அறியாத விடலைப்பருவமுடைய இரண்டு இளைஞர்கள் தமது பேஸ்புக்கில் முகமது சித்திரத்தை பிரசுரித்த காரணத்தால் ரூனீசிய அரசு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தகைய செயல்கள் நாட்டின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் முகமது கேலிச்சித்திரம் வரைந்து, அவருடைய தலையில் ஒரு கிரனைட் இருப்பது போல வெளியான யூலன்ட் போஸ்டன் சித்திரங்களை வரைந்தவர்களை அரசு பாதுகாத்து வருகிறது. அதேவேளை பேஸ்புக்கில் போட்ட அப்பாவிகளை கதறக்கதற சிறையில் போடுகிறது ரூனீசியா. இப்படிப் போகிறது நாட்டுக்கு நாடு நடாத்தப்படும் கூத்தாட்டங்கள்.
அதேவேளை தற்போது பஃகரின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேனிஸ் மனித உரிமையாளர் அப்துல்காடி அல் கவாய்யா சிறையில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். டென்மார்க் குடியுரிமை பெற்ற பஃகரின் நாட்டில் பிறந்தவரான மனித உரிமையாளரான அல் கவாய்யா பஃகரின் நாட்டில் உள்ள சன்னி முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தாக குற்றம் சுமத்தப்பட்டு, ஆயுட்கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் சிறையில் நீர் மட்டும் அருந்தி 57 நாட்களாக உயிருக்கு போரடி வருகிறார். மேலும் ஒரு வாரம் கழிந்தால் இவர் மரணித்துவிடுவார் என்று அவருடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இது இவ்விதமிருக்க நேற்று அவருடைய மகள் ஸினப் அல் கவாயா கைதானார். இவர் தந்தைக்காக தானும் உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்துள்ளார். பஃகரினில் உள்ள சன்னி முஸ்லீம் மன்னர் ஒரே குடும்ப அங்கத்தவரை 70 வீதம் உயர் நிர்வாகத்தில் நியமித்து சர்வாதிகார ஆட்சி நடாத்தி வருகிறார். ஏறத்தாழ சிரியா, சிறீலங்கா போல அங்கும் ஒரு குடும்ப ஆட்சியே நடைபெறுவது அவதானிக்கத்தக்கது. டேனிஸ் குடியுரிமை பெற்ற அல் கவாய்யா சியா முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிக்கல் தீர வாய்ப்புக்கள் குறைவு. இவருடைய விவகாரத்தில் டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லி சுவிண்டேல் தலையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரிய கொடுங்கோல் அரசு தனது படைகளை படிப்படியாக திருப்பி அழைக்க தொடங்கியுள்ளதாக கொபி அனான் தெரிவித்துள்ளார். டீரா, இட்லிப், ஸப்டானி நகரங்களில் இருந்து படைகள் நகர ஆரம்பித்துள்ளன. ஆனால் அரபுலீக் இது உண்மைதானா என்பதை இன்னமும் பூரணமாக நம்பவில்லை. அதேவேளை இந்த இடைவெளியை பயன்படுத்தி கடந்த 24 மணி நேரத்தில் 1000 வரையான சிரிய அகதிகள் துருக்கிக்குள் நுழைந்துள்ளனர். சிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற முயன்றால் சுட்டுக் கொல்லும் வேலையை சிரிய படைகள் திட்டமிட்டு, கிரமமாக செய்து வந்ததால் அகதிகள் வெளியேற்றத்தில் பெரும் ஸ்தம்பிதம் ஏற்பட்டிருந்தது. ஒரு தடவை காவற் கடமை ஒன்றில் நின்றபடி தப்பியோட முயன்ற அறுபதுக்கு மேற்பட்ட அகதிகளை துடிக்கத் துடிக்க கொன்றமை தெரிந்ததே.
அலைகள்
0 Responses to முகமது கேலிச்சித்திரத்திற்கு ஏழு வருடங்கள் சிறை