Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகசெய்திகள்

பதிந்தவர்: ஈழப்பிரியா 14 April 2012

01. வடகொரியா செலுத்திய ஏவுகணை இலக்குத் தவறி இருபது துண்டுகளாக சிதறி கடலில் விழுந்தாலும் அந்த நாட்டை மன்னிக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கெனவே வடகொரியாவுக்கு வழங்கவிருந்த உணவுப் பொருட்களை வழங்க முடியாது என்று அமெரிக்கா சற்று முன் அறிவித்துள்ளது. இவற்றை வழங்குவதற்கான யாதொரு ஒப்பந்தங்களிலும் அமெரிக்கா இதுவரை கைச்சாத்திடாத காரணத்தால் உடனடியாக அதை நிறுத்துவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

02. மறுபுறம் வடகொரிய ஏவுகணையின் பகுதிகளை தேடும் பணியில் பத்து தென் கொரிய போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்தப் புகுதிகளை எடுத்து பரிசீலனை செய்வதன் மூலமாக வடகொரியாவின் ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நிலையை அறிய முடியும் என்று கருதுகிறது தென் கொரியா. ஆனால் சர்வதேச நாடுகளின் மதிப்பீட்டின்படி வடகொரியா ஏவுகணை தொழில் நுட்பத்தில் வளர்ச்சி பெறவில்லை என்று தெரிவிக்கிறது.

03. மஞ்சள் கடல் பகுதியில் நடைபெறும் இந்தத் தேடுதலுக்கு அமெரிக்க கடற்படைக் கப்பல்களும் உதவி வழங்கவுள்ளன. அமெரிக்கா, தென் கொரியா மட்டுமல்ல மற்றைய உலக நாடுகளும் வடகொரியா எத்தகைய நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளன. ஆனால் இதனுடைய வெளி வராத இரகசியம் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட ராக்கட்டுக்களின் உபகரணங்கள் வட கொரியாவுக்கு விற்பனையாகியிருக்கிறதா என்பதை கண்டறிவதுதான். ஆனால் வடகொரியாவின் ராக்கட் இராணுவ நோக்கங்களுக்காகவே ஏவப்பட்டுள்ளதை சர்வதேச சமுதாயம் மறுக்கவில்லை.

02. சிரியாவில் யுத்த நிறுத்தம் ஏறத்தாழ முறிவடைந்துவிட்டதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சன்னி முஸ்லீம்கள் அதிகம் வாழும் கோம்ஸ் நகரப்பகுதியில் இன்று அதிகாலையே கிரனைட் தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. இன்று ஐ.நா விடுத்துள்ள அவசர வேண்டுதலில் உடனடியாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை அனுப்பியாக வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் நேற்று வெள்ளி தொழுகைகளை முடித்துக் கொண்டு ஆஸாட்டுக்கு எதிரான ஆர்பாட்டக்காரர் களமிறங்கினார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இத்தருணம் மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

03. மறுபுறம் துருக்கி நோக்கி வரும் அகதிகளை தடுக்க சிரியா பெரும் பிரயத்தனமெடுத்து வருகிறது. அவர்கள் மீது தாக்குதலை நடாத்தி பலரை கொத்தாக கொன்றொழித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இப்போது சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள துருக்கிய அகதி முகாம் மீதும் அடிக்கடி துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறுவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இரண்டு நாட்டுக்கும் இடையே சுமார் 910 கி.மீ நீளமான எல்லைப்பகுதி இருப்பதால் கண்காணிப்பை நாடாத்துவது மிகவும் கடினமானது. ஆகவே நேட்டோ படைகள் இந்த எல்லைப்பகுதியை கண்காணிக்க வேண்டுமென துருக்கி கோரியுள்ளது. நிலமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த ஆஸாட் துருக்கி மீதான தாக்குதலை ஆரம்பித்து உள்நாட்டுப் போரை வெளிநாட்டு போராக மாற்றக்கூடிய அபாயம் இருப்பதை மறுக்க முடியாது.

04. அமெரிக்காவில் 17 வயது இளைஞனை படுகொலை செய்த வெள்ளை நிற வெறியர் யோர்ஜ் சிம்மர்மான் மீது திட்டமிடாத கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதலாவதாக ஒருவரை துப்பாக்கியால் சுடுவதானால் எச்சரிக்கை வெடி தீர்க்கப்பட வேண்டும். மேலும் அடுத்த கட்டமாக காலுக்குக் கீழே சுட வேண்டும். தற்பாதுகாப்புக்காக சுடும் ஒருவர் நேரடியாக படுகொலைக்குள் நுழைய முடியாது. இறந்துபோன கறுப்பின சிறுவன் மிகவும் மோசமான மூர்க்கக் குணமுடைய ஒருவராக இருந்தாலும் கூட, கொலை செய்யும் உரிமை வாயிற் காவலருக்குக் கிடையவே கிடையாது. ஆகவே அமெரிக்க நிறவாதக் கொலையாளி சிம்பர்மான் மீது திட்டமிடாத மனிதப் படுகொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் செய்துள்ள கொலை நிறவாத வெறுப்புக் காரணமாக ஏற்பட்டுள்ளதாக ஆர்பாட்டங்கள் நடந்தது தெரிந்ததே. மேலும் இவர் போலீசாரிடம் அகப்படாது தலைமறைவாக ஓடியதன் மூலம் தனது தவறை தானே வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் படுகொலைக்கு மரணதண்டனை வழங்கப்படும் முறைமை இன்னமும் முடியவடையவில்லை.

05. பகரினில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் ஆட்சிக் கட்டமைப்பு மீதான விமர்சகரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான அல் காவ்யாவின் உயிர் மரணத்தின் விளிம்போடு உராய்ந்து கொண்டிருப்பதாக இன்றய கல்ப் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை உணவு உண்ணாமல் நீராகாரம் மட்டும் அருந்தியபடி வாழும் இவருடைய உண்ணாவிரதம் 65 தினங்களை தொட்டுவிட்டது. இதற்கு மேலும் இவர் தனது போராட்டத்தை தொடர்ந்தால் அதற்கான விலை அவருடைய உயிராகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐ.நா மனித உரிமைச் செயலகம் விடுத்துள்ள வேண்டுதலில் இவர் உடனடியாக டென்மார்க் அனுப்பப்பட வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. டேனிஸ் குடியுரிமை பெற்றுள்ள காரணத்தால் இவருக்கு டென்மார்க்கில் வைத்திய சிகிச்சை வழங்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. மேலும் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரை இராணுவ முகாமில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றியது சர்வதேச குற்றச் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே சட்டச்சரத்தின்படி சிறீலங்காவில் வெள்ளை வானில் கடத்தும் சிவில் நடவடிக்கை மனிதர்களை இராணுவ முகாம் கொண்டு செல்வது சர்வதேச குற்றச் செயல் என்பது ஒப்பிட்டு நோக்க வேண்டியதாகும்.

06. சுமார் 50 மீட்டர் நீளமான எரி கல்லொன்று பூமிக்கு மிக அருகாக வரும் என்று த இன்டிப்பென்டன்ட் தெரிவித்துள்ளது. இந்தக் கல்லுக்கும் பூமிக்கும் இடையே வெறும் 24.000 கி.மீ இடைவெளியே இருக்கும் என்றும் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. 2012 டீ.ஏ.14 என்று பெயரிடப்பட்ட இந்த எரிகல் புவியில் விழுந்தால் இங்கிலாந்து தலை நகர் லண்டன் அளவு பரப்புள்ள பகுதியை பொடிப்பொடியாக்கிவிடும். ஆனால் இதனால் புவிக்கு ஆபத்து வராமலே விலகிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அலைகள்

0 Responses to உலகசெய்திகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com