வீதிகளில் போக்குவரத்து தடைப்படுவது, காலை நேரப் போக்குவரத்துக்கள் பாரிய சிக்கலாவது, நிலத்தடி ரயிலில் மக்கள் பிதுங்கி வழிவது போன்றன இன்றைய பெரு நகரக்காட்சிகளாகும். இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி மக்கள் வீடுகளில் இருந்தே தமது தொழிற்கடமைகளை செய்வதுதான். இணையமயமாகி வரும் எதிர்கால உலகத்தில் இதை சாத்தியமாக்குவது சிரமமான பணியல்ல. இதற்காக மைக்கிரோ சொப்ற் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் சேவைத்துறையில் உள்ளவர்களில் எத்தனை வீதமானவர்கள் வேலைத்தலத்திற்கு போகாமல் வீடுகளில் இருந்து தமது தொழில் நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதை கண்டறிய இந்த ஆய்வு நடாத்தப்பட்டது. டென்மார்க்கில் சுமார் 77 வீதமானவர்கள் வீடுகளில் இருந்து இணையம் மூலமாக தமது காரியங்களை ஆற்றுகிறார்கள் என்று தெரிவிக்கிறது. அதேவேளை இங்கிலாந்து, பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ளவர்களில் ஐம்பது வீதமானவர்களே வீடுகளில் இருந்து தமது கடமைகளை செய்கிறார்கள். நகரங்களின் போக்குவரத்து நெருக்கடி, சூழல் அசுத்தமாகல் போன்ற சிக்கல்களை வெற்றிகரமாக தீர்க்க வேண்டுமானால் வீடுகளை வேலைத்தலமாக மாற்ற வேண்டுமென அது கூறுகிறது.
மேலும் எதிர்கால உலகில் மிகப்பெரிய வேலைத்தலமாக கூகுள் மாற்றமடைய இருக்கிறது. அனைத்துக் காரியங்களையும், உலகம் முழுவதும் ஒருங்கிணைக்கும் மையமாக கூகுளே மாற இருக்கிறது. இப்போது வங்குரோத்தடையும் ஊழல் மோசடி நிறைந்த வங்கிகளை மக்கள் தூக்கி வீசுவார்கள். வங்கித் தொழிற்பாடுகளும் கூகுளுக்குள் நுழைந்துவிடும் என்று எம்.பி.ஏ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேசம் முழுவதும் கூகுளுக்குள் வந்துவிட்டால் சீனா, இந்தியா போன்ற நாடுகள் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடிய கலாச்சாரமும் முடிவுக்கு வந்து, பொருளாதாரம் உலகம் முழுவதும் வியாபித்துவிடும். அதனால்தான் இந்த நாடுகள் கூகுள் மீது பலவித தடைகளை விதிப்பதையும் காண முடிகிறது.
இது இவ்விதமிருக்க டென்மார்க் வீபோ நகரசபையில் சில பாடசாலைகள் சிமாற் கைத்தொலைபேசிகளை தமது பாடசாலைக் கற்கைகளுக்குள் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன. மாணவருக்கான பாடங்கள், அவர்களுடைய பதில்கள் என்று அனைத்தும் கைத்தொலைபேசி பரிமாற்றங்களால் நடைபெறவுள்ளன. இந்த முயற்சி போரடிக்கும் பாடசாலைக் கல்வியால் நொந்து நூலாகும் மாணவருக்கு புதிய பாதையைக் காட்ட வழியிருக்கிறது.
ஒரு மனிதன் ஒரு நாளில் இந்த நேரம்தான் வேலை செய்ய வேண்டுமென்ற திட்டமிட்ட வரையறைகள் உடைகின்றன. அவன் வீட்டில் உறங்கலாம் அல்லது விழித்திருக்கலாம் அது அவனது இஷ்டம், ஆனால் தனது பணிகளை அவன் செய்யும் நேரத்தை அவனே தெரிவு செய்து கொள்ள முடியும் என்ற நிலைக்கு புதிய காலம் மலர்கிறது. வெள்ளை ஆடை, வெள்ளை உடை அணிந்து அதிகாலை காரியாலயம் போகும் கலாச்சாரம் கணினிகளால் காற்றில் பறக்கப்போகிறது. தற்போது ஐ.போனின் வருகை உலகில் பாகாசுர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதையும் இத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தேகப்பயிற்சி செய்வோர் கூட அதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கோப்பன்கேகன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. வேலையிடத்திலேயே 10 – 20 – 30 செக்கன்கள் என்று நேரத்தை பயன்படுத்தி ஓடலாம். முதலில் 10 செக்கன்கள் நின்றபடியே வேகமாக ஓடி பின் 20 செக்கன்கள் இடை நிலை வேகத்தில் ஓடி இறுதியாக 30 செக்கன்கள் மெதுவாக ஓடினால் அது தேகப்பயிற்சியாகிவிடும். இப்படி ஆங்காங்கு கிடைக்கும் சிறு பொழுதுகளை தேகப்பயிற்சியாக்கினால் இதற்காக ஒதுக்க வேண்டிய நேரத்தில் அரைப்பங்கை மீதம் பிடித்துவிடலாம் என்றும் கூறுகிறது. மேலும் வேலையிடங்களில் மின் தூக்கியை பயன்படுத்தாது படிக்கட்டில் நடப்பதும் ஒரு வருடத்தில் நாலு கிலோ எடையை குறைக்கலாம் என்று இன்னொரு கணிப்பு கூறுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மேற்கண்ட புதிய சிந்தனைகள் இம்மாத மூவ்மன்ற் டேனிஸ் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
0 Responses to விரும்பிய நேரம் வீடுகளில் இருந்தே தொழில் செய்யும் காலம்..