள் இப்பிரேரணையை முழுமையாக நிராகரித்தன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரையே இலங்கை அரசு செய்ததாகவும், அவ் அரசிற்கு கால அவகாசம் அளித்தால் நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை அது பெற்றுத்தரும் என்று வாதிட்டார்கள்.

அங்கோலா, பொட்சுவானா, புர்கினா பாகோ, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல், டிஜிபோட்டி ஆகிய எட்டு நாடுகளும் இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தைய நாடுகளை பகைக்க விரும்பாதத்தினாலும் இலங்கையின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாததினாலுமே குறித்த நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

மலேசியா உள்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பைச்சம்பாதிக்க விரும்பவில்லை என்பது இன்னொரு காரணம்.

இப் பிரேரணையின் வெற்றி என்பது இரண்டுபட்டுக் கிடக்கும் இரு முக்கிய துருவங்களாக விளங்கும் நாடுகளுக்கு இடையிலானதாக மட்டும் பார்க்கப்படாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் வகையிலேயே செயற்பட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் பேரவா.

ஒருகாலத்தில் அமெரிக்காவுடன் நேரடியாகப் போட்டியிட்ட சோவியத் யூனியன், பிளவுபட்ட பின்னர் சீனாவுடன் இணைந்தே அமெரிக்காவிற்கு எதிராக பல செயற்பாடுகளை உலக அரங்கில் செய்து வருகிறதுரஷ்யா.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டுமென்பதே ரஷ்யா மற்றும் சீனாவின் ஒருமித்த கருத்து.

ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தமது ஆதிக்கத்தை உலகஅரங்கில் நிலை நிறுத்த வேண்டுமென்பதற்காகவேதான் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராகவாக்களித்தார்களே தவிர இலங்கை மீது கரிசனை கொண்டு செயற்படவில்லை என்பதனை சிங்களஆதிக்க சக்திகள் உணர வேண்டும்.

சிங்களத்தின் கொக்கரிப்பு

தாம் தோல்வியுறப் போகிறோம் என்பதனை இறுதி நாட்களில் நன்கே உணர்ந்தது இலங்கை அரச தரப்பினர். இப் பிரேரணையை எப்படியேனும் கொண்டுவருவதனூடாக சீனா போன்ற நாடுகளின் கொட்டத்தை அடக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் செயற்பட்டது அமெரிக்கா. நூற்றுக்கும் மேற்பட்ட இராஜதந்திரிகளை களம் இறக்கியது அமெரிக்க அரசு. வாழ்வா, சாவா என்கிற பாணியிலேயே அமெரிக்கா இதனை செய்தது.

பிரேரணைக்கு வாக்களிக்காமல் புறக்கணித்த குறித்த எட்டு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால்கூட இப்பிரேரணையை தோல்வியுறச் செய்து இருக்க முடியாது. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகள் மற்றும் வாக்களிப்பை புறக்கணித்த 8 நாடுகள் இணைந்தால்கூட மொத்தம் 23 நாடுகளே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும்.

அது மட்டுமல்லாமல், வாக்களிப்பைப் புறக்கணித்த மலேசியா நிச்சயம் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஆக, இப்பிரேரணையை எந்த சக்தியினாலும் தோற்கடித்திருக்க இயலாது.

இலங்கைக்கு எதிரான பிரேரணையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முதல் நாள் இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா மனிதஉரிமை பேரவையில் உரையாற்றுகையில் கூறியதாவது:

“பயங்கரவாதத்தை நாம் ஒழித்தது போல் ஐக்கியமான செயற்பாட்டின் மூலம் சமத்துவம், கௌரவம், நீதி சகல இலங்கை மக்களையும் மதித்தல் தொடர்பான எமது முயற்சிகள் உத்தரவாதப்படுத்தப்படும். எமது பொறுப்புக்கள் பற்றி எவரும் எமக்கு நினைவூட்டத் தேவையில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இந்தப் பிரேரணை ஏற்கத்தக்கதல்ல. சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை நாட்டின் சுதந்திரம் இறைமை தொடர்பாக சந்தேகத்தை உருவாக்குகிறது.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

நாட்டின் உள்ளூர் நீதித்துறையில் தலையிடாமை தொடர்பான கோட்பாட்டையும் தவறாக அது எடைபோடுகிறது. இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக சரியாக ஆராய்ந்து ஏற்கனவே ஆரம்பித்துள்ள நடைமுறைகளை மேற்கொள்ள எமது மக்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக நாம் பேரவைக்குகடந்த காலத்தைப் போன்று தெரிவிப்போம். இலங்கையின் நிலைவரத்தைப் பொறுத்தவரை உள்ளக பொறிமுறை அறிக்கையை சமர்ப்பிப்பதில் மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன. இக்கட்டத்தில் இந்த உள்ளக பொறிமுறையின் சகல அம்சங்களும் தொடர்பாக முன்கூட்டியே தீர்ப்பு மேற்கொள்வது சரியானதா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் இணக்கப்பாட்டை மேற்கொள்ளவும், இந்த நடைமுறையைத் தொடரவும் எமக்கு காலமும், இடமும் வழங்கப்படக்கூடாதா? நாம் வரலாற்றுப் பெருமைகளை கொண்ட நாட்டவர்கள். எமது மரபுரிமைகளும், பெறுமானமும் மற்ற நாடுகளைப் போன்றதாகும். சர்வதேச சமூகத்தில் உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் எமது பொறுப்புக்களை ஏற்கிறோம். நிலையான சமாதானம், இணக்கப்பாடு நாட்டில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்தல் போன்றவை தொடர்பாக நாம் அவதானமாக இருக்கிறோம். ஸ்திரமற்ற தன்மை, வன்முறைகள் காரணமாக முப்பது வருடங்களுக்கு பின்னர் நாம் சமாதானத்தையும், ஸ்திரப்பாட்டையும் தற்போது பெற்றுள்ளோம். எமது தெளிவான முன்னேற்றத்துக்கு எமக்குக் காலம் தேவை. குறுகிய மூன்று ஆண்டுகளுக்கு நாம் இதனை அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றிலிருந்து நிச்சயமாக ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது அதாவது இலங்கை அரசு தோல்வியைச் சந்திக்கப் போகிறது என்பது மட்டும் அமைச்சரின் பேச்சிலிருந்து உறுதியானது. அனுதாபத்தைப் பெற்றாவது அமெரிக்காவிற்கு ஆதரவான நாடுகளின் ஆதரவைப் பெற்று பிரேரணையைத் தோல்வியடையச் செய்யலாம் என்று மனப்பால் குடித்தது இலங்கை.

பிரேரணை இலங்கைக்கு எதிராக அமைந்தவுடன், மிகுந்த கவலையுடன் நாட்டை சென்றடைந்த இலங்கையின் குழுவினர் ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்கள். சிங்களத் தீவிரவாதப் போக்குடைய கட்சிகள் மற்றும் பௌத்த துறவிகளை எப்படியேனும் சமாதானப்படுத்தியே ஆக வேண்டுமென்கிற வகையில் இலங்கை அரசு பல செயற்பாடுகளைச் செய்தது.

பிரதம மந்திரியின் தலைமையில் நாடாளுமன்றத்தின் முன்னாள் போராட்டம், அமெரிக்கப் பொருட்களை தடை செய்யக் கோரிப் போராட்டம், மேற்கத்தைய நாடுகளைக் கண்டித்து அறிக்கைகளென பலவிதமான போராட்டங்களை முடுக்கிவிட்டது சிங்களம்.

பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது,

பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவிற்குக்கொண்டு வந்த நிலையில், நிரந்தரமான சமாதான சூழ்நிலையை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூன்று தசாப்த காலமாக இந்த நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் வேளையிலேயே நாட்டுக்கு எதிரான அழுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

நாம் 2005-ஆம் ஆண்டு இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ வேறு எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்குமாறே கேட்டனர். அதை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல் வெற்றிகொள்ளப்பட்ட யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மக்களாகிய எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாத கௌரவம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும் இனங்களும் அவர்களின் வழிபாடுகள், கலாசார பண்பாடுகளை சுதந்திரமாக அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடிந்துள்ளது.

இவ்வளவுகாலம் வடக்கிற்குப் போகாதவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா பிரேரணையை முன்வைத்த பின்னர் வடக்கிற்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் விசமத்தனமாகப் பேசுகின்றனர். வடக்கில் அரசாங்கம் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை என அங்கிருந்து குரல் எழுப்புகின்றனர். சர்வதேச தமிழர் அமைப்புக்கள், புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்காகவே குறுகிய நோக்குடன் இவர்கள் செயற்பட்டனர்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள் பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்நாடுகள் பாரிய அழுத்தங்கள் காரணமாகவே வாக்களிக்காமல் விட்டன. எமக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் கொடிகளை உயர்த்திக் கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அவர்களுக்குப் பின்னர் புரியும். இப்போது புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே எமது தோல்வியில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும். இது சுயாதீனமான நாடு. இங்கு அநாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது, என்றார் மகிந்த ராஜபக்ச.

ஜனாதிபதியின் பேச்சில் மிகுந்த விரக்தி தெரிகிறது. பெரும் பணச்செலவில் திருப்பிவிடப்பட்ட ஜெனீவா மீதான இராஜதந்திரக் களம் தோல்வியில் முடிந்தமை இலங்கை அரசிற்கு பலத்த பேரதிர்ச்சியே. யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள இந்நிலையில், தமிழ்மக்கள் இன்னும் சொல்லொணாத் துயரையே அனுபவிக்கிறார்கள். திருட்டு, கப்பம் கோருதல்,வெள்ளைவான் கடத்தல், கொலை, கற்பழிப்பு என போர்க் காலத்தில் இடம்பெற்ற அத்தனை நிகழ்வுகளும் அன்றாடம் தமிழர் பகுதிகளில் இடம்பெற்று வருகிறது.

போர்க் காலத்தில் இடம்பெறாத இன்னும் பல நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகிறது. குறிப்பாக தமிழர்களின் நிலங்களை பறித்தல், சிங்கள மற்றும் தமிழ் ஆயுததாரிகளை அனுப்பி தமிழ் மக்களை அடிபணிய வைத்து பல்வேறு அராஜகங்களை செய்தல், இந்து ஆலயங்களை இடித்துவிட்டு பௌத்த கோயில்களை கட்டுதல் என்று பலவிதமான இனவழிப்பு நடவடிக்கைகளை சிங்கள அரசு செய்துவருகிறது.

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசின் நிலைப்பாட்டை விளக்கி இலங்கையின் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை மூத்த அமைச்சர்குணசேகர தாக்கல் செய்தார். ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தெரிந்தோ தெரியாமலோ,அரசு எடுத்து வரும் அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை சீர்குலைக்கும் தீவிரவாதிகளின் திட்டங்களுக்கு துணைபோவதாக இருக்கிறது என்று கூறிய அமைச்சர், நியாயமற்ற, தேவையற்ற வகையில் இலங்கையின் உள்விவகாரங்களில் சில நாடுகள் தலையிடுவதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் முகமாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கையின் மூத்த அமைச்சர் மேர்வின் சில்வா, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களின் கைகால்களை உடைப்பேன் என்று எச்சரித்தார். சுனந்த தேசப்பிரிய, நிமல்கா பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லி அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.

மனித உரிமை விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் குரல்கொடுத்திருந்த பத்திரிகையாளர் பொத்தல ஜயந்தவை இலங்கையை விட்டு தானே விரட்டியடித்ததாகவும் மேர்வின் சில்வா கூறினார்.

இப்படிபட்ட அமைச்சர்களை வைத்துகொண்டு செயற்படும் மகிந்த ராஜபக்சவின் அராஜகம் எந்தளவுக்கு அத்துமீறிப் போய்க் கொண்டுள்ளது என்பதனை இவருடைய கூற்றுக்களே போதுமான ஆதாரங்களாக உள்ளன. தமிழர் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை எழுந்துவிட்டால் சிங்களத் தலைமைகள் கொக்கரிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது அனைவரும் தெரிந்த விடயமே.

தர்மமே வெல்லும்

இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மையும் உறுதிசெய்யப்பட வேண்டுமென மனித உரிமை சபை கோரியுள்ளது.

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முறையான அமுலாக்கத் திட்டம் இலங்கை அரசிடம் இல்லை என்ற அடிப்படையிலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்காத போர்க்காலச் சம்பவங்களுக்கான போறுப்பேற்கும் தன்மை குறித்த விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்கிற பிரேரணையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது மனித உரிமை சபை.

இந்தியா இலங்கைக்கே ஆதரவளிக்கும் என்கிற நிலையே இருந்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்த அழுத்தங்களின் பின்னர்தான் இந்தியாவின் பிரதம மந்திரி மன்மோகன் சிங்க் நாடாளுமன்றத்தில் ஒரு அறிவிப்பைச் செய்தார். அதாவது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரவளிப்பதாகக் கூறினார் சிங்க். குறித்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமை சபையில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்.

இந்தியப் பிரதிநிதி பேசியதாவது, இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்கிறது. இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டு வருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாய் இந்தியா நம்புகிறது. 13-ஆவது அரசியல் சாசன சீர்திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்டும் இலங்கையில் அதிகாரங்கங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி இலங்கை நடைபோட வேண்டும் என்றும் பரந்துபட்ட கலந்துரையாடலுடன் அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்கவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. செய்த காரியத்துக்கு ஆட்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் தனக்கு இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்றும் இந்தியா கோருவதாக கூறியுள்ளார் குறித்த பிரதிநிதி.

தர்மமே வெல்லும் என்பதை இலங்கை இன்னும் உணராமல் இருப்பது வருத்தத்திற்குரியதே. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகள் இலங்கையின் மீது அன்பும் பாசமும் கொண்டு வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்களித்ததற்கு பல காரணங்கள் உண்டு.

வாக்களித்துள்ள நாடுகள் பல மக்கள் மீது மனித உரிமை மீறல் சம்பவங்களைச் செய்தன. இன்னும் செய்தே வருகின்றன. கொங்கோ நாட்டின் முன்னாள் இராணுவத் தலைவராக இருந்த “தாமஸ்லுபாங்கா தியிலோ”வை சமீபத்தில் தான் சர்வதேச நீதிமன்றம் போர் குற்றம் புரிந்த குற்றவாளியென்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. உகண்டா போன்ற நாடுகள் சீனாவின் பொருளாதாரத் தயவில் இயங்குகின்றன. சீனாவின் கோரிக்கையை உகண்டா போன்ற நாடுகளினால் அசட்டை செய்யமுடியாது.

சீனா மற்றும் ரஷ்யா தமது சொந்த நலங்களுக்கு அமைவாகவே உலக அரங்கில் செயலாற்றுகின்றன. அமெரிக்காவை எப்படியேனும் பலவீனப்படுத்தி உலகின் முதலாவது போலீஸ்காரர்களாக தம்மை உருவாக்குவதே இந்நாடுகளின் திட்டம்.

1991-ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட சோவியத் யூனியனின் பிளவுக்குப் பின்னர் ரஷ்யா என்கிற நாடு பலவீனமானதாக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவை எப்படியேனும் அடக்க வேண்டுமென்பதே ரஷ்யாவின் பலகாலத் திட்டம். தன்னால் மட்டும் இதனைச்செய்ய முடியாது என்பதை நன்கே உணர்ந்த ரஷ்யா, சீனாவுடன் தனக்கு இருக்கும் நட்புறவை பயன்படுத்தி அமெரிக்காவை பலவீனப்படுத்துவதே திட்டம்.

மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை இலங்கையில் இருக்கும் முஸ்லிம் தலைவர்களின் அழுத்தங்களே காரணம். இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களே. ஈழத்திற்கான போராட்டம் ஆரம்பித்த பின்னர் குறுகிய காலம் தமிழ்ப் போராளி அமைப்புக்களுடன் செயற்பட்டு வந்தார்கள் முஸ்லிம் இளைஞர்கள். தமது சொந்த நலன்களுக்காக சிங்கள இராணுவத்திற்கு துப்பச் சொல்லும் உளவாளிகளாக மாறினார்கள் இவர்கள்.

தமிழ்ப் போராளிக் குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களை தமது அமைப்புக்களிலிருந்து விலக்கி விட்டார்கள். அதன் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் சிங்கள அரச மட்டத்தில் தலைதூக்கியது. இவர்களை நன்கே பாவித்தார்கள் மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள். இவர்களை வைத்தே முஸ்லிம் நாடுகளை தமக்கு ஆதரவான நிலையை உருவாக்கிக் கொண்டன சிங்கள அரசுகள். ஆக, சிங்கள அரசிற்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் வாக்களித்தமை ஆச்சரியமான விடயம் இல்லை.

இலங்கைக்கு வாக்களித்துள்ள பெரும்பான்மையான நாடுகள் நீதிக்கு முரணாக செயற்படும் நாடுகளே. இலங்கைக்கு வரப்போகும் நிலை தமக்கும் வந்துவிடுமோ என்கிற அச்சம் இந்நாடுகளுக்கும் இருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட குறித்த பிரேரணையின் வெற்றி மார்ச் 22-ஆம் தேதி இடம்பெற்ற்ற வாக்களிப்புடன் நின்றுவிடக்கூடாது.

யார் வெற்றிவாகை சூடினார்கள் என்பது முக்கியமல்ல. பாதிக்கப்பட்டமக்களுக்கு நிலையான நீதி கிடைப்பதே முக்கியம்.

இதனை செயலாக்கம் பெற வேண்டுமாயின் உலகத்தமிழர்கள் விழிப்பாக இருந்து செயலாற்ற வேண்டும். தமிழகத்தின் ஒருமித்த குரலே இந்தியாவின் நிலையை மாற்றியது என்று கூறுவது உண்மையேயானால், இந்தியாவின் நேரடிப் பங்களிப்புடன் தமிழீழத்தை பெற வேண்டிய பணியினையும் ஒட்டுமொத்த தமிழகத் தமிழர்களின் தலைமையில் உலகத்தமிழர்கள் செய்தால் வெற்றி நிச்சயம்.

0 Responses to வெற்றியடைந்தது யார் என்பது முக்கியமல்ல! மக்களுக்கு நீதி கிடைப்பதே முக்கியம்!! அனலை நிதிஸ் ச. குமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com