பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பினரை இணைத்துக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்வாறான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் எப்போதும் ஆதரவளிக்காது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடர்வதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பேச்சில் மூன்றாம் தரப்பை அரசு ஒரு போதும் ஏற்காது!- ராஜீவ விஜேசிங்க திட்டவட்டம்
பேச்சுக்களின் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு இலங்கையின் பிரச்சினை தொடர்பில் தெரியாது. உள் நாட்டிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அரச தரப்புப் பேச்சுக் குழுவில் அங்கம் வகிப்பவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரச தரப்புடனான பேச்சின் போது மூன்றாந் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கருத்து கூறியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சொல்வதைப் போன்று உள்நாட்டுப் பிரச்சினையை சகல கட்சிகளுடனும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு எமது பிரச்சினைகள் ஒழுங்காகத் தெரியாது.
எமது நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாட்டைப் பார்த்த பின்னர் மக்கள் ஐக்கியமாக இருப்பதாகச் சொல்கின்றனர். நோர்வே அரசுகூட இப்போது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்கின்றது.
எனவே எங்களது பேச்சுக்கு மூன்றாந் தரப்பு மத்தியஸ்தம் என்பது பொருத்தமானதாக இருக்காது. மேலும் அரசினுள்ளும் இருக்கும் சிங்கள கடும்போக்காளர்களால் அரசுக்கு அழுத்தம் இருப்பதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழுத்தம் இருக்கலாம்.
அந்த அழுத்தம் காரணமாகவே பேச்சுக்களில் மூன்றாந் தரப்பு மத்தியஸ்தத்தை அவர்கள் கோரியிருக்கலாம். அதனை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பினரை இணைத்துக் கொள்ள முடியாது!
பதிந்தவர்:
தம்பியன்
08 April 2012
0 Responses to பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பினரை இணைத்துக் கொள்ள முடியாது!